வியாழன், 8 மே, 2014

Chennai ரயில் குண்டுவெடிப்பு விசாரணையில் போலீசார், துப்பு துலக்க முடியாமல், திணறல்

ரயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ள முன் அனுபவம் இல்லாத, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு போலீசார், துப்பு துலக்க முடியாமல், திணறி வருகின்றனர். அதற்கு மாற்றாக, கோவை உள்ளிட்ட, குண்டுவெடிப்பு வழக்குகளில் சாதித்த போலீஸ் அதிகாரிகளை கொண்டு, தனிப்படை அமைக்க எவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், இரட்டை குண்டுகள் வெடித்து, ஏழு நாட்கள் உருண்டோடி விட்டன. இந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும், சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு போலீசார், குண்டுவெடிப்பு நடப்பதற்கு, எட்டு நிமிடங்களுக்கு முன், எஸ் 3 பெட்டியில் இருந்து இறங்கி, ஓட்டம் பிடித்த வழுக்கை தலை ஆசாமி, குண்டு வைத்தவராக இருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவர் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவு காட்சியை வெளியிட்டனர்.பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை, ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த வழுக்கை தலை ஆசாமி பற்றிய தடயங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்; உறவினரை காண, ரயில் நிலையத்தில், ஓட்டம் பிடித்தார் என தெரிய வந்துள்ளது. இதனால், 'உள்ளதும் போச்சே...' என்ற அசூயையில், சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு போலீசார், விசாரணையை வேறொரு கோணத்திற்கு மாற்றியுள்ளனர்.


சாதனை சாத்தியமா
சென்னை, சென்ட்ரலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன், தேசிய புலனாய்வு அமைப்பினர், (என்.ஐ.ஏ.,) தங்களிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்த்தனர்.மேலும், சென்ட்ரல் குண்டுவெடிப்பு பகுதியை ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு படையினர் தான், சென்ட்ரல் குண்டுவெடிப்பு, பாட்னாவில் நிகழ்த்தப்பட்டது போல் இருப்பதை உறுதி செய்தனர்.இதுபோன்ற தகவல்களை சேகரிப்பதில், போதிய அனுபவம் இல்லாததால், தமிழக போலீசார், இரண்டாம் கட்ட நிலையிலேயே இருந்தனர்.ஆனாலும், இந்த வழக்கு தமிழக சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவுக்குமாற்றப்பட்டது.குண்டுவெடிப்பு நிகழ்ந்து, ஏழு நாட்கள் ஆன போதிலும், வீடியோ ஆதாரங்கள் மட்டுமே சிக்கியுள்ளன என, தெரிவித்து வந்தனர். தற்போது அதனாலும் பலன் இல்லை என்றாகி விட்டது.மேலும், இந்த சிறப்பு புலனாய்வு பிரிவில் இடம் பெற்று இருக்கும் சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., மகேஷ்குமார் அகர்வால், ஏற்கனவே சி.பி.ஐ., போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளில் பணியாற்றி இருந்தாலும், குறிப்பிட்டு சொல்லும்படியான வழக்குகளில், அவர் சாதித்தது இல்லை என்றே கூறப்படுகிறது.அதுபோல், எஸ்.பி.,க்கள் ஜெயகவுரி, நாகஜோதி போன்றோர், 'ரெக்கார்டு ஒர்க்'கில் சாதிப்பரே தவிர, புலன்விசாரணை, அவர்களுக்கு புலப்படாது என, கூறப்படுகிறது.இது தவிர, ஏ.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் அளவிலான பிரிவிலும், குண்டுவெடிப்பு வழக்கில் முன் அனுபவம் இல்லாதவர்களே இடம் பெற்றுள்ளனர்.

புதிய படை வருமா
கடந்த, 1998ல், கோவையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில், 58 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, கேரள மாநில கட்சி தலைவர் மதானி, அல் - உம்மா பயங்கரவாதிகள் பாஷா, அன்சாரி உட்பட, 166 பேரை, அப்போதைய சி.பி.சி.ஐ.டி., (எஸ்.ஐ.டி.,) புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.அதில், போலீஸ் உயர்அதிகாரி ஆக இருந்து செயல்பட்டவர் பரம்வீர் சிங். அந்த டீமில், போலீஸ் அதிகாரிகள் தாமரைக்கண்ணன், பொன்.மாணிக்கவேல், ஈஸ்வர மூர்த்தி, சண்முக ராஜேஸ்வரன், செந்தாமரைக் கண்ணன் மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்டோர், இடம் பெற்று இருந்தனர்.அந்த படையை போன்றே, விசாரணையில் தனித்துவம் பெற்ற, திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரிகளை கொண்டு, புதிய படை உருவாக்கப்பட்டால், சென்ட்ரல் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் விளையாட்டு
காவல் துறையில் நடக்கும் அரசியல் விளையாட்டால், திறமையான போலீஸ் அதிகாரிகள், 'டம்மி' பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என, கூறப்படுகிறது. அவர்களை களமிறக்கிவிட்டால், குண்டுவெடிப்பு வழக்கில் துப்பு துலக்கி, மக்களை நிம்மதி அடையச் செய்வர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: