புதன், 7 மே, 2014

தமிழக நதிகளை இணைத்தால் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வருமானம்!

இந்தியாவில் நீர் ஒதுக்கீடு மற்றும் பெறுதல் ஆகியவற்றில் உள்ள வேற்றுமைகளை, தனிநபர் நீர் கிடைப்பு கணக்கீடுகள் உள்ளடக்குவதில்லை என்பதால், நீர் ஆதாரங்களை அளவிட, புதிய அளவுகோல்களை பயன்படுத்த வேண்டும் என, 'யூனிசெப்' மற்றும், 'புட் அண்டு அக்ரிகல்ச்சர் ஆர்கனைசேஷன்' ஆகியவை குறிப்பிடுகின்றன. இந்த வித்தியாசமே நீர் பெறுவது, பயன்படுத்துவது தொடர்பை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது.மோசமான நீர் பற்றாக்குறை பிரச்னைகள், விவசாயம், தொழில்துறைகளில் துவங்கி, வீடுகள் வரை பூசல்களை அதிகரிக்கிறது. நீர் வசதியில்லாத போது, சுகாதார வசதிகளை அமைப்பதிலும் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சில குழுக்களுக்கிடையில் பாதுகாப்பான குடிநீர், சுத்தம் ஆகியவற்றுக்கு வழி இல்லாதபோது, அது பொருளாதார, அரசியல், சமூக சமன்பாட்டு சீர் குலைவுகளையும், பாரபட்சங்களையும் உருவாக்குகிறது.   5000 கோடி வருமானம் என்று சொல்லுவதை விட, தினம் அரசு இவ்வளவு நஷ்டப்பட வேண்டும் இந்த திட்டத்தால் என்று சொல்லிப் பாருங்கள். உடனே இந்த திட்டத்தை அரசியல்வாதிகள் கையில் எடுத்துக்கொள்வார்கள். லாபத்தை விட அரசுக்கு நஷ்டம் அடைய வாய்ப்புகள் என்றால் அந்த திட்டத்திற்கு மௌசு அதிகமாகி விடும் இந்தியாவில். 
எனவே, 2025 மற்றும் 2050ல் தேவைப்படும், தனிநபர் நீர் தேவைக்கான அளவை, உறுதி செய்யக்கூடியதாகவும், விவசாயத்திற்காகவும், நீர்பாசனத்திற்காகவும், தொழில்சாலைகளுக்கும், குடிதண்ணீருக்கும், தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை திட்டத்தையே, நாம் வலுவாக நம்புகிறோம்; பரிந்துரைக்கிறோம். இந்த திட்டமே, நதிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகள் போன்றவற்றை நிரப்பி நீர்ப்பாசன வசதிக்கு உத்தரவாதம் அளிப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியை உத்தரவாதப்படுத்தும் தொழில்துறைக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது.தற்போது நாட்டில், 50 சதவீத வீடுகளில் மட்டுமே முறையான கழிப்பறை, சுகாதார வசதிகள் உள்ளன. எனவே, நாட்டின் ஒட்டுமொத்த நீர்வழித் தடத்தையும் உருவாக்கி, இணைக்க, மாநில அளவிலான நீர்வழித் தடங்களை அமைப்பதற்கான திட்டங்களை, அந்தந்த மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி, பின் அவற்றை இணைக்க வேண்டும்.இத்தகைய நீர்வழிகளை கட்டி, இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முடியுமா என கேள்விகள் எழலாம். இந்த உலகத்தில், நாங்கள் நேரில் கண்ட, ஆராய்ந்து பார்த்த, சில ஆற்றுப்படுகை மற்றும் நீர்வழிச்சாலை மற்றும் மேலாண்மைத் திட்டங்களை உங்கள் முன் உதாரணங்களாக வைக்க விரும்புகிறோம்.


ஓஹியோ அதி- திறன் நீர்வழிச் சாலைகள்



கடந்த, 1775ல், அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டனின் உத்தரவுப்படி, அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர்கள் அணி உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் பிரதான செயல்பாடுகளாக, அதி- திறன் நதிவழி போக்குவரத்தை உருவாக்குவது, நீர் மின்சக்தியை உற்பத்தி செய்வது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இத்திட்டத்தின் கீழ், 400க்கும் மேற்பட்ட பெரிய செயற்கை ஏரிகள், நீர்த் தேக்கங்கள் (படல அமைப்பு கிணறுகள்), 8,500 மைல் நீள நீர்வழிச்சாலைகள், கரைகள், நுாற்றுக்கணக்கான சிறிய அளவிலான வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், 1.12 லட்சம் கோடி கன அடி நீர் தேக்கப்படுகிறது. இவ்வாறே நாங்கள் கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, பிரேசில் நீர்வழி
அமைப்புகளையும் ஆராய்ந்தோம்.கனடாவிலும், அமெரிக்காவிலும் நீர்வழிச் சாலைகள் இந்த இருநாட்டிலும், உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்துக்கான சரக்குப் போக்குவரத்தில் கணிசமான அளவுக்கு நீர்வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்க்க:http://www.britannica.com/EBchecked/topic/91513/Canada/43308/Waterways)


நெதர்லாந்து நீர்வழிகள்



மொத்தம், 6,000 கி.மீ., நீளமுள்ள நீர்வழிகளோடு, ஐரோப்பாவிலேயே விரிவான, மிகவும் அடர்த்தியான, நீர்வழி போக்குவரத்து அமைப்பை உடையது நெதர்லாந்து. நதிகளும் கால்வாய்களுமான இந்த அமைப்பில் சில, போக்குவரத்து வழிகளாகவும், வடிகால் வசதிகளாகவும், பிணைக்கப்பட்டுள்ளன. நாட்டின் எல்லா பகுதிகளிலும், இவை காணப்படுகின்றன. அயர்லாந்து நீர்வழிகள் கடந்த, 20ம் நுாற்றாண்டின் கடைசி, 15 ஆண்டுகளில், பழைய நீர்வழிகளை மீட்டெடுத்ததில் முதலிடம் அயர்லாந்துக்கு தான்.



பிரேசில் நீர்வழிகள்



பிரேசில் நீர்வழிகளின் பயன்பாட்டுத்திறன் மிக அதிகம். என்றாலும், 60 ஆயிரம் கி.மீ., நீளமுள்ள பிரேசில் நீர்வழிகளில், 13 ஆயிரம் கி.மீ., அளவுக்கே, தற்போது பயன்படுத்தப்படுகின்றன. வேளாண், கனிம பொருட்கள் மட்டுமே நீர்வழிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.. அமேசானில், 6,280 கி.மீ., துார நீர்வழியானது, உலகின் மிக வேகமான நீர்வழியாகும். இது, பலநாடுகள் வழியாக செல்கிறது. பிரேசில், பெரு, ஈக்வடார், கொலம்பியாவிலிருந்து அமேசானின் நீர்முகங்கள் மூலமாக நீர் வருகிறது.
(Ref: http://www.wwinn.org/brazil-inland-waterways)


ஜெர்மனியில் மக்தேபர்க் நீர்ப் பாலம்



ஜெர்மனியில் உள்ள மக்தேபர்க் நீர்ப்பாலம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இது 2003 அக்டோபரில் திறக்கப்பட்டது. 918 மீட்டர் உயரமுள்ள இது, உலகின் மிக நீளமான போக்குவரத்து சாத்தியமுள்ள, நீர் வழிச்சாலையாகும்.


தாய்லாந்து



இங்கு, மலையை குடைந்து, ஒரே தட்டில் நேர்வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, எவ்வாறு மலையை குடைந்து சாலை உருவாக்கப்படுகிறதோ, அதைப் போலவே, இந்தியாவின் தேசிய அதி-திறன் நீர்வழிகள், மலைகளை எங்கெல்லாம் சந்திக்கிறதோ, அங்கெல்லாம், 750 அடி கடல் மட்டத்திற்கு மேல், சரிவின்றி குடையப்பட்டு, நீர்வழிச் சாலை அமைக்கப்படும். இந்தியாவில் தற்போது, 4,332 கி.மீ., உள்நாட்டு நீர்வழிகள் உள்ளன. இதை, தேசிய நீர்வழி என, அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. இதில், கங்கை, 2,592 கி.மீ., நீளம் கொண்டது. இதன் மூலம், ஓராண்டுக்கு, 7 கோடி டன் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பழைய சரக்கு போக்குவரத்து முறைகளில் ஒன்று நீர்வழிப் போக்குவரத்து. ஆனால், இது இங்கே பிரபலமாகவில்லை.


இந்தியாவில் எப்படி?


கோவா

நீரேற்றுக் குழாய்கள் மூலமாகவும், புவி ஈர்ப்பு சக்தி மூலமாகவும் இயங்கக் கூடிய வசதிகளைக் கொண்டு, மந்தோவி படுகையில், சுவாரி நதியையும், கலாய் நதியையும் இணைத்திருப்பதாக கோவா முதல்வர் என்னிடம் தெரிவித்தார். தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க இதை உறுதிப்படுத்த வேண்டியிருந்ததாக அவர் கூறினார்.இந்த வகையில் நதிகளை இணைக்க வேண்டும் என, ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குஜராத்



இது, 71 சதவீதம் நீர்ப் பற்றாக்குறை கண்ட மாநிலம். மாநிலத்தில், 29 சதவீத பரப்புள்ள, தெற்கு மற்றும் மத்திய குஜராத், நீர் மிகை பகுதியாக உள்ளதால், நதிகளை இணைக்கும் முயற்சியை, குஜராத் அரசு மேற்கொண்டு, இப்போது முதல் இணைப்புப் பணி முடிந்திருக்கிறது.நர்மதா வெள்ளப் பெருக்கின் போது வழிகிற நீரை, நர்மதா பிரதான வாய்க்கால் ஒன்றின் மூலம் திசை திருப்பி, ஹேரன், ஓர்சாங், கரத், மகி, சைதக், மோகர், வத்ரக், சபர்மதி, காரி, ரூபன், பானாஸ் ஆகிய ஆறுகளோடு இணைப்பதே அந்த திட்டம். இதன் மூலம், 700 சிறிய மற்றும் பெரிய கிராம நீர்த்தேக்க அமைப்புகளும், குளங்களும் நிரம்பும். இந்த இணைப்பானது, சரஸ்வதி ஆற்றுக்கான, 'தாரோய்' திட்டத்தின் வலக்கரை பிரதான வாய்க்காலின், முதல் கிளை வாய்க்காலிலிருந்து பிரிகிறது. இதன் காரணமாக, இந்த மாநிலம், வேளாண்மையில், 9 சதவீத வளர்ச்சி கண்டு விட்டது.மற்ற மாநிலங்களும், இதுபோன்ற வளர்ச்சி காண வேண்டும்.


தமிழக நதிகள் இணைப்பு



தமிழக நதிகளை இணைப்பது குறித்து, இப்போது பார்ப்போம்.மேட்டூர் அணை வெள்ளத்தால் நிரம்பும் ஒவ்வொரு முறையும் மீதமுள்ள நீர், கடலில் கலக்கிறது. ஒவ்வோராண்டும், மேட்டூரிலிருந்து கடலில் கலக்கும் நீரின் அளவு, சராசரியாக 60 டி.எம்.சி., எனவே, கடந்த எட்டாண்டுகளில், 400 டி.எம்.சி., நீர், தடுப்பணைகளோ நீர்த்தேக்க வசதிகளோ இல்லாத காரணத்தால், கடலில் சென்று சேர்ந்தது.கடந்த, 2005 வெள்ளத்தின் போது, 3.23 லட்சம் கனஅடி நீரை, கொள்ளிடம் ஆறு வெளியேற்றியது. ஒரு கி.மீ., அகலமும் 160 கி.மீ., நீளமும் உள்ள கொள்ளிடம் ஆறு, ஒரு நீர்த்தேக்கத்தைப் போல செயல்பட்டது. அதிக வெள்ளத்தை ஏற்கும் திறன், ஒரு வெள்ளப் போக்கு நீர்வழிக்கு இருக்க வேண்டும் என்பதை, கொள்ளிடம் காட்டியது. அதாவது ஒரு ஆற்றினை வெள்ள ஏற்பு வாய்க்காலாக மாற்றும்போது, நாம் நிறைய நீரை தேக்கி வைக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பேராசிரியர் ஏ.சி.காமராஜ் குழுவினரும், வி.பொன்ராஜும் உருவாக்கிய, 'தமிழ்நாடு அதி -திறன் நீர்வழி திட்டத்தை' தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும், முன்னால் முதல்வர் கருணாநிதியிடமும், அவரவர் ஆட்சிக் காலத்தில் சமர்ப்பித்தோம். அவர்கள் நீர்ப் பிரச்னை குறித்த கவலை கொண்டு, சில நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால், திட்டத்தைத் துரிதப்படுத்த முனையவில்லை.தமிழக நீர்வழிகள் சாலைத் திட்டம் புதுமையானது. இது நீர் சேகரிப்பாகவும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பாகவும் இணைந்து செயல்படுகிறது. இருவழிகளில் நீர் செல்லவும் ஆற்றுப்படுகைகளுக்கிடையில் ஏற்கனவே உள்ள அமைப்புகளின் மீது, பாதிப்பின்றி இணைப்புகளை மேற்கொள்கிறது.பின்வரும் அணைகளை இது இணைக்கிறது: சாத்தனுார், மேட்டூர், பவானி சாகர், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு. அத்துடன் பல ஏரிகளையும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், ராமநாதபுரம் ஏரிகளையும் இணைக்கிறது. மேற்கு நோக்கி பாயும் ஆறுகளும் தமிழக நீர்வழி கிரிடில் இணைக்கப்படுகிறது. ஒரே கிடைமட்டத்தில் வரும்படியாக இது கடல் மட்டத்துக்கு மேல் 250 மீட்டர் உயரத்தில் கட்டப்படும். இணைப்பின் எந்தப் பகுதியிலிருந்தும், நீரை ஏற்றவோ, இறக்கவோ முடிகிற வகையில் அணைகளையும், ஏரிகளையும் இது இணைக்கிறது. ஆறுகள் முழுவதுமே, தமிழக நீர்வழிப் பாதையுடன் இணைக்கப்படுகின்றன.இந்த திட்டத்தை, ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்த முடியும் என, பூர்வாங்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*முதல் கட்டத்தில், மேட்டூரும், வைகையும், 350 கி.மீ., நீள நீர்வழியால் இணைக்கப்படலாம்.
*இரண்டாம் கட்டத்தில், மேட்டூரையும், பாலாறையும், 270 கி.மீ., துாரத்தில் இணைக்கலாம்.
* மூன்றாம் கட்டத்தில், 130 கி.மீ., நீள வழியில், வைகையையும், தாமிரபரணியையும் இணைக்கலாம்.
*நான்காம் கட்டத்தில், தாமிரபரணியையும், பெருஞ்சாணியையும் இணைக்கலாம்.
*ஐந்தாம் திட்டமாக, சம காலத்தில், ஆறுகளையும், ஏரி, -துணை ஆறுகளையும், ஆங்காங்கே இணைக்க வேண்டும். இந்த திட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இது, அந்தந்த படுகைகளில் பயன்படுத்தப்படும் நீரை இணைப்பதில்லை; மாறாக உபரி நீரைமட்டுமே இணைக்கிறது. அதுவும், இரு வழிகளில் இணைக்கிறது. இதில் எங்கும், நீரேற்றும் வசதி பயன்படுத்தப்படவில்லை.இதைப் பத்தாண்டுகளுக்குள் நிறைவேற்ற முடியும்.


பலன்கள்:



இந்தத் திட்டத்தால் மாநிலத்துக்கு பின்வரும் பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: திறமையான வெள்ளக் கட்டுப்பாடு; கூடுதலாக; 75 லட்சம் ஹெக்டேருக்கு நீர்ப்பாசன வசதி; கூடுதலாக, 2,150 மெகாவாட் நீர்மின்சக்தி; நிலத்தடி நீர் மட்ட உயர்வால், ஆண்டுக்கு, 1,350 மெகாவாட் மின்சக்தி மிச்சமாதல்; சரக்குப் போக்குவரத்துக்காக, 900 கி.மீ., நீள நீர்வழித்தடம்; 30 அடி ஆழமும், 360 அடி அகலமும் உள்ள நீர்வழியில், ஆண்டு முழுக்க போக்குவரத்து நடக்கலாம்; சாலைகளோடு ஒப்பிடுகையில், நீர்வழிப் போக்குவரத்துக்கான எரிபொருளில், 90 சதவீதம் மிச்சமாகும்; அத்துடன் நீர்வழி கிரிடிலிருந்து, 5 கோடி பேருக்கு, நேரடி குடிநீர் இணைப்பைச் சாத்தியமாக்கலாம்; மீன்வளர்ப்பு, சுற்றுலா, நீர் விளையாட்டுகள் என, பல கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன.


திட்டக்கணிப்பு



இந்தப் பத்தாண்டு கால திட்டத்திற்கான நிதியை ஒதுக்குவதும் சாத்தியமே. இதன் மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாய். மின்சக்தி திட்டங்கள், நீர்வழி நீர்த்தேக்கங்கள், அணைகள் அனைத்தும் இதில் அடங்கும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடிக்கும் குறைவான பணத்தை, தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி, கூடுதலாக மத்திய அரசு மற்றும் உலக வங்கி நிதி ஆதரவு இருந்தால், 5 முதல் 7 ஆண்டுகளில் இதைக் கட்டி விடலாம்.தமிழக நீர்வழிப் பாதை இணைப்பு இயங்கத் துவங்கினால், ஓராண்டுக்கு 5,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். இதில், மின் சக்தி ஆதாயம், 2,350 கோடி ரூபாய்; போக்குவரத்து ஆதாயம், 1,450 கோடி; குடிநீர், மீன்வளம், சுற்றுலா ஆதாயங்கள் மூலம், 1,200 கோடி ரூபாய் கிடைக்கும்.வனவளர்ப்பு, நீர்மின்சக்தி பயன்பாடு, எரிபொருள் குறைந்த போக்குவரத்து ஆகியவற்றால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மேம்பாடு, மிகவும் முக்கியமானது இந்த திட்டத்தை, உலக வங்கி நிதியுதவியுடன், BOOT முறையில் (கட்டு, -இயக்கு,- உரிமை கொள், -பின்பு மாற்று) நடைமுறைப்படுத்த முடியும்.இந்த திட்டம், பல் துறை சார்ந்தது. எனவே, சிவில் பொறியாளர்கள், நீர் நிபுணர்கள், இயந்திரவியல் நிபுணர்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணுவியல் நிபுணர்கள், மண்ணியலாளர்கள், வரைபடவியலாளர்கள், தொலையறிதல் நுட்பர்கள், தொழில் மேலாண்மை நிபுணர்கள் என, பலருக்கும், சவால்களும், பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படும்.தேசிய அளவிலான நீர்வழிகள் உருவான பின், இது, அவற்றோடு இணைக்கப்பட்டால், அதன் வழி வரும் ஆதாயங்கள் மிக முக்கியமானவை.

டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
வெ.பொன்ராஜ்

கருத்துகள் இல்லை: