ஞாயிறு, 4 மே, 2014

நீலகிரி விரைவு ரயிலை நிறுத்தி பெண்களிடம் நகை பறிப்பு !

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சனிக்கிழமை அதிகாலை நீலகிரி
விரைவு ரயிலை மர்ம நபர்கள் நிறுத்தி 3 பெண் பயணிகளிடம் தங்கச் சங்கிலிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சேலம், கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை செல்லும் நீலகிரி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள மாவெலிபாளையம் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை 2.55-க்கு சென்று கொண்டிருந்தது.
சிக்னல்கள் சரியாக இருந்த போதும் ரயில் தொடர்ந்து செல்லாமல் அந்தப் பகுதியில் நின்றதை கவனித்த ரயில்வே லைன் கார்டு ஆனந்தகுமார் உடனடியாக ரயில் நிலைய அலுவலர் டி.ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர், ரயில் நின்றிருந்த பகுதிக்கு அலுவலர்களுடன் சென்றார். அப்போது, ரயிலில் இருந்து கீழே இறங்கிய நபர், பெண்கள் பயன்படுத்தும் கைப்பையைத் தூக்கி எறிந்து விட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும், ரயில்வே போலீஸாருக்கும் ராஜ்குமார் தகவல் தெரிவித்தார். ரயில் என்ஜினில் இருந்து 6-ஆவது பெட்டியான எஸ்-4 பெட்டியில் என்ஜினிலிருந்து வரும் வால்வை மர்ம நபர்கள் பழுதடையச் செய்துள்ளனர்.
ரயில் நின்றதும் எஸ்-4, எஸ்-6, எஸ்-7 ஆகிய மூன்று பெட்டிகளில் இருந்த சென்னையைச் சேர்ந்த பெண் பயணிகள், அயனாவரம் கோபிநாத் மனைவி சித்ராவிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி, அண்ணா நகர் பிரபாகரன் மனைவி ஜெயந்தியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி, பத்மாவதியிடம் இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி என மொத்தம் எட்டரை பவுன் தங்கச் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து விட்டு தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவத்தால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக கோவை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
ஐ.ஜி. ஆய்வு: மேற்கு மண்டல ஐ.ஜி. டேவிட்சன் தேவாசிர்வாதம், சேலம் சரக டிஐஜி அமல்ராஜ், மாவட்ட எஸ்.பி.க்கள் சக்திவேல் (சேலம்), சந்தோஷ்குமார் (நாமக்கல்), அமித்குமார் சிங் (திருப்பூர்), திருச்சி ரயில்வே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.ராஜவேலு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த மாவெலிபாளையம் ரயில் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
இச்சம்பவத்தில் 6 பேருக்கு மேல் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவையும் ஆய்வு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
நகைகளைப் பறிகொடுத்த பயணிகள் கோவை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி மயிலாடுதுறை- மைசூர் ரயிலில் தொப்பூரை அடுத்துள்ள காருவள்ளி அருகே 3 பெண் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 17 பவுன் தங்க நகைகளைப் பறித்து விட்டு ரயிலை நிறுத்தி, மர்ம நபர்கள் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது. dinamani.com

கருத்துகள் இல்லை: