செவ்வாய், 2 அக்டோபர், 2012

தினமலர் செய்தி: திமுக தேதிமுக கூட்டணியாம் 12 சீட் தர தயாராம்

 (கட்சி ஆரம்பித்த போது ஒரு கொள்கை, கட்சி வளர்க்க வேறு கொள்கை இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா ஊருக்குள்ள திரியனும்.இதுக்கு தான் குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சின்னு சொன்னாங்களா?அம்பது சீட்டு தரேன் என் பின்னாடி ஓடி வா ன்னு என் மாமன் கூப்டாலும் டவுசர் பின்னாடி ஓடுவாரு போல இருக்கு.)
தே.மு.தி.க.,வுடன் இணைந்து, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க., காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளது. "மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்போம்' என்று வெளிப்படையாக அறிவித்துள்ளதன் மூலம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவுள்ளதையும் தி.மு.க., தெளிவுப்படுத்தியுள்ளது.அதே நேரத்தில், "தங்களுடன் கூட்டணி வைத்தால், 12 சீட் தரத் தயார்' என, தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும், இதற்கான பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க.,வும் பங்கேற்றதாகவும், இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, ஒவ்வொரு கட்சியாக விலகி வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க.,வும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக, முடிவு எடுத்துள்ளது.ஏற்கனவே, கூடங்குளம் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் என, பல விவகாரங்களில், மத்திய அரசுக்கு எதிராக குரலை உயர்த்திய தி.மு.க., சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நடத்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரசுக்கு அதிர்ச்சியை அளித்தது.அடுத்ததாக, "மத்திய அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களை கேட்க மாட்டோம்' என அறிவித்து, காங்கிரசுக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., செயற்குழுவில், "மதச்சார்பு அரசு வந்து விடும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான், காங்கிரசை ஆதரிக்கிறோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.லோக்சபாதேர்தல் கூட்டணியில், காங்கிரசை கழட்டி விடும் வகையில், தி.மு.க., அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருவதையே இது காட்டுகிறது. ஒவ்வொரு முறை கூட்டணியில் இருந்து விலகும்போதும், இதே பாணியில் தி.மு.க., செயல்பட்டுள்ளது, கடந்த கால வரலாறாக உள்ளது.காங்கிரசுக்கு பதிலாக, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, தி.மு.க., தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், தே.மு.தி.க.,விடம் பேரத்தை துவக்கியுள்ளனர்.

அவர்களுக்கு கட்சியில் உள்ள செல்வாக்கு குறித்த சந்தேகம் காரணமாக, தே.மு.தி.க., தரப்பில் ஆர்வம் காட்டவில்லை. அடுத்த கட்டமாக, சட்டசபை தேர்தலின் போது பேச்சு வார்த்தை நடத்திய, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், பேச்சு வார்த்தையைத் துவங்கியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையில், தே.மு.தி.க., ஆர்வம் காட்டியுள்ளது. லோக்சபா தேர்தலில், தங்களது கூட்டணிக்கு வந்தால், 12சீட் தருவதாக, பேரம் நடந்துள்ளது. அ.தி.மு.க., தங்களை உதாசீனப்படுத்தியதால், கோபமாகியுள்ள தே.மு.தி.க., இந்த வாய்ப்பை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது.இரு தரப்பிலும், முதல் கட்டமாக நடந்த பேச்சு வார்த்தையும் நடந்துள்ளதாக இரு கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன."தற்போதைய நிலையில், தி.மு.க., 12 சீட் தருவதாகக் கூறியுள்ளது. உடனே ஒப்புக்கொள்ளாமல், இழுத்தால், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், உடனடியாக எதற்கும் கட்சித் தலைமை ஒப்புக் கொள்ளாது' என, தே.மு.தி.க., முன்னணி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை: