வியாழன், 4 அக்டோபர், 2012

இந்தித் எதிப்பு திராவிடர் கழகமும் திமுகவும் இருமுனைகளில் போராடின.

நிறைவேறிய காந்தி கனவு


மொழிப்போர் / அத்தியாயம் 9
இந்தியாவின் ஆட்சிமொழி எது என்பதில் மத்திய சட்டமன்ற (நாடாளுமன்ற) காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. அவற்றைக் களைந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. என். கோபாலசாமி அய்யங்கார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சாதுல்லா, எம்.என்.ராய், அபுல் கலாம் ஆசாத், பண்டித பந்த், புருசோத்தம தாஸ் தாண்டன், பாலகிருஷ்ண சர்மா, சியாமா பிரசாத் முகர்ஜி, கே. சந்தானம் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆட்சிமொழி பற்றிய ஆய்வு மற்றும் ஆலோசனைப் பணிகள் முடிந்ததும் அறிக்கை ஒன்றை அளித்தனர் அந்தக் குழுவினர். அந்த அறிக்கைக்கு முன்ஷி – அய்யங்கார் திட்டம் என்று பெயர். அந்தத் திட்டத்தில் பல முக்கியமான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் சுருக்கம் கீழே:
தேவநாகரி எழுத்துகளைக்கொண்ட இந்தி மத்திய அரசின் ஆட்சிமொழி. ஆங்கிலம் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆட்சிமொழியாக நீடிக்கும். அதற்குப் பின்னரும் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகப் பயன்படுத்த நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். இந்தியை நிர்வாகத்துறையில் பயன்படுத்த குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கலாம். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள், அரசாங்கச் சட்டங்கள்,
சட்ட முன் வடிவுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். மாநில அரசுகள் தங்களுடைய மாநில மொழியையோ அல்லது இந்தியையோ ஆட்சி மொழியாக ஏற்கலாம். அதுவரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கவேண்டும்.
முன்ஷி – அய்யங்கார் திட்டம் குறித்து மத்திய சட்டமன்ற காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்தி ஆதரவாளர்கள், ஆங்கில ஆதரவாளர்கள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆகவே, அரசியல் நிர்ணய சபையே இறுதி முடிவை எடுக்கட்டும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர். அதனைத் தொடர்ந்து ராஜேந்திர பிரசாத் தலைமையில் 12 செப்டெம்பர் 1949 அன்று அரசியல் நிர்ணய சபை கூடியது. அதில் ஆட்சிமொழி பற்றிய விவாதங்கள் இரண்டு நாள்களுக்கு நடந்தன.
அந்தக் கூட்டத்தில் டாக்டர் சுப்பராயன், காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, டி.ஏ. ராமலிங்கம் செட்டியார், பி.டி. சாக்கோ உள்ளிட்ட தென்னகத் தலைவர்கள் – சேத் கோவிந்த தாஸ், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட வடநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரண்டு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. இந்தியாவின் எந்த மொழியை ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்வது என்பது முதல் அம்சம். இந்தியா முழுவதும் ஒரே வகையான எண்களைப் பயன்படுத்துவது என்பது இரண்டாவது அம்சம்.
அந்தக் கூட்டத்தில் இந்திக்கு ஆதரவான கருத்துகளும் ஆங்கிலத்துக்கு ஆதரவான கருத்துகளும் திரும்பத்திரும்ப பேசப்பட்டன. சென்னை மாகாணத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தியைத்தான் விரும்புகிறார்கள் என்றார் புருஷோத்தம தாஸ் தாண்டன். ஆனால் அந்தக் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஏனென்றால், இந்தித்திணிப்பு எழுந்த நொடியில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்த மாகாணங்களுள் சென்னை பிரதானமானது.
இந்தியாவின் பழைமையான மொழி ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்றால் தமிழ் அல்லது திராவிட மொழிகள்தான் இந்த மண்ணில் மிகவும் முற்பட்ட காலத்தில் இருந்து பேசப்பட்டு வருகின்ற மொழிகள் என்று பேசினார் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப். ஒருபகுதியினர் மற்றொரு பகுதியினர் மீது ஆதிக்க எண்ணத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள் என்றால் அதன் விளைவுகள் நம்முடைய முன்னேற்றத்துக்கும் பாதுகாப்புக்கும் ஏற்றவையல்ல. எனவே, இந்தி பேசுபவர்கள் தங்களின் ஆதிக்க எண்ணத்தையும் சர்வாதிகாரப்போக்கையும் கைவிட்டு, ஒத்துழைக்க வேண்டும் என்றார் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார்.
பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் 14 செப்டெம்பர் 1949 அன்று சில திருத்தங்களை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். நானூறுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் திரும்பப்பெறப்பட்டன. அதன்படி, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது குறித்தும் தேவநாகரி எண்களைப் பயன்படுத்துவது குறித்தும் சட்டங்கள் இயற்றலாம்; குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் உயர்நீதிமன்றத்தில் இந்தியைப் பயன்படுத்தலாம்; சட்டங்கள், சட்டமுன்வடிவுகள், ஆணைகள் ஆகியவற்றை மாநில மொழிகளில் வெளியிடலாம் என்பன உள்ளிட்ட திருத்தங்கள் ஏற்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து திருத்தப்பட்ட முன்ஷி – அய்யங்கார் திட்டத்தின் அடிப்படையில் மொழிப் பிரிவுகள் அவையில் ஏற்கப்பட்டு, அரசியல் சட்டத்தின் பதினேழாவது பாகத்தில் இணைக்கப்பட்டன. அவற்றில் பிரிவு 343 தொடங்கி பிரிவு 351 வரையிலானவை மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தவேண்டிய மொழிகள் குறித்து விவரிக்கின்றன. அவற்றைக் கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித்தால் மொழிப்போர் என்பது ஓரிரு பேச்சுவார்த்தைகள் மூலமாக முடிந்துவிடக்கூடிய விஷயமல்ல; எதிர்காலத்தில் வெடித்துக் கிளம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்பது புலப்படும்.
343வது விதி தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்டுள்ள இந்தி மொழியே மத்திய அரசின் ஆட்சிமொழி என்றும் 1965 வரையில் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படலாம் என்று கூறுகிறது. இதன்படி 1965 ஆம் ஆண்டு வரை ஆங்கிலம்தான் ஆட்சிமொழி என்றபோதும் இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசின் துறைகளில் இந்தியைப் பயன்படுத்துவதற்கு குடியரசுத்தலைவர் ஆணையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திக்கு மட்டும் குடியரசுத் தலைவர் சிறப்பு ஆணை வழங்கலாம்;, ஆனால் இந்தியாவின் ஏனைய மொழிகளுக்கு அந்தச் சலுகையை குடியரசுத் தலைவர் பயன்படுத்த முடியாது.
343வது விதி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி மொழியின் வளர்ச்சியைக் கண்டறிய, ஆட்சிமொழி ஆணையம் ஒன்றை அமைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த ஆட்சி மொழி ஆணையத்தின் பணிகளில், இந்தியை மத்திய அரசுப் பணிகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துவது, மத்திய அரசுப் பணிகளில் இயன்றவரைக்கும் ஆங்கிலத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது ஆகியன பிரதானமானவை. இவற்றின் அர்த்தம், இந்தியை ஆட்சிப்பணிகளில் தீவிரமாக நுழைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும் என்பதுதான். ஆம். வளர்ச்சிப் பணிகள் என்றால் அது இந்திக்கு மட்டும்தான் நடக்கவேண்டுமே தவிர, இதர மொழிகளுக்கு அல்ல.
345வதுவிதி அந்தந்த மாநிலங்களில் வழங்கும் மொழிகள் ஆட்சிமொழி ஆவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. 348 வது விதி உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. முக்கியமாக, இந்திய அரசியமைப்பின்படியோ, நாடாளுமன்ற, சட்டமன்றங்களின்படியோ தரப்படுகின்ற அனைத்து கட்டளைவிதிகள், ஒழுங்குமுறைகள், துணை விதிகள் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மூலப்படிவங்கள் ஆங்கில மொழியிலேயே இருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்கிறது.
351வது விதி இந்தி மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குறிப்பாக, இந்தி மொழியைப் பரப்பி மேம்பாடு அடையச் செய்து, இந்தியக் கூட்டுப்பண்பாட்டின் அனைத்து கூறுகளுக்கும் இந்தியைச் சொல்லமைப்புச் சாதனமாக்கும் வகையில் வளர்த்து, இந்தியைச் செழித்தோங்கச் செய்வது மத்திய அரசின் கடமை என்று கூறுகிறது இந்த விதி.
ஒருவழியாக, இந்தி மொழிக்கு தேசிய மொழி என்ற அந்தஸ்து கிடைத்தது. நாம் இந்தி மொழிக்குத் தேசிய மொழி என்னும் தகுதியை வழங்காவிட்டால் சுதந்தரம் பற்றிப் பேசிவதில் பயனே இல்லை என்று சொன்ன காந்தியின் கனவு நிறைவேறியது.  இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி 14 செப்டெம்பர் 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது . அடுத்த மூன்றாவது நாள் சென்னை மாகாணத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனை ஏற்பட்டது.
இந்தித் திணிப்பு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருந்த திராவிடர் கழகத்தில் கருத்து வேறுபாடுகள் முற்றி, பிளவு ஏற்பட்டது. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த சி.என். அண்ணாதுரையும் அவருடைய ஆதரவாளர்களும் இணைந்து 17 செப்டெம்பர் 1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.
இந்தியை வளர்க்கிறோம், இந்தியைப் பரப்புகிறோம் என்ற பெயரில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள இந்தி பேசாத மக்களின் உணர்வுகளின் மீதான தாக்குதல்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்து விட்ட சமயத்தில் திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட பிளவு தேசிய அளவில் ஆச்சரியத்துடனும் மாகாண அளவில் கவலையுடனும் பார்க்கப்பட்டது. ஆனால் பின்னாளில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் திராவிடர் கழகமும் திமுகவும் இருமுனைகளில் இருந்து போராடின.

கருத்துகள் இல்லை: