செவ்வாய், 2 அக்டோபர், 2012

கொலை விசாரணைக்காக வந்த வீட்டில் கொள்ளையடித்த போலீசார்!

 போலீசார் 25 சவரன் நகை, கட்டுகட்டாக பணம் ஆகியவற்றை, வாழப்பாடி போலீஸார், இரு பைக்குகளில் அள்ளிச் சென்றனர் ,
கொலையான வீட்டில் கொள்ளையடித்த போலீசார்! நடவடிக்கை எடுக்க எஸ்.பி. பரிந்துரை! சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த  வேப்பிலைப்பட்டி பக்கம் உள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சரஸ்வதி, வயது-70, கடந்த, 21-ம் தேதி நள்ளிரவில், கொலை செய்யப்பட்டார். வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்த சரஸ்வதியின் வீட்டிலிருந்த  73 சவரன் நகை, மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது.கொலை நடந்தபோது, சரஸ்வதியின் கணவர் வையாபுரியை கட்டிப் போட்டுவிட்டு, இந்த கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில், விசாரணைக்காக வந்த வாழப்பாடி டி.எஸ்.பி மனோகரன் முன்னிலையில் போலீசார் மூதாட்டியின் வீட்டில் இருந்த, 25 சவரன் நகை, கட்டுகட்டாக பணம் ஆகியவற்றை, வாழப்பாடி போலீஸார், இரு பைக்குகளில் அள்ளிச் சென்று விட்டதாக, டி.எஸ்.பி., மனோகரன் மீது சரஸ்வதியின் மகன், மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் தெரிவித்தார்.
அதன் பிறகு சரஸ்வதியின் வீட்டிலிருந்து எடுத்துவந்ததாக கூறி 25 சவரன் நகையை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்டைத்தனர்.இப்புகார் தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி, தர்மபுரி எஸ்.பி., அஸ்காகார்க்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே சேலம் மாவட்ட பொறுப்பை வகித்து வந்த நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணம்மாள் மேற்கு மண்டல போலிஸ் ஐ.ஜி.க்கு அனுப்பியுள்ள அறிக்கையில், மூதாட்டி சரஸ்வதி கொலை சம்பவத்தில், டி.எஸ்.பி., மனோகரன், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர், தன்னிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. அவர்கள் இருவரின் தன்னிச்சையான போக்கால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டு, குற்றவாளிகள் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, துறை ரீதியாக டி.எஸ்.பி., மனோகர்ஜ், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மேற்கு மண்டல ஐ.ஜி., சுந்தரமூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆகியோருக்கு பரிந்துரை செய்து,  நாமக்கல் எஸ்.பி., கண்ணம்மாள் அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: