தலைப்பிலுள்ள இந்தக் கேள்விதான் மண்டையை குடைந்துக் கொண்டிருக்கிறது.
‘ராவணன்’ என்னும் படுதோல்வி படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படம், ‘கடல்’. ஜெயமோகன் வசனம் எழுத, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அரவிந்த் சாமி, அர்ஜுன், லட்சுமி மஞ்சு போன்றோர் நடிக்க, கார்த்திக்கின் மகன் கவுதம், கதாநாயகனாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர், சமந்தா. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், கவுதமுக்கு அக்கா போல் அவர் தெரிந்ததாலும், அவருக்கு ஏற்பட்ட சரும பாதிப்பினாலும், சமந்தா இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார். அல்லது விலக்கப்பட்டார். இது பழைய கதை.
இதனையடுத்து ‘கடல்’ படத்தின் கதாநாயகியாக நடிக்க முன்னாள் நடிகை ராதாவின் இளைய மகள் துளசியை ஒப்பந்தம் செய்தார்கள். படப்பிடிப்பும் முடியும் தருவாயில் இருக்கிறது.

எப்படி பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் வழியாக கார்த்திக்கும், ராதாவும் சினிமாவில் அறிமுகமானார்களோ அப்படி ‘கடல்’ படத்தின் மூலம் அவர்களது வாரிசுகள் திரைத்துறையில் வலது காலை எடுத்து வைத்து நுழைகிறார்கள். சினிமா வரலாற்றிலேயே இது புதுமை… என்றெல்லாம் உரோமம் சிலிர்க்க பத்திரிகைகள் எழுதப் போகின்றன. அறிமுகப்படுத்தப் போகின்றன.
இந்த புல்லரிப்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டால், ஒரு கேள்வி எழுகிறது.
கதாநாயகியாக ‘கடல்’ படத்தில் நடித்து வரும் துளசிக்கு வயது, 14. இன்னும் பத்தாம் வகுப்பைக் கூட இவர் முடிக்கவில்லை. மனதளவிலும், உடலளவிலும், உலக அறிவிலும் இன்னும் பண்படாத வயது. சிறுமி.
இவரை வைத்துத்தான் காதல் காட்சிகளையும், டூயட் பாடல்களையும் மணிரத்னம், படமாக்கியிருக்கிறார். ஊடகங்களும், இணைய அறிவுஜீவிகளும் மணிரத்னத்தை பர்பெக்ஷனிஸ்ட் என கொண்டாடுகின்றனர். ஒரு காட்சி ‘சிறப்பாக’ வர வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைப்பார் என உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர். சரியான முகபாவனைகள் வரும் வரை நடிகர்களை ‘பெண்டு’ நிமிர்த்துவார் என நேரில் இருந்து பார்த்ததை போல்தான் இதுவரை எழுதியும், பேசியும் வந்திருக்கிறார்கள்.
எனில், துளசி தொடர்பான காட்சிகளிலும் இப்படித்தான் செயல்பட்டிருப்பார். இதன் அர்த்தம், காதல் காட்சிகள் உணர்ச்சிகரமாக வரும் வரை திரும்பத் திரும்ப நடிக்க வைத்திருப்பார் என்பது. இன்னும் மேஜர் ஆகாத ஒரு சிறுமியை இப்படி காதல் காட்சிகளில் நடிக்கவைப்பது சட்டப்படி தவறில்லையா?
உண்மையில் சிறுமிகளை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கயவர்களுக்கும், மணிரத்னத்தின் இந்த ‘பர்பெக்ஷனுக்கும்’ என்ன வித்தியாசம் இருக்கிறது?
கல்வி வியாபாரத்தில் விலை போக முடியாததால், உழைக்கும் மக்கள் வேறு வழியின்றி தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, இந்தப் பெற்றோர்களை ஏதோ வில்லன்களை போல் சித்தரிக்கும் தன்னார்வக் குழுக்கள், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக தாங்கள் மட்டுமே போராடுவதாக தொடை தட்டுகின்றன. ஊடகங்களும் இவர்களையே சமூகப் போராளிகளாக சித்தரிக்கின்றன. ஒருபோதும் இந்த சமூக அமைப்பில் வாழும் வரை உழைக்கும் மக்களால் தங்கள் பிள்ளைகளுக்கு என்னதான் ஆசைப்பட்டாலும் கல்வியறிவை அளிக்க முடியாது என்பதை மூடி மறைக்கின்றன.
குழந்தைத் தொழிலாளர் உழைப்பை தடை செய்ய வேண்டுமென்று மாதந்தோறும் ஏதாவது ஒரு பள்ளிக்கூட மாணவர்கள் ஊர்வலம் போவதும், தன்னார்வக் குழுக்கள் இதற்காக மாபெரும் கருத்துப் பிரச்சாரத்தை எப்போதும் செய்வதையும் பார்த்திருக்கிறோம். எனில் மணிரத்தினம் 14வயது சிறுமியை நடிக்க வைப்பது மட்டும் குழந்தை தொழிலாளர் உழைப்பில் சேர்த்தியில்லையா? இல்லை அதற்கு மட்டும் விதிவிலக்கு சட்டப்படி உண்டா? அல்லது சமூகநலத்துறையிடமிருந்து அவர் அனுமதி வாங்கியிருக்கிறாரா? அப்படித்தான் அனுமதியும் கொடுத்து விட முடியுமா?
முக்கியமாக காம உணர்வு, விரததாபம், காதல் போன்ற காட்சிகளை ஒரு சிறுமியை வைத்து நடிக்க வைப்பது என்ன விதத்தில் நியாயம்? ஏற்கனவே ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறுமிகள் குத்துப்பாட்டுக்களையும், பருவம் வந்த பெண்களின் உணர்ச்சி பாவத்துடன் பாடுவதையும் பார்த்திருக்கிறோம். இதுவும் சட்டப்படி சரியா?
சமூக காரணிகளால் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்படும் சிறுமிகள் குறித்து மேம்போக்கான ஆய்வுகளை செய்யும் தன்னார்வக் குழுக்கள், மணிரத்னம் போன்ற மேட்டுக்குடி ‘கலைஞன்’ மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்கின்றன.
உழைக்கும் மக்களுக்கு ஒரு நியாயம், சட்டம்… மேட்டுக் குடியினருக்கு ஒரு நியாயம், சட்டம் என்பது அரசின் கொள்கை மட்டுமல்ல. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கொள்கையும் அதுதான். அதனால்தான் அவர்கள் ‘அரசுசாரா அமைப்புகள்!’
குழந்தை தொழிலாளர் உழைப்பை தடை செய்ய விரும்பும் கனவான்களும், சீமாட்டிகளும் மணிரத்தினத்தின் காரியத்தை கண்டிப்பார்களா? நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்களா?