ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

தடை விதிங்க: பிரதமரை கேட்கிறது கர்நாடக மாநில அரசு

பெங்களூரு : "காவிரியிலிருந்து தினமும், தமிழகத்திற்கு வினாடிக்கு, 9,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என, காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்துவது என்று, கர்நாடக அரசு நேற்று முடிவு செய்தது.
காவிரியிலிருந்து தினமும், தமிழகத்திற்கு வினாடிக்கு, 9,000 கன அடி தண்ணீரை, செப்., 20ம் தேதி முதல், அக்டோபர் 15ம் தேதி வரை திறந்து விட வேண்டும் என, இம்மாதம் 19ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில், உத்தரவிடப் பட்டது.இந்த உத்தரவை நிறைவேற்ற, கர்நாடக அரசு மறுத்ததையடுத்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, கண்டிப்புடன் கூறியது.சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு குறித்து ஆலோசிக்க, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில், நேற்று அவரது இல்லத்தில், சட்டசபை மற்றும் சட்ட மேலவை தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது.


இந்தக் கூட்டத்தில், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், சட்டசபை ம.ஜ.த., தலைவர் ரேவண்ணா, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் காவிரி பிரச்னைக்காக, கர்நாடகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் வழக்கறிஞர் நாரிமன் உட்பட, சட்ட வல்லுனர்கள் பலரும் கலந்து கொண்டனர்.காலை, 11 மணியிலிருந்து மதியம், 1:30 மணி வரை, தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் விடுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து அனைவரும் விவாதித்தனர். கூட்டம் முடிந்த பின், வழக்கறிஞர் நாரிமன் மற்றும் அமைச்சர்களுடன், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஒன்றரை மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார்.

பின்னர், நிருபர்களிடம் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது
:"தமிழகத்துக்கு, 9,000 கன அடி தண்ணீர் விட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது அனைவருக்கும் தெரியும். அதன் அடிப்படையில், கூட்டம் கூட்டப்பட்டது. அனைவரும் அவரவர் கருத்துகளை கூறினர்; பல மணி நேரம் விவாதம் செய்யப்பட்டது. எனக்கு முந்தைய ஆட்சிகளில், இது போன்ற பிரச்னை ஏற்பட்டபோது, அவர்கள் என்ன முடிவெடுத்தனர் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. "தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது' என, எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்தனர். அதன் பின், வழக்கறிஞர் நாரிமனுடன் பல மணி நேரம் விவாதித்தேன். சுப்ரீம் கோர்ட்டும், காவிரி நதி நீர் ஆணையமும், தமிழகத்துக்கு, 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என, கூறியுள்ளன.

"இம்மாதம் 19ம் தேதி, காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, பிரதமருக்கு மனு கொடுத்தோம். அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை. பிரதமரின் உத்தரவின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் திறந்து விடும்படி கூறியுள்ளது.அதனால், இன்று (நேற்று) பிரதமருக்கு ஒரு, "பேக்ஸ்' அனுப்புகிறோம். காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என, அதில் கோரவுள்ளோம். இன்று (நேற்று) மாலைக்குள் கர்நாடகாவுக்கு அவசரமாக பதில் கொடுக்கும்படியும் கேட்போம். அந்த பதிலின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.அது மட்டுமின்றி, உடனடியாக காவிரி நதி நீர் மன்றக் குழு ஒன்றை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்து, கர்நாடகாவின் நீர் நிலையையும், மாநிலத்தின் வறட்சி, குடிநீர் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்க உள்ளோம்.இவ்வாறு, முதல்வர் ஷெட்டர் கூறினார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்து, மூன்று நாட்களுக்குள், தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டும். கர்நாடகத்தின் நிலைமையை, இதுவரை பார்லிமென்டில் எடுத்து வைக்காதது தவறு. கர்நாடகத்தில் நடக்கும் போராட்டம் அமைதியாக நடக்கவேண்டும். எந்த தனி மனிதரையும் குறி வைத்து தாக்கக் கூடாது.
தேவகவுடா முன்னாள் பிரதமர்

கருத்துகள் இல்லை: