படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
_________________________________________________________________________________________

மேற்படி சாட்சிகளின் விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உண்மை அறியும் குழு கண்டறிந்தவற்றை முடிவுகளாக தருகிறோம்.

1.            தேவர் குருபூஜைக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இமானுவேல சேகரன் குருபூஜை விழா நடத்தக்கூடாது, இமானுவேல் சேகரன் குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு ஆப்பநாடு மறவர் சங்கம், சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் சேர்ந்து ஜெயலலிதா அரசின் ஆதரவுடன் தேவர் சாதியினரை திருப்திபடுத்த சாதி வெறி கொண்ட போலீசை ஏவிவிட்டு பரமக்குடியில் ஆறு தலித் மக்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளது. இவ்வாண்டு இமானுவேல் சேகரன் குருபூசையை தடுத்து நிறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
2.            செப்டம்பா 11 அன்று பரமக்குடியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா மண்டல மாணிக்கத்தில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவரை கொச்சைப் படுத்தும்விதமாக சுவரில் எழுதப்பட்டிருந்தது. இதுவே பரமக்குடி சம்பவத்திற்கு மூலக்காரணம் என கூறிப்பிட்டார். ஆனால் நாங்கள் நேரடியாக சென்று விசாரித்ததின் அடிப்படையில் பள்ளப்பச்சேரி கிராம பள்ளர் சாதி மக்கள் பல ஆண்டுகளாக அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். மறவர்களை எதிர்த்து அப்பகுதியில் வாழ முடியாது என்ற நிலையில் பள்ளர் சாதி மக்கள் செல்ல முடியாத இடத்தில் அதிலும் கொல்லப்பட்ட பள்ளி சிறுவன் பழனிகுமார் கூட்டுறவு சங்க சுவரில் எழுதும் உயரம் கூட இல்லாத நிலையில். மறவர் சாதியினரே தேவர் வாழ்க என்பதற்கு கீழே ஒன்பது என எழுதிவிட்டு பொய்யாக போலீசில் புகார் கொடுத்து இரவில் கொலையும் செய்துள்ளனர்.
3.            மண்டல மாணிக்கம் பள்ளபச்சேரி பழனிக்குமாரை கொடூரமாக கொலை செய்தது, குருபூஜை தினத்தன்று ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது, குருபூஜை விழாவிற்கு சென்னை மாநகர அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் கொண்டு வரப்பட்டது, கற்கள், கைத்துப்பாக்கிகள், உருட்டுக் கட்டைகள் இவை எல்லாம் முன் கூட்டியே தயாரித்து சம்பவ இடத்தில் கொண்டு வரப்பட்டது, ஆரம்பத்தில் 50 பேராக பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை எளிதாக அப்புறப்படுத்தும் நிலையில் இருந்த காவல்துறை அப்புறப்படுத்தாமல் இருந்தது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு பரமக்குடி நகரைத் தாண்டி சென்றவுடன் ஜான் பாண்டியனை கைது செய்தது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்தோர்  பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கூப்பிட்டு அதில் பேச்சுவார்த்தைக்காக எழுந்த ஒருவரை தள்ளிவிட்டு திடீரென தடியடியைத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டது, இவற்றை எல்லாம் நியாயப்படுத்தி சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியது, இன்றுவரை அ.தி.மு.க. அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களை யாரும் சந்திக்காதது, 144 தடை உத்தரவு நீக்கப்படாமல் இருப்பது, பொய் வழக்குகள் 2000 பேர் மீது போட்டிருப்பது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது, ஆகியவை பரமக்குடி சம்பவம் திட்டமிட்டு அரசாங்க ஆதரவுடன் போலீஸ் தாழ்த்தபட்ட மக்கள் மீது நடத்திய படுகொலை என்பதை உறுதி செய்கிறது.
4.            பரமக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு அரசு எஸ்ஸி./எஸ்.டி போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட குருபூஜை பேனரில் தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன் என்று குறிப்பிட்டுள்ளதை தேவர் சாதியைச் சேர்ந்தோர், காவல்நிலையத்திலும் புகார் மனு அளிக்கிறார்கள். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் நீக்கக் கோருகிறார்கள். போக்குவரத்து அதிகாரிமுன்பு நடந்த பேச்சுவார்த்தையின் போது பேனரை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் விழா நடக்காது என்று மேல் இடத்தில் உள்ளவர்கள் சொன்னதாக சில அதிகாரிகள் குறிப்பிட்டது. குருபூஜைக்கு இருதினங்களுக்கு முன்பு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த கான்கிரீட்டில் தேவர் பேரவை என்று எழுதப்பட்டு அதில் மலம் கழித்து வைக்கப்படுகிறது. ஆகிய சம்பவங்கள் குருபூஜை விழாவின் போது பிரச்சனையை உருவாக்குவது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.
5.            தமிழகத்தில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக யாரேனும் போராட்டம் செய்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு முன் உதாரணமாக இச்சம்பவம் ஜெயலலிதா அரசு மற்றும் காவல்துறையால் நிகழ்த்தி காட்டப்பட்டுள்ளது. இனிவரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சி எப்படி நடக்கும் என்பதற்கு சாட்சியாக இச்சம்பவம் விளங்குகிறது. பரமக்குடி சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன் ஒட்டுமொத்த மக்களுக்கும் அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை.. தமிழகத்தில் போலீஸ் ஆட்சி துவங்கிவிட்டது என்பதை இச்சம்பவம் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதமே.
6.            பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தவிர்ப்பதற்கான வாய்ப்பிருந்து அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு  வரவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு முன்பான சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் கடைபிடித்தது போல் பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் குறிப்பிட்டிருப்பது பொய்யானது. அதே போல் இளையான்குடியிலும், மதுரையிலும் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு ஆதரவும் காவல்துறையில் உள்ள ஆதிக்க சாதிவெறியும் காரணமாக அமைந்துள்ளது.
7.            ஜான்பாண்டியனை கைது செய்யாமல் இமானுவேல் சேகரன் குருபூசைக்கு செல்ல அனுமதித்திருந்தால் துப்பாக்கிச்சூடு படுகொலை நடந்திருக்காது.
8.            அரசியல் சட்டத்தில் மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மனித உரிமைகளை மறுத்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி துப்பாக்கிசூடு நடத்தி படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்.

பரிந்துரைகள்:

1.            பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் கொலை சம்பவத்திற்கு காரணமான டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி மற்றும் இதர போலீசார் மீது தமிழக அரசு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து விசாரணை நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
2.            இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்து, கிராமங்களில் போலீஸ் ரெய்டு செய்வதை கைவிட வேண்டும். செப்டம்பா 11 அன்று 2000 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும். யாரையும் கைது செய்யக்கூடாது.
3.            சம்பவத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீடும், காயம்பட்டவர்களுக்கு ஐந்து இலட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் அவர்களது வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
4.    மண்டல மாணிக்கம் சிறுவன் பழனிக்குமார் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். பள்ளவச்சேரி பகுதி நிலமையை நேர்மையான மாவட்ட ஆட்சியர் மூலம் ஆய்வு செய்து தலித் மக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.    தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலித் மக்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையை இனக்கலவரம் என்பதாக தவறாக சித்தரிப்பதுடன் அதற்கு ஆதரவாக போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி செயல் பட்டு வருகிறார்.இதனால் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் அரசாங்கத்தின் பங்கு குறித்து விசாரிக்க பணியில் உள்ள நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
www.vinavu.com