புதன், 21 செப்டம்பர், 2011

திருவெறும்பூரை இணைத்தது செல்லாது- உயர் நீதிமன்றம் அதிரடி

திருச்சி மாநகாராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

டவுன் பஞ்சாயத்து நிலையில் இருந்த திருவெறும்பூரை கடந்த மாதம் திருச்சி மாநகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு திருவெறும்பூரில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி திருவெறும்பூர் டவுன் பஞ்சாயத்து, பாப்பா குறிச்சி, எல்லக்குடி, கீழ்கல்கண்டார் கோட்டை, ஆலத்துர் பஞ்சாயத்துகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
இதன்மூலம் திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக மாற்றப்பட்டது.

இதை எதிர்த்து திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசந்தர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மக்கள் கருத்தை கேட்காமல் திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது தவறு. மேலும் இந்த இணைப்பு குறித்த அறிவிப்பாணையை நாளேடுகளில் அரசு வெளளியிடவில்லை. எனவே, இந்த இணைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூரை இணைத்ததை ரத்து செய்தும், இது தொடர்பான அரசின் உத்தரவு செல்லாது என்றும் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்புக்காகவே உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இன்று தீர்ப்பு வெளியாகிவிட்டதால், விரைவிலேயே உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக நேற்று தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில் நடந்தது. இதில் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் வே.மு.சேவியர் கிறிசோ நாயகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே, பேரூராட்சிகளின் இயக்குனர் எம்.சந்திரசேகரன், சென்னை மாநகராட்சி கமிஷனர் டி.கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதில், திருச்சி மாநகராட்சி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுவதால், அதன் தீர்ப்புக்கு பிறகே தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பது என்று இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அதிமுக அரசுக்கு உதவும் வகையில், இலவச திட்டங்களின் பலன்கள் மக்களுக்குப் போய் சேரும் வரையிலும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் தாமதம் செய்து வருவதாக திமுக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் திருச்சி மாநகராட்சி விவகாரத்தில் தீர்ப்பு வெளியாகிவிட்டதால், தேர்தல் தேதியை இன்று அல்லது நாளை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: