வியாழன், 22 செப்டம்பர், 2011

TNA குற்றம் சாட்டிவிட்டுத் தான் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது

ltte-bamabimaduகடினமான சூழலை எதிர்நோக்கும் போரினாற் பாதிக்கப்பட்ட மக்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களும்.
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
மிகக் கடினமான சூழலை இலங்கைத் தீவில் எதிர்கொள்வோராக போரினாற் பாதிக்கப்பட்ட மக்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களுமே இருக்கின்றனர்.
இவர்களைப் பொறுத்தவரை மிகத் துயரமான – கடினமான நிலைமையே தொடர்கிறது. அதாவது போருக்குப் பின்னும். இதை இன்னும் சற்று அழுத்தமாக - அல்லது தெளிவாகச் சொன்னால், இப்பொழுது இன்னொரு போரை – போரின் நெருக்கடியை இவர்கள் எதிர்கொண்டவாறிருக்கின்றனர்.
கத்தியின் முன்னே நிறுத்தப்பட்டதைப் போல, கம்பியில் நடப்பதைப் போல, முள்ளிலே வீழ்ந்த சீலையைப்போல என்றெல்லாம் சொல்வார்களே! அந்த  நிலையில், அவலங்களின் மத்தியிலும் அபாயங்களின் மத்தியிலும் இவர்களுடைய வாழ்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.
முதலில் போரினாற் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பாக..
இந்தப் பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டதைப்போல, போர் நடைபெற்ற பிரதேச மக்களின் வாழ்க்கை என்பது, இன்னும் நிரப்பப்படாத குறைப்பாத்திரமாகவே இருக்கிறது. இவர்கள், தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றனர். வீட்டு வசதி போதாத நிலையில் இருக்கின்றனர். வருமானமின்றிய நிலையில் இருக்கின்றனர். உறவுகளை இழந்த நிலையிலும் உடல் உறுப்புகளை இழந்த நிலையிலும் இருக்கின்றனர். பிள்ளைகளையோ, கணவனையோ, சகோதர சகோதரிகளையோ தடுப்புமுகாம்களில் போய்ப்பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அவர்களுடைய விடுதலைக்காக ஏங்கியவர்களாக இருக்கின்றனர். இதைவிடப் பலர் அநாதரவான நிலையில் இருக்கின்றனர். இருளும் புழுதியும் நிரம்பிய ஊர்களில், மிக மட்டு மட்டான வசதிகளுடன் வாழ்க்கையை நகர்த்த வேண்டியவர்களாக இருக்கின்றனர். இப்படிப் பலவீனமான நிலையில் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
  1. போர் இவர்களைச் சப்பித்தின்று துப்பி விட்டிருக்கிறது. அதாவது, சல்லடையாக்கப்பட்ட மீதிகளாக இந்தச் சனங்கள் இப்போதிருக்கிறார்கள்.
  2. இவர்கள் பௌதீக ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், அகரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். அதிலும் அடிநிலைப் பொருளாதரத்தில் வாழ்கின்றவர்கள், கிராமப்புறங்களில் இருக்கின்றவர்கள், பின்தங்கிய சமூகச் சூழலில் இருக்கின்றவர்களின் பாதிப்புகள் மிக உச்சம். போதாக்குறைக்கு இவர்கள் வாழ்கின்ற பகுதிகள் இன்னும் சீராகமீளமைப்புச் செய்யப்படவும் இல்லை.
  3. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இன்னும் முழுமையாகப் புனரமைக்கப்படவில்லை.
  4. இதைவிட, போரின் காரணமாகவும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இந்தப் பிரதேசங்கள் முன்னர் இருக்காமல் விடப்பட்டதன்   காரணத்தினாலும் நீண்டகாலமாகவே அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் உள்ள பிரதேசங்கங்களாக இருக்கும் இந்தப் பகுதிகளின் அபிவிருத்திப் பணிகள் சிறப்பு வேலைத்திட்டத்திற்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாhல், அவ்வாறு செய்யப்படவில்லை. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற அரசாங்கத்தின் விசேட திட்டங்கள் கூட உரியவாறு பெரும் முன்னேற்றங்களை இன்னும் ஏற்படுத்தவில்லை.
  5. இந்தப் பிரதேசங்களின் குறைகள் நீக்கப்பட்டாலே மக்களின் வாழ்க்கை சுமைகளைக் குறைக்கக்கூடியதாக இருக்கும். அத்துடன் தங்களின் தேவைகளை அவர்கள் இலகுவிற் பெற்றுக்கொள்ளவும் இயலும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
  6. யுத்தத்தினாற் பாதிக்கப்பட்ட மக்களைக் கருத்திலெடுத்து அவர்களுடைய பாதிப்புகளை இனங்கண்டு, வகைப்படுத்தி, அவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் பணிகள் நடக்கவில்லை. ஆனால், அவை நடந்திருக்க வேண்டும்.
  7. பாதிக்கப்பட்ட மக்களுடைய உளவளம் மேம்படுத்தப்பட்டிருப்பது அவசியம். அதுகூட நடைபெறவில்லை.
  8. பொதுவாக நம்பிக்கையளிக்கக் கூடிய நிலைமைகள், முன்னேற்றத்துக்குரிய நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக நடைபெறவில்லை எனலாம்.
இவ்வளவுக்கும் துரித அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் மின்சார இணைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. வீதிப் புனரமைப்புப் பணிகள் நடக்கின்றன. பொதுக்கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. நிர்வாக இயந்திரம் சீராக்கப்படுகிறது. மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் நடைபெறுகின்றன. வீட்டுத்திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பதினைந்து சதவீதமான வீடுகள் பூர்த்தியடைந்துள்ளன. சட்டத்தையும் ஒழுங்கையும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. (கிறீஸ் மனிதன் விவகாரம் இதில் விலகல்).
ஆனால், இவையெல்லாம் போர்ப்பாதிப்புகளைப் பாதியளவுகூட ஈடு செய்யக்கூடியவையாக இல்லை. எனவே, இந்தச் சனங்கள் அவலங்களின் மத்தியிற்தான் வாழவேண்டியிருக்கிறது. இதில் ஒரு சாரார் தங்களுடைய தேட்டங்களைப் பயன்படுத்தி மீள் நிலைக்கு வந்து விட்டனர். இன்னொரு சாரார் போரின்போது எடுக்கக்கூடியவற்றை எடுத்து வந்ததனால், இப்போது அவற்றை வைத்துத் தொழில்களைச் செய்து வருகின்றனர். ஏனையோரின் கதி மிகக் கடினமே.
உண்மையில் இவர்களுக்கான உதவிகளை – நலத்திட்டங்களை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். சர்வதேச சமூகம் அதற்கு உதவியிருக்க வேண்டும். இலங்கையில் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் செலுத்த முனையும் மேலாதிக்கச் சக்திகள் அதைச் செய்திருக்கலாம். புலம்பெயர்ந்த மக்கள் திரண்டு இந்த உதவிகளைச் செய்திருக்கலாம். (ஒரு சிறு தொகையினர் மட்டும் தனிப்பட்ட ரீதியில் தங்களின் பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்). துமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கும் - தலைமை தாங்க விரும்பும் அரசியற் கட்சிகளும் அரசியலாளர்களும் இந்தப் பணிகளைச் செய்திருக்கலாம். குறைந்த பட்சம் ஆர்வமுள்ள அமைப்புகளையும் தனி ஆட்களையுமாவது இவர்கள் ஒழுங்குபடுத்தி உதவியிருக்கலாம்.
ஆனால், எவரும் இந்தச் சனங்களுக்கு எதுவும் செய்யவேயில்லை. இந்தச் சனங்களைப் பற்றி, இவர்களின் நிலைமையை மாற்ற வேண்டும் என்பதைப்பற்றி எவருமே சிந்தித்ததில்லை. இது மறுக்க முடியாத உண்மை. அப்படிச் சிந்தித்திருந்தால், இப்போதும் இந்தச் சனங்கள் இப்படியான நிலையில் இருக்கவே மாட்டார்களே.
ஆனால், இந்தச் சனங்களை வைத்து, இவர்களின் அவல நிலையை வைத்து தங்களின் வியாபாரங்களைச் செய்யும் காரியங்கள் மட்டும் தாராளமாகவே நடக்கிறது. இது மனச்சாட்சிக்கும் அறிவுக்கும் செய்கின்ற மிகப் பெரிய துரோகமாகும். இதில் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள், அரசியலாளர்கள், அரசியற்கட்சிகள், சில அமைப்புகள் முதல் சில தனிநபர்கள் வரை அடக்கம்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய அரசியல் ஒன்றிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவில்லை – அரசாங்கம் அந்தப் பொறுப்பைச் செய்யவில்லை. அது கண்டிக்கத்தக்கது என்று அரசாங்கத்தைக் குற்றம் சாட்டிவிட்டுத் தாம் தப்பித்துக் கொள்ளுவோர் ஒருவகையான அரசியலைச் செய்கின்றனர்.
இதற்கு மறுவளத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயாரில்லாமலும் அரசாங்கத்தின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமலும் சிலர் இருக்கின்றனர் என அரசாங்கம் குற்றம் சாட்டிவிட்டுத் தான் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது.
அடுத்த பக்கத்தில், அரசாங்கத்தை எப்படி நம்புவது? நம்பிக்கையில்லாத நிலையிற் செயற்படும் அரசாங்கத்தை நம்பித் தம்மால் உதவிகளைச் செய்ய முடியாது என்று புலம் பெயர் மக்கள் சொல்லித் தமது பொறுப்பிலிருந்து விடுபட்டுக் கொள்கிறார்கள்.
ஆகவே, ஆளாளுக்கு ஏற்றவாறு நியாயங்களைச் சொல்லி, காரணங்களைச் சொல்லி அவரவர் தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், சொந்தச் சோதரர்கள் துன்பத்தில் நிதம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். சிந்தை இரங்கவேயில்லை எவருக்கும்....
இந்த நிலையிற்தான் போர்ப்பிரதேசங்களுக்கு வெளியேயுள்ள மக்களின் வாழ்க்கையைப்பற்றியும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வன்னியிலும் வாகரையிலும் செத்துப் பிழைத்தவர்கள் இன்னும் அந்த வலியிலிருந்து மீளாதிருக்கும்போது, தங்கள் பிள்ளைகளும் உறவுகளும் தடுப்பு முகாம்களில் இருக்கும்போது, காணாமற் போன உறவுகளைத் தேடி அலையும்போது, இந்தப் பிரதேரங்களுக்கு அப்பால் வாழ்கின்றவர்கள் இவை எவற்றையும் பொருட்படுத்தாமல், விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் மெய்மறந்திருப்பதைப்பற்றி என்ன சொல்வது? (நல்லூர்த்திருவிழா இதற்குச் சிறந்த உதாரணம். இந்தத் திருவிழாவுக்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தமை மேலும் கவனத்திற்குரியது).
ஆகவே, வீழ்ந்தவர்கள் வீழ்ந்தவர்களே. அவர்களை மிதித்துப் பிழைப்பதே இன்றைய அரசியல் வணிகத்தின் சிறப்பு. அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் நிலைமை தொடர்பானது...
இவர்களிற் பல வகையினர் இருக்கின்றனர். சிலர் மிக வறிய நிலையிலுள்ளனர். உதவிகளற்றவர்களாக உள்ளனர். வேறு சிலர், உதவிகளும் வசதிகளும் உள்ளவர்களாக இருக்கின்றனர். - இவர்களின் நிலை பொருளாதார நிலையில் பரவாயில்லாமலிருக்கிறது. சிலர் ஏதோ சமாளித்துக் கொண்டு போகக்கூடிய நிலைமையுடன் உள்ளனர். சிலர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருக்கின்றனர். சிலர் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், உள்ளனர்.
இப்படிப் பல வகையினராக இருக்கும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் மெல்ல மெல்ல பொது வாழ்வில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்குரியதே.
ஆனாலும் இவர்களைச் சுற்றி ஒரு தீராத பிசாசைப் போல அபாயவலையொன்று பின்னப்பட்டிருக்கிறது. அதுதான் இவர்களை மிகமோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது.ஒரு பெரிய புகழுடைய அமைப்பின் சடுதியான தலைகீழ் வீழ்ச்சியென்பது, சுதாகரிக்கக்கூடியதாகவோ, சமாளிக்கக்கூடியதாகவோ, ஜீரணிக்கக் கூடியதாகவோ இருப்பதில்லை. அதிலும் மாதிரி அரசொன்றை வைத்திருந்த அமைப்பின் வீழ்ச்சியானது, மிகக் கடினமான நிலைமைகளை அந்த அமைப்பினருக்கு ஏற்படுத்தும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே.
இங்கே, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் என்பது பலருடைய அபிப்பிராயம். இந்தக் கண்காணிப்பு இரண்டு பிரதான வகைகளில் அமைகிறது. ஒன்று அரச கண்காணிப்பு. அதாவது, இது படைத்தரப்பின் கண்காணிப்பாகும். அடுத்தது, அரசியல் ரீதியாகவும் இவர்கள் எப்படிச் செயற்படுகின்றனர் என்று தமிழ் அரசியற் கட்சிகள் இவர்களைக் கண்காணிக்கின்றன. இவர்கள் எப்படி வாழ்கின்றனர் எனச் சனங்கள் அவதானிக்கின்றனர்.
பொதுவாக இந்த முன்னாள் உறுப்பினர்களிடம் ஒரு பதுங்கல் மனோபாவம் அல்லது தம்மை அடக்கி வாசித்தல், அல்லது, விலகியிருத்தல், அல்லது எதற்கும் அச்சமடைதல் - பதற்றமடைதல் என்ற நிலையே காணப்படுகிறது. தமிழ் அரசியற் கட்சிகளின் அறிக்கைகள் கூட இவர்களைக் கலவரப்படுத்துகின்றன. சில சமயங்களில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் கூட இவர்களைப் பாதிக்கிறது. அவை, இவர்களுக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அண்மையில் கிறீஸ் மனிதன் விவகாரம் கூட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் மீதே சுமத்தப்படுகிறது என்று வந்த செய்திகள் இதற்கு ஆதாரம். எல்லாவகையான எதிர்வினைகளுக்கும் அரசு தங்களைப் பலிக்கடாவாக்கக்கூடும் என்று சிலர் இதைக்குறித்து வெளிப்படையாகவே சொல்கிறார்கள். ஆகவே, தங்களின் நிலைமையைக் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்பது இவர்களுடைய அபிப்பிராயம்.
ஆனால், இவர்களின் குரல் இப்பொழுது ஒரு செல்லாக்காசு என்ற நிலையிலேயே இருக்கிறது. அதேவேளை, இவர்களின் நிலை படு மோசமானது. இதைக்குறித்த அக்கறையுள்ளவர்கள் சீரியஸாகவே சிந்திக்க வேணும். எந்தக் காரணம் கொண்டும் இவர்களைப் புறக்கணிக்க முடியாது. அப்படிச் செய்தால், அது உண்மையான புனர்வாழ்வாகவோ, இவர்களைப் பொது வாழ்வில் இணைப்பதாகவோ, இவர்களைச் சமூகமனிதர்களாக ஆக்கிக்கொள்வதாகவோ அமையாது.
தோற்றுப்போனவர்களின் உளவியல் என்பது எப்போதும் பாதிக்கப்பட்ட நிலையில் பதற்றத்துக்கும் சந்தேகங்களைக் கொண்டதாகவுமே இருக்கும். ஒதுங்கிச் செல்லும் இயல்பை அந்த உளவியல் ஏற்படுத்தும். ஆகவே, இவர்களை அரவணைப்பதும் இவர்களைக் குறித்துச் சிந்திப்பதும் தனியான ஏற்பாடுகளுக்குரியது. குறித்துச் சொல்வதாக இருந்தால், மேலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னும் விடுதலையாக வேண்டிய சூழலில் இருக்கின்றனர். இந்த நிலையில், வெளிவருகின்ற அறிக்கைகளுக்கும் பிரகடனங்களுக்கும் இவர்கள் அஞ்சி அஞ்சித் தினமும் சாகின்றனர். இதை அவர்களே வாய் விட்டுக் கூறுகின்றனர். எங்களைப் பற்றி, எங்களின் நிலைமையைப் பற்றி, எங்களின் விடுதலையைப் பற்றி யாருமே சிந்திக்கிறார்களில்லையே..! என்று.
பாதிக்கப்பட்டவர்களின் தளத்தில் நின்று, அவர்களுடைய நோக்கு நிலைகளில் நின்று சிந்திக்க வேண்டியது ஒரு முக்கியமான விசயம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஏதோ ஓரிருவர் அல்ல. ஆயிரக்கணக்கானவர்கள். லட்சக்கணக்கானவர்கள். இவர்கள் எல்லோருடைய விடுதலைக் கனவுகளுக்காகவும் ஒரு காலம் சிலுவைகளைச் சுமந்தவர்கள். அதாவது, வன்னி மற்றும் படுவான்கரை, வாகரைப் பிரதேச மக்களையே இங்கே குறிக்கிறோம்.
ஆகவே, இந்தச் சனங்களையும் முன்னாள் உறுப்பினர்களையும் தயவு செய்து உங்களின் விழிகளை ஒரு கணம் மூடிச் சிந்தியுங்கள். இவர்களுக்காகச் சிந்தியுங்கள்.
அதுவே ஒரு பெரிய பணியாகும்.

கருத்துகள் இல்லை: