வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சமூக விரோத செயல்கள், வன்முறை சம்பவங்கள் யாழ். குடாநாட்டில்


யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் சமூக விரோதச் செயல்கள் என்பன மீண்டும் அதிகரித்துள்ளன. நேற்று கொக்குவில், இருபாலை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய இடங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களில் ஒருவர் கொல்லப்பட்டும் 9 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறையில் நேற்று அதிகாலை ஒருமணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சவரிமுத்து ஜேசுராஜா (57 வயது ) என்பவரே வெட்டிக் கொலை செய்யப்பட்டவராவார். இவரின் மனைவியும் பிள்ளையும் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கொலைக்கு குடும்பப் பகையே காரணம் எனக் கூறப்படுகிறது.

யாழ். கொக்குவில் கிழக்குப் பகுதியில் மூவர் அடங்கிய கொள்ளையர்கள் முகத்தை மூடிக் கட்டிய வண்ணம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வைத்தியர் ஒருவரின் வீட்டினுள் புகைக்கூண்டின் ஊடாக உள் நுழைந்து மின் விளக்குகளை ஒளிரவிட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வைத்தியர் அவரின் மனைவி இருவரையும் எழுப்பி அணிந்திருந்த சங்கிலி, காப்பு, நகைகளை கொள்ளையிட முயன்ற போது அவர்கள் கத்தி கூச்சலிடவே வாள், கத்தி, பொல்லுகளால் வீட்டில் இருந்த ஏனைய 4 பேரையும் தாக்கிக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்திய சேவையாற்றும் வைத்தியர்களான க. சிவகோணேஸ் (வயது 44), மனைவி சி. தாரணி (வயது 42) இவரது தாய், தந்தையான கனகலிங்கம் (வயது 71), க. புஷ்பாவதி (வயது 71) ஆகிய நான்கு பேரும் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொள்ளையர்கள் இவர்களைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்று அப்பகுதியில் 100மீற்றர் தூரத்தில் கருவபுல வீதியில் இலங்கை வங்கியில் கடமையாற்றும் ஊழியர் வீட்டுக்குச் சென்று ஜன்னல் கம்பிகளை வளைத்து வீட்டு கதவுகளை உடைத்து நகைகளை கொள்ளையிட்டபோது திருடிக் கொண்டு வந்த கையடக்கத் தொலைபேசி செயற்பட்ட சத்தத்திற்கு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்தபோது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நிற்பதைக் கண்டு சத்தமிட்டுள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்த வங்கியாளர் அவரது மனைவி ஆகியோரை வாளால் வெட்டி நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் சபாரட்ணம் செல்வராஜா (வயது 56), ச. சர்வலோசினி (வயது 43) ஆகிய இருவரும் காயமடைந்தனர். இவர்களில் ச. செல்வராஜா வயிற்றில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வைத்தியர் கோப்பாய் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவித்தல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு அரைமணித்தியாலத்திற்குள் வந்து விசாரணை மேற்கொண்டு கைவிரல் அடையாளம் மற்றும் தடயங்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை கொக்குவில் பகுதியில் இரவு வேளை வழமைக்குமாறாக இராணுவ நடமாட்டமும் நாய்கள் குரைக்கும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்ட வண்ணம் இருந்ததாக அப்பகுதிமகக்ள் தெரிவித்தார்கள்.
இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் குற்றத்தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஏ.எம்.பி.ஏ. சரத் அறம்பொல தலைமையிலான பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை புதன்கிழமை மாலை 7.30 மணியளவில் இருபாலை வசந்தபுரம் பகுதியில் 3 மர்ம நபர்கள் வித்தியாசமான முறையில் நடமாடியதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை துரத்த முற்பட்டபோது மர்ம நபர்கள் அங்கிருந்த குடும்பஸ்தர் ஒருவரை பிடித்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்கள். காயமடைந்த குடும்பஸ்தர் கூச்சலிடவே 3 மர்ம மனிதர்களும் தப்பிச் சென்றுள்ளார்கள். இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் கஜந்தன் (26) என்ற 3 பிள்ளைகளின் தந்தை காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் அங்கு பொலிஸார், இராணுவத்தினர் குவிந்ததாகவும் காயமடைந்த நபரை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்டனர். எனினும் உறவினர்கள் தனியே கூட்டிச் செல்ல அனுமதிக்க முடியாதென உறவினர்களுடன் சென்ற காயமடைந்தவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து விட்டு சென்றுள்ளார்.
இதேவேளை ஊர்காவற்றுறை காளி கோயிலடியில் அந்தணர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இராஜசேகர சர்மா (32 வயது ) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். இவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்ட பின் தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்தலத்திற்குச் சென்ற நீதிவான் ஜோய் மகாதேவா சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் சடலப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: