புதன், 21 செப்டம்பர், 2011

2ஜி' விசாரணையில் சிதம்பரத்தை சேர்க்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும்' என்ற, சுப்ரமணியசாமியின் மனுவுக்கு, சி.பி.ஐ.,யும், மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தன. "இந்த வழக்கு தொடர்பாக, மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்வது குறித்தோ, கூடுதலாக குற்றவாளிகளை சேர்ப்பது குறித்தோ, விசாரணை கோர்ட் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய முடியாது' என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.


"2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும்' என, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். "ஸ்பெக்ட்ரத்துக்கான விலையை முடிவு செய்ததில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா மட்டுமல்லாமல், அப்போதைய நிதி அமைச்சரான சிதம்பரத்துக்கும் பொறுப்பு உண்டு. மத்திய அமைச்சரவை தான் இதற்கான முடிவை எடுத்தது' என்றும், அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், தன் வாதத்தில் கூறியதாவது: ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்த விசாரணை முடிந்து விட்டது. இது தொடர்பான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது பற்றி, விசாரணை கோர்ட் முடிவு செய்யும். அப்போதைய ஒதுக்கீட்டில் ஏதாவது தவறு நடந்ததாக, விசாரணை கோர்ட் கண்டறிந்தால், அது தொடர்பாக, இந்த வழக்கில் கூடுதல் குற்றவாளிகளை சேர்ப்பது குறித்து, விசாரணை கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக, மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்வது குறித்தும், விசாரணை கோர்ட் தான் முடிவு செய்ய வேண்டும். இது முழுமையாக, விசாரணை கோர்ட் வரம்பிற்கு உட்பட்ட விஷயம். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிடவோ, எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவோ முடியாது. வழக்கின் விசாரணை முடிந்து விட்டால், அந்த வழக்கு தொடர்பான அனைத்து விஷயங்களும், வழக்கு நடக்கும் விசாரணை கோர்ட் வரம்பிற்குள் வந்து விடும். இந்த விவகாரத்தில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, இரட்டை குதிரைகளில் சவாரி செய்கிறார். இதுபோன்ற ஒரு மனுவை, விசாரணை கோர்ட்டிலும் தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு கே.கே.வேணுகோபால், தன் வாதத்தில் கூறினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவும், இதே கருத்தை எதிரொலித்தார். "இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரம், விசாரணை கோர்ட்டுக்கு தான் உண்டு' என்றார். இதைத் தொடர்ந்து, சுப்ரமணியசாமி, வாதாடியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டிலும், விசாரணை கோர்ட்டிலும் நான் தாக்கல் செய்துள்ள மனுக்கள், வெவ்வேறு அம்சங்களைக் கொண்டவை. இரண்டு மனுக்களுக்கும் வேறுபாடு உண்டு. விசாரணை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சி.பி.ஐ., விசாரணை குறித்து, நான் வலியுறுத்தவில்லை. ஐகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் மட்டுமே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியும். கடந்த, 2008, ஜனவரியில் இருந்து, ஜூலை வரை, ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயம் செய்வது குறித்து, ராஜாவுக்கும், சிதம்பரத்துக்கும் இடையே, நான்கு சந்திப்புகள் நடந்துள்ளன. இந்த விஷயத்தில், சிதம்பரத்துக்கு நற்சான்று அளிக்க வேண்டும் என்பதில், சி.பி.ஐ., உறுதியாக இருப்பது போல் தோன்றுகிறது. இவ்வாறு சுப்ரமணியசாமி வாதாடினார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை, நாளைக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: