புதன், 21 செப்டம்பர், 2011

நீதிமன்றம் செல்வேன்: அமைச்சர் ஹக்கீம்

ஸியாரம் உடைப்புக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வேன்: அமைச்சர் ஹக்கீம்
'அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன். ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன்' என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'அநுராதபுரத்தில் ஸியாரமொன்று உடைக்கப்பட்டது. காவியுடை தரித்தவர்கள் சிலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். காக்கியுடை தரித்தவர்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படியானதொரு லட்சணத்தில் இந்த அரசாங்கத்தில் நான் ஓர் அமைச்சராக இருக்கின்றேன். இதைப் பார்த்துக் கொண்டு என்னால் கோபப்படாமல் இருக்க முடியாது. மு.காங்கிரசின் தலைவருக்கு இவற்றினைப் பார்த்தால் கோபம் வரத்தான் செய்யும்.
அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தவர் ஒருவருடன் இன்று காலை கடுமையான வாக்குவாதமொன்றில் ஈடுபட்டேன். அப்போது அவரிடம் நான் கூறினேன்.

இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டமைக்கும், அநுராதபுரத்தில் ஸியாரம் உடைக்கப்பட்டமைக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசங்களையும் நான் காணவில்லை. பாபர் மஸ்ஜித்தினை உடைத்த காவியுடை தரித்த இந்துத் தீவிரவாதிகளும், இங்குள்ள காவியுடை தரித்தவர்களுக்கும் இடையில் எங்களால் வேறுபாடு காண முடியவில்லை.

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்டோர் அங்கு நீதிமன்றம் சென்றனர். ஓரளவு நியாயமும் வழங்கப்பட்டது. அதேபோன்று, அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன்.

ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன் என்று அந்த உயர் மட்டத்தவரிடம் நான் கூறிய நிலையில்தான் - அரசாங்கத்தின் செலவில் அந்த ஸியாரத்தினை மீண்டும் கட்டித்தருவதாக அறிவித்தல் வந்திருக்கின்றது.

இதுபோல இன்னுமொரு விடயமும் உள்ளது. அரசாங்கத்திலுள்ள அந்த நபர் எனக்கும் கூட்டாளிதான். ஆனால், சிலவேளைகளில் காட்டு தர்பார் நடத்துவார். ஒரு தடவை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டினார். பிறகு – தான் அவரைக் கட்டவில்லை என்றும் குறித்த உத்தியோகத்தர் தன்னைத் தானே கயிற்றால் கட்டிக் கொண்டதாகவும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்னரும் அந்த நபர் ஓர் அறிக்கை விடுகிறார். அதாவது, மாடுகளை அறுப்பவர்களைக் கண்டால் அவர்களின் கைகளை வெட்டுவேன் என்கிறார். இந்தக் காட்டுத் தர்பார் மிகவும் மோசமானதாகும். இதைக் கேட்டுக் கொண்டு என்னால் பேசாமல் இருக்க முடியாது. இவ்வாறான கூற்றுகளும் செயற்பாடுகளும் மிகப் பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும். இந்த நிலையில், இவ்விடயங்களை நாமும் மிகப் பக்குவமாக அணுக வேண்டியுமுள்ளது.

இன்னும் சில நாட்களில் ஹஜ் பெருநாள் வருகின்றது. அப்போது மாடுகளை அறுத்து உழ்ஹியா எனும் மார்க்கக் கடமையினை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்போது என்ன நடக்கின்றது என்பதைப் பார்ப்போம். அதேவேளை, முஸ்லிம்களாகிய நாமும் சற்று பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள பிரச்சினையை மேலும் ஊதி வளர்த்து விடும் வகையில் நடந்து கொள்ளாமல் உழ்ஹியாவை மேற்கொள்ளும் போது – சாதுரியமாகச் செயற்பட வேண்டும்.

எது எவ்வாறினும், கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்கிற காட்டுத் தர்பார்களையெல்லாம் அனுமதிக்க முடியாது. மு.கா. தலைமைத்துவம் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கவும் மாட்டாது.

நமது சமூகத்துக்கு அபிவிருத்தி தேவைதான். ஆனால், முதுகெலும்புடன்தான் அதை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைவிடுத்து, அரசின் முன்னால் நாலாக – எட்டாக மடிந்து வளைந்து கொண்டு, தருவதைத் தாருங்கள் நாம் எதுவும் பேச மாட்டோம் எனக் கூறி, ஒரு மூலையில் மடங்கிக் கிடக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் முடியாது".
தமிழ்மிரர்

கருத்துகள் இல்லை: