வியாழன், 22 செப்டம்பர், 2011

மாநில தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் கைப்பாவை



கடலூர் : ஜெயலலிதாவின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இதற்கு சட்டரீதியாக நீதிமன்றத்தை நாட உள்ளோம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். நில அபகரிப்பு வழக்கு, முதல்வரை அவதூறாக பேசிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேரு ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.
பின்னர், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கே.என்.நேரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜெயலலிதாவின் சர்வாதிகார, அராஜக ஆட்சிக்கு திருச்சி இடைத்தேர்தல் மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவர். ஜெயலலிதாவின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றத்தை நாட உள்ளோம்’’ என்றார்.
போலீஸ் கெடுபிடி: முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடியை ஸ்டாலின் சந்திக்க வந்ததை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் திமுகவினர் குவிந்திருந்தனர். காலையில் சிறைச்சாலையின் முதல் வாயில் மட்டும் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்டாலின் வருகையின் போது அனைத்து வாயில்களும் தடுப்பு அமைக்கப்பட்டு போலீசார் அரண் போல் நின்றனர்.

முக்கிய பிரமுகர்கள், மனு கொடுத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. போலீசாரின் கெடுபிடியில் பத்திரிக்கையாளர்கள், காரைக்கால் எம்எல்ஏ நாஜீம் உள்ளிட்ட சிலர் சிக்கி கொண்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  போலீஸ் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

கருத்துகள் இல்லை: