நியூயார்க், செப்.23: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறு இல்லை என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடந்திருப்பதாகவும், கடுமையான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை அதிபர் ராஜபட்சவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பல அதிபர் ராஜபட்சவின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன.
ஐ.நா. சபை பொதுக்குழுக் கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் நியூயார்க் வந்திருக்கிறார்கள். ஐ.நா. சபையின் கூட்டத்தில் இந்திய நிலைப்பாடு பற்றியும், பொதுக்குழு விவாதிக்க உள்ள பிரச்னைகள் பற்றியும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கினார் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி.
"ஐ.நா. சபையின் பொதுக்குழு என்பது வேறு, ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடு வேறு.
ஐ.நா. சபையின் அங்கமாக மனித உரிமை ஆணையம் இருந்தாலும் அந்த ஆணையத்தின் அறிக்கைகளும் முடிவுகளும் ஐ.நா.வின் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை. பெருவாரியான உறுப்பினர் நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை பற்றி விவாதிக்க வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே பொதுக்குழுவில் அந்த விவகாரம் பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படும். அதற்கும்கூட முன்னமேயே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், வேறு எந்த நாடும் இந்தப் பிரச்னையில் நேரடியாக அக்கறை காட்டாத நிலையில் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் பற்றியோ அவர்களது மறுவாழ்வு பற்றியோ பிரச்னை எதுவும் எழுப்பப்படும் சாத்தியமே கிடையாது' என்று ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபட்ச பேசும்போது 95 சதவிகிதம் தமிழர்கள் சகஜவாழ்வுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்திருப்பதாலும், இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையில் மௌனம் சாதிப்பதாலும் ஈழத் தமிழர் பிரச்னையோ, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றியோ தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. சபையின் பொதுக்குழு விவாதிக்காது என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக