வியாழன், 22 செப்டம்பர், 2011

சென்னை மாநகராட்சி மேயர்


சட்டமன்றத் தேர்தலைப் போலவே, உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையைத் துவக்காமலே 10 மாநகராட்சிகளுக்குரிய அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. இதில், சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார் சைதை துரைசாமி.


""சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் சைதை துரைசாமியை கார்டனுக்கு அழைத்துப் பேசிய ஜெயலலிதா, "தேர்தலில் தோற்றுப்போனதற்காக வருத்தப்படாதீர்கள். உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகராட்சி மேயர் நீங்கள்தான்'னு சொல்லி அனுப்பினார். இதை அப்போதே நக்கீரனில் பதிவு செய்திருந்தீர்கள். அன்னிக்கு கொடுத்த உறுதிமொழியை இன்னிக்கு நிறைவேத்திட்டார் ஜெயலலிதா'' என்று சைதை துரைசாமி, வேட்பாளராக அறிவிக்கப் பட்டதும் பழையதை நினைவுகூர்கிறார்கள் சென்னை அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள். மேலும், சைதை துரைசாமிக்கு ஆதரவான உளவுத்துறையினரின் ரிப்போர்ட்டும் அவரை பரிசீலிக்க ஜெ.வுக்கு உதவியதாகவும் சொல்கின்றனர்.

சைதை துரைசாமி களமிறக்கப்பட்டது குறித்து அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களிடம் பேசியபோது... ""உள்ளாட்சி அமைப்பு என்பது மக்களிடம் நேரடியாக தொடர்புகொண்டது. இதில் கட்சிக்காரர்கள் சின்ன தப்பு பண்ணினாலும் அது, ஒட்டுமொத்த கட்சியையும் ஆட்சியையும் பாதிக்கும். அதனால் உள்ளாட்சி அமைப்பின் தலைமைப் பதவியான மேயருக்கு வருபவர் அதிரடி அரசியல்வாதியாக இல்லாமல் மக்களிடம் "அமைதியான அரசியல்வாதி' என பெயரெடுத்தவராக இருக்க வேண்டுமென்று நினைத்தே சைதை துரைசாமியை தேர்வு செய்தார் ஜெயலலிதா'' என்கிறார்கள்.

மேலும் இவர்கள், ""ஜெயலலிதா நினைப்பதுபோல, காண்ட்ராவர்ஸி இல்லாத நபர் என்கிற முத்திரை சென்னை மக்களிடம் இவருக்குத்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட சைதை துரைசாமி எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து அவ்வப்போது ஒதுங்கியிருந்தாலும் சமூகத்தில் பிரபலமாகவே இருந்து வருகிறார்.

தமிழக ஏழை இளைஞர்களை ஐ.ஏ.எஸ். ஆக்குவது என்பது இவரது கனவு. இதற்காக மனிதநேய அறக்கட்டளையை துவக்கி கடந்த 15 வருடமாக இலவச ஐ.ஏ.எஸ். அகாடமியை நடத்தி வருகிறார். இதன்மூலம் சென்னை மக்களின் பரவலான நல்மதிப்பை பெற்றிருக்கிறார். அத்துடன், இலவச கல்யாண மண்டபம் துவக்கி வருஷத்துக்கு 2000 திருமணங்களை நடத்தி வருகிறார் சைதை துரைசாமி. மேலும், இறந்தவர்களின் உடலை பாதுகாத்து மயானத்துக்கு எடுத்துச் செல்லும் குளிர்சாதன பெட்டியை இலவசமாக தனது அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார். இதுதவிர, கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி என தினசரி தன்னை சந்திக்கும் சென்னைவாசிகளுக்கு மனிதநேய அறக்கட்டளை மூலம் கண்ணுக்குத் தெரியாமல் எண்ணற்ற சமூக சேவைகளை செய்து வருவதன் மூலமும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறார் இவர். சைதை துரைசாமியின் சமூக சேவையும், ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருப்பதும் இவரது வெற்றிக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கிறது'' என்று சுட்டிக் காட்டுகின்றனர். சென்னை மக்களிடம் பரவலாக விசா ரித்தபோதும், ""ஜெயலலிதாவின் தேர்வு குட்!'' என்கிற பதிலே வருகிறது.

அ.தி.மு.க.வின் தலைமைக் கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, ""ஜெயலலிதாவிடமும் மக்களிடமும் குட் புக்கில் சைதை துரைசாமி இருந்தாலும்... அ.தி.மு.க. சென்னை வி.ஐ.பி.க்கள் பலருக்கு இவரது வளர்ச்சி பிடிக்கவில்லை. குறிப்பாக, சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர் செந்தமிழன், எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், பாலகங்கா மற்றும் ஆதிராஜாராம் உள்ளிட்டவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதில் மைத்ரேயன், பாலகங்கா, ஆதிராஜாராம் போன்றோர் மேயர் வேட்பாளர் ஆகவும் விரும்பினர். காரணம், எம்.பி.க்களாக இருப்பதைக் காட்டிலும் மாநில அரசில் பவர்ஃபுல்லாக இருக்கவே மைத்ரேயனும் பாலகங்காவும் விரும்புகிறார்கள். அந்த வகையில், "அரசியலுக்கு சைதை துரைசாமி ராசி இல்லாத வர்' என்று சில காய்களை நகர்த்தியும் பார்த்தனர். ஆனால் முடியவில்லை. சைதை துரைசாமி மேயராகி விட்டால்... சென்னையில் பவர்ஃபுல் ஆகிவிடுவார் என்கிற கிலி இப்போதே பலருக்கும் இருக்கிறது. அதனால் இவரது வெற்றிக்கு சென்னை அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் எப்படி உதவப் போகி றார்கள் என்பது ஒரு கேள்விக்குறிதான்!'' என்கின்றனர்.

இந்த வி.ஐ.பி.க்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, ""சட்டமன்ற தேர்தலில் சைதை துரைசாமிக்கு வாய்ப்பு தரப்பட்டபோது, இப்படிப்பட்ட எதிர்சிந்தனை இருந்தது உண்மைதான். காரணம், "இவர் எம்.எல்.ஏ. ஆகிவிட்டால் சென்னை யில் பவர்ஃபுல்லாகி விடுவார்... தங்களுக்கு கிடைக்கிற மந்திரி பதவி பறிபோகும்' என்று என நினைத்தே இவரது வெற்றியை பலரும் விரும்பாமல் இருந்தனர். ஆனால், அப்படிப்பட்ட சிந்தனை இப்போது இல்லை. சைதை துரைசாமிக்கு எதிரானவர்களே, மேயர் போட்டிக்கு இவர் தகுதியானவர்தான் என்றே சொல்கின்றனர். அதனால், இப்போதைக்கு கட்சியில் அவருக்கு எதிரிகள் இல்லை'' என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

அ.தி.மு.க.வின் மேயர் வேட்பாளரான சைதை துரைசாமியைச் சுற்றி இப்படிப்பட்ட ப்ளஸ், மைனஸ் இருக்கும் நிலையில், இவரை எதிர்த்து மக்கள் ஆதரவு உள்ள ஒருவரைத்தான் தி.மு.க. களமிறக்க நினைக்கிறது.

இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, ""சென்னையின் சிட்டிங் மேயரான மா.சுப்ரமணியனை தவிர்த்து வேறு பரிசீலனை இல்லையென்பது மு.க.ஸ்டாலின் முடிவாக இருக்கிறது. காரணம், சென்னை மேயராக தான் இருந்ததை விட மக்களிடம் அதிக நெருக்கமாக இருந்தவர் மா.சு.தான் என்கிற எண்ணம் ஸ்டாலினுக்கு உண்டு. மேயராக 2006-ல் வெற்றி பெற்றதும் கலைஞரை சந்தித்தார் மா.சு. அப்போது, ""நல்ல மேயர்னு பேர் எடுக்க வேண்டும். அதைத்தான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்'' என்றார் கலைஞர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், மக்களிடம் நெருக்கமாக இருந்தார்.

இயல்பிலேயே எளிமையான இவர், மேயரானதும் மக்களை சந்திப்பதிலும் பந்தா இல்லாமல் எளிமையை கடைபிடித்தார். மக்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே தினசரி 10 இடங்களில் விழாக்களுக்கு ஏற்பாடு செய்து, அதன்மூலம் எளிமையான மேயர் என பெயரெடுத்தவர் மா.சுப்ரமணியன். சென்னை மக்களின் நலன் களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றியுள்ளார். பல திட்டங்கள் அவரது பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனால் தி.மு.க.வில் மீண்டும் மா.சு.தான் மேயர் வேட்பாளர்'' என்று விவரிக்கின்றனர்.

அதே சமயம், ""சென்னை மக்களிடமும் தி.மு.க. தலைமையிடத்திலும் "நல்ல மேயர்' என்று பெயரெடுத்திருந்தாலும் கடந்த 5 வருடங்களில் தி.மு.க. கவுன்சிலர்கள் நடத்திய அரா ஜகம்தான் மேயரின் வெற்றிக்கு பெருத்த தடை. இதை மா.சு. எப்படி எதிர்கொள்வார் என்பதில்தான் அவரது வெற்றி இருக்கிறது'' என்கிற குரல் களும் அறிவாலயத்தில் எதிரொலிக்கிறது.

-ஆர்.இளையசெல்வன்
thanks nakkeeran

கருத்துகள் இல்லை: