புதன், 21 செப்டம்பர், 2011

வந்தான் வென்றான் - ஒரே அம்மா... வேறு அப்பாக்கள் விமர்சனம்

Jeeva and Tapsee

அருமையான லொகேஷன்கள், இளசுகளைக் கவரும் காதல் காட்சிகள், துடிப்பான இசை, குறிப்பாக விலாநோக வைக்கும் சிரிப்புக்கு கேரண்டி தரும் சந்தானம்... எல்லாம் இருந்தும், வந்தான்... வென்றானா?

குத்துச் சண்டை வீரரான ஜீவா, ஒரு சிக்கலான நேரத்தில் டாப்ஸிக்கு உதவ, காதல் பற்றிக் கொள்கிறது. ஆனால் தன் அப்பா சொன்னால்தான் காதல், கல்யாணத்துக்கெல்லாம் சம்மதிக்க முடியும் என கறாராகச் சொல்லிவிடுகிறார் டாப்ஸி.
ஆனால் மும்பை தாதாக்களுக்கு இடையில் நடக்கும் மோதலில் தவறுதலாக டாப்ஸியின் பணக்காரத் தந்தை கொல்லப்படுகிறார்.தந்தையைக் கொன்றவனை பழிவாங்கினால்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என ஜீவாவிடம் டாப்ஸி சபதம் போட, வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட அந்த டான்களில் ஒருவரான நந்தாவைத் தேடிப் போய்ச் சந்திக்கிறார் ஜீவா.
அவரிடம் தனக்கும் டாப்ஸிக்குமான காதல் கதையைச் சொல்கிறார். இந்தக் காதலுக்கு குறுக்கே ஒரு பெரிய ரவுடி நிற்பதாகவும் அந்த தாதாவை சிறையில் தள்ள உதவுங்கள் என்றும் கேட்கிறார். 'யார் அந்த தாதா?’ என்று நந்தா கேட்க, 'நீதான்யா' என்கிறார் ஜீவா.
பின்னர் ஜீவாதான் தனது தம்பி (ஒரே அம்மா... வேறு அப்பாக்கள்!) என்பதைத் தெரிந்து கொள்ளும் நந்தா, தம்பியின் காதலுக்காக உயிரைத் தியாகம் செய்கிறாரா? நந்தாவுக்காக டாப்ஸியை உதறினாரா ஜீவா? அல்லது ஜீவாவும் டாப்ஸியும் காதலில் இணைந்தார்களா... என்பது க்ளைமாக்ஸ்.

கதையாக எழுதும்போது உள்ள சுவாரஸ்யம், இந்தப் படத்தைப் பார்க்கும் போது இல்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். ஏக ப்ளாஷ்பேக்குகள், முன்பாதியில் தெளிவற்ற திரைக்கதை போன்றவற்றால் படம் பெரிதாக கவராமல் போகிறது. குறிப்பாக அண்ணனிடம் தன் காதல் கதையை ஜீவா சொல்லும் விதம் நம்மை களைப்படைய வைக்கிறது.

ஜீவா - டாப்ஸி காதல் காட்சிகள் நன்றாக உள்ளன. ஆனால், டாப்ஸியிடம் ஏதோ ஒன்று குறைவதாய் ஒரு உணர்வு. குறிப்பாக அவரது வசன உச்சரிப்பு. முக்கிய காட்சிகளில் நடிப்பு வர மறுக்கிறது இந்தப் பெண்ணுக்கு.

ஜீவாவும் கூட பெரிய ஈர்ப்புடன் இந்தப் படத்தை நடிக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது அவர் தொடர்பான காட்சிகள்.
படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம். அவரது காமெடி மனதில் பதிகிறதோ இல்லையோ, வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது.
நந்தாவை பெரிய மும்பை டான் என ஏற்க மட்டுமல்ல, நம்பவும் முடியவில்லை!
தமனின் இசையில் 'காஞ்சன மாலா....' மீண்டும் கேட்க வைக்கிறது. பிஜி முத்தையாவின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் மதிப்பைத் தருகிறது. பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் ஜீவா - டாப்ஸி காதல் காட்சிகளில் டாப்!
காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் அத்தனை மெனக்கெட்ட இயக்குநர் கண்ணன், திரைக்கதையை இன்னும் தெளிவாக, சுவாரஸ்யமாக அமைக்கத் தவறியதுதான் பிரச்சினையே.

ஆனால் சந்தானம் காமெடி மற்றும் கண்களைச் சிறைப்படுத்தும் அழகிய காட்சியமைப்புகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை: