வியாழன், 22 செப்டம்பர், 2011

55 வயது பெண்ணை கொன்று நகை திருடிய மூதாட்டி கைது !

  விக்ரோலியில், வீட்டில் தனியாக இருந்த 55 வயது பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு இருந்த நகை, மொபைலை திருடிய 61 வயது  மூதாட்டியை போலீசார் நேற்று கைது செய்தனர். விக்ரோலி கிழக்கு, கண்ணம்வார் நகரை சேர்ந்த பெண் லத்திகா கிருஷ்ணா காம்ப்ளே(55). கடந்த 14ம் தேதியன்று  பிற்பகலில் லத்திகா வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த ஒரு மொபைல் போன்  உட்பட பீ56 ஆயிரம் மதிப்பு பொருட்கள் திருடப்பட்டது.
லத்திகாவுடன் சேர்த்து மும்பையில் கடந்த ஒரு மாத காலத்தில் 6 மூதாட்டிகள் இதே மாதிரி கொலை செய்யப்பட்டு நகை, பணம் திருடப்பட்டது. இது  பொதுமக்களிடையே, குறிப்பாக மும்பையில் வசிக்கும் முதியவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியது.முதியவர்கள் கொலை தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சு ராய், உதவி கமிஷனர் தேவன் பாரதி ஆகியோர் தலைமையில் போலீசார் இந்த  வழக்குகளை விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, விக்ரோலியில் லத்திகா வசித்து வந்த பகுதியில் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். 14ம் தேதியன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து  மாலை 6 மணி வரைக்குட்பட்ட நேரத்தில்தான் லத்திகா கொலை செய்யப்பட்டார் என்பதால், அந்த நேரத்தில் கட்டிட வளாகத்தில் சேல்ஸ்மேன்கள் உள்ளிட்ட  வெளியாட்கள் யாராவது வந்து சென்றார்களா என்று விசாரித்த போது, அப்படி யாரும் அன்றைய தினம் வரவில்லை என்பது தெரியவந்தது.இதனால், போலீசார் லத்திகா  வசித்து வந்த கட்டிடத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்தனர். லத்திகா வசித்து வந்த அதே மாடியில் அவரது உறவினரான லக்ஷ்மிபாய் என்ற அக்கா தவுலத் டாங்க்ளே  என்ற 61 வயது மூதாட்டி வசிப்பது தெரிந்தது.
போலீசார் லக்ஷ்மிபாயிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், லக்ஷ்மிபாய் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது,  லத்திகா வீட்டு பீரோ சாவி கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வந்த போலீசார் லக்ஷ்மிபாயிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போது, அவர் உண்மையை  ஒப்புக் கொண்டார்.லத்திகா ஓரளவு வசதியுடன் வாழ்ந்து வந்தார். அவரிடம் சுமார் 25 பவுன் நகைகளும் பெரும் தொகையும் இருந்ததாக லக்ஷ்மிபாய் நம்பினார். இந்த  நகைகளையும், பணத்தையும் அபகரிக்க திட்டமிட்ட லக்ஷ்மிபாய் சம்பவத்தன்று லக்ஷ்மிபாய் வீட்டுக்கு சென்று, ஒரு மொசைக் கல்லால் லத்திகா பின்னந்தலையில்  தாக்கியுள்ளார். இதில் லத்திகா அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.
அதன் பிறகு பீரோவை திறந்த லக்ஷ்மிபாய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. பீரோவில் பீ13 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மொபைல் போன் மட்டுமே இருந்தது. அந்த மொபைலை  எடுத்துக் கொண்ட லக்ஷ்மிபாய், லத்திகா அணிந்திருந்த நகைகளையும் திருடியுள்ளார்.இந்த உண்மைகளை லக்ஷ்மிபாய் ஒத்துக் கொண்டதையடுத்து போலீசார் நேற்று  அவரை கைது செய்தனர். இந்த தகவல்களை நேற்று மாலை நடந்த நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்த குற்றப்பிரிவு போலீஸ் கமிஷனர் ஹிமான்சு ராய், நகைக்காக 61  வயது மூதாட்டி ஒருவர் மற்றொரு மூதாட்டியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.
கைது செய்யப்பட்ட லக்ஷ்மிபாயிடம் இருந்து லத்திகாவின் தங்கச் செயின், மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கல் பறிமுதல் செய் யப்பட்டதாகவும் ஹிமான்சு ராய்  தெரிவித்தார்.விக்ரோலியில், வீட்டில் தனியாக இருந்த 55 வயது பெண்ணை கல்லால் தாக்கி கொன்று நகை திருடிய 61 வயது மூதாட்டியை போலீசார் நேற்று கைது  செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கல்லை காண்பித்து குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர்  ஹிமான்சு ராய், அதிகாரிகள் பேட்டியளிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: