சேலம்:சேலம் மாவட்டத்தில் நிலம், சீட்டு
மோசடி, ரவுடியிசம், மக்களுக்கு இடையூறு உள்ளிட்ட செயல்களில்,
அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள்
கொதிப்படைந்திருப்பதால், வரும் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலில்,
அ.தி.மு.க.,வுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அக்கட்சியினர்
புலம்புகின்றனர்.கடந்த, தி.மு.க., ஆட்சியில், மந்திரி முதல்
மாநகராட்சி கவுன்சிலர் வரை, பணம், நிலம், வீடு என கிடைத்ததையெல்லாம்
சுருட்டி போட்டு, பொதுமக்களை அந்த கட்சியினர் கடும்
சிரமத்துக்குள்ளாக்கினர்.தேர்தல் எப்போது வரும், பிரச்னையெல்லாம் எப்போது
தீரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். சட்டசபை தேர்தலில்,
தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்து வெற்றி பெற
செய்தனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த, அ.தி.மு.க.,வினர், தற்போது,
தி.மு.க.,வினரைப் போன்று, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி
வருகின்றனர்.புகாருக்கு ஆளாகும் நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா, கட்சியில்
இருந்து அதிரடியாக நீக்கியபோதும், பல நிர்வாகிகள், மந்திரி,
எம்.எல்.ஏ.,க்களை கைக்குள் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.