திங்கள், 7 அக்டோபர், 2013

The Hindu: இந்துத்துவ இயக்கங்களுக்கு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்பு

மாலேகான் குற்றம் சாட்டப்பட்டவர்கள்டந்த மூன்று மாதங்களாக ஷப்பீர் அஹ்மத் வாஸியுல்லா தனது காலை நேரங்களை மாலேகானின் டி.எம் உயர்நிலைப் பள்ளியில் தான் கழிக்கிறார். அவரது மகன் மாஸின் வகுப்பறைக்கு வெளியே நான்கு மணி நேரங்கள் பொறுமையாகக் காத்திருக்கிறார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே 11 வயதான மாஸ் தனது தந்தை அமர்ந்திருப்பதை அடிக்கடி எட்டிப் பார்த்து உறுதிப் படுத்திக் கொள்கிறான்.

பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முஸ்லீம்கள்.
கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் நாள் மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரின் நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் அவர்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் போலீசார், ஷப்பீரை இழுத்துச் செல்கின்றனர். அப்போது மாஸ் நான்கு வயதுச் சிறுவன்.

ஒரே இரவில் சிறுவன் மாஸின் தந்தை பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுகிறார். இதனால் சக மாணவர்களின் கேலி கிண்டல்களால் மாஸ் பள்ளி செல்வதையே நிறுத்தினான். சுமார் ஏழு வருடங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்தான்.
2011-ம் ஆண்டு ஷப்பீர் பிணையில் வெளியே வந்தார். எனினும், அவரது மகனை மீண்டும் பள்ளியில் சேர்க்க இரண்டு ஆண்டுகள் ஆனது. ”சிறையிலிருந்து வெளியே வந்து முதன் முறையாக எனது மகனைத் கட்டித் தழுவிய போது அவன் அதிகம் பேசவில்லை. பள்ளிக்குச் செல்வது குறித்து கேட்ட போது அவன் முற்றாக மறுத்து விட்டான்”.
“நான் பள்ளிக்குச் சென்றால், போலீசு உங்களை மீண்டும் கைது செய்து விடும் என்றான். எனவே அவனது வகுப்புகள் முடியும் வரை நான் அவனது வகுப்பறைக்கு வெளியே காத்திருக்கிறேன்” என்கிறார் ஷப்பீர். முன்பு சொந்தமாக பாட்டரிகள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்த ஷப்பீர் தற்போது சிறையில் கற்றுக் கொண்ட அக்குபிரஷர் மருத்துவத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.
சுவாமி அசீமானந்தா
அசீமானந்தா
விசைத்தறிகளின் நகரமான மாலேகான் முன்பொரு காலத்தில் தடை செய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்தின் மையமாக இருந்தது. மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடன் கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி இசுலாமியர்களில் ஷப்பீரும் ஒருவர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்காக கைது செய்யப்பட்ட சுவாமி அசீமானந்தா,  தான் சார்ந்திருந்த வலது சாரி இந்துத்துவ இயக்கமே மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டிருந்த ஒன்பது இசுலாமியர்களும் 2011-ம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மாலேகான் வழக்கு முதலில் மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாராலும், பின்னர் சிபிஐ-யினாலும் விசாரிக்கப்பட்டு வந்தது. அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்து வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆகஸ்டு மாத இறுதியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும், அவர்களின் விடுதலைக் கோரிக்கையைத் தாம் எதிர்க்கப் போவதில்லையென்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது தேசிய புலனாய்வுத் துறை.
ஆக, கைது செய்யப்பட்டு ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் இவர்கள் ஒன்பது பேரும் அப்பாவிகள் என்று அறிவிக்கப்பட்டு வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்படும் தருவாயில் இருக்கிறார்கள்.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் நாங்கள் 56 வயதான ஷம்சுத்தா ஸோஹாவைச் சந்தித்தோம். இவர் இவ்வழக்கில் முதன் முதலாக கைது செய்யப்பட்ட நூருல் ஹூடாவின் தாய். ஹூடா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்; இதன் விளைவாகவே இன்று வரை அவர் தாயார் இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறார். ”நான் கதவின் அருகாகப் படுத்துக் கொள்கிறேன். இரவு முழுவதும் அதன் இடுக்குகளின் வழியே போலீசார் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருப்பேன். எனது மகனை விசாரித்து விட்டு பத்து நிமிடங்களில் அனுப்பி வைப்பதாகச் சொல்லி இழுத்துச் சென்றனர். அவன் ஐந்தரை ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தான்” என்கிறார் அந்தத் தாய்.
மகன் தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில் யாரும் அவரது மகள்களைத் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. “பயங்கரவாதியின் சகோதரியை யாரும் கலியாணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று என் உறவினர்களிடம் பலரும் சொல்லி விட்டனர்” கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரின் ஊடே சொல்கிறார். நூருலின் விடுதலைக்குப் பின் இப்போது ஒருவழியாக அவரது மகள்களுக்குத் திருமணமாகியுள்ளது.
ஷப்பீரின் பாட்டரி கடையில் ரூ 5,000 மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார் நூர். தற்போது தேசிய நெடுஞ்சாலை 3-ன் ஓரமாக ஒரு பழைய மளிகைக் கடையை நடத்தி வருகிறார். ”இந்தத் தொழிலைத் துவங்க ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறேன். ஆனால், ஒரு மாதத்திற்கு 1,500 ரூபாய் தான் சம்பாதிக்க முடிகிறது” என்கிறார் நூர். இந்த தொகையைக் கொண்டு குடும்ப செலவுகளைச் சமாளிக்கவே தடுமாறும் நூரால் அவரது சொந்த சிகிச்சைக்கான செலவுகளைச் சமாளிக்கவே முடிவதில்லை. ”சிறையில் வாங்கிய அடிகளால் தலையில் இரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து இரத்தம் வழியும் போது யாரோ எனது தலையில் ஓட்டை போடுவதைப் போல் உணர்கிறேன்” என்கிறார் நூர்.
பாப்ரி போஸ்டர்களுக்காக கைது
மாலேகானின் உட்பகுதி ஒன்றில் நாங்கள் மௌலானா ஸாகித் அப்துல் மஜீத்தை சந்தித்தோம். முன்பொரு காலத்தில் மதகுருவாக இருந்த மஜீத், தற்போது விறகு வெட்டியாக காலம் தள்ளுகிறார். இதில் வருமானமாக அவருக்கு மாதம் 1,000 ரூபாய் கிடைக்கிறது. தார்பாலின் கூரை வேயப்பட்ட சிதிலமடைந்த வீட்டில் வசித்து வருகிறார் மஜீத். எட்டுமாத கர்ப்பிணியான அவரது மனைவி, நம் மனதைப் பிசையும் படியாக மிகவும் மெலிந்திருக்கிறார்.
விடுவிக்கப்பட்ட போது
நவம்பர் 2011-ல் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட போது. (படம் : நன்றி தி ஹிந்து)
மௌலானா ஸாகித் 1998-ம் ஆண்டு முதன் முதலாக போலீசு கண்காணிப்பின் கீழ் வந்துள்ளார். ”பாபரி மஸ்ஜித் (இடிப்பைக் கண்டித்து) போஸ்டர் ஒட்டியதாக என்மீது வழக்குப் பதியப்பட்டது. அதன் பின் என்னை சந்தேகத்துரியவனாக கருதிய போலீசு பல முறை முன்னெச்சரிக்கையாக கைது செய்துள்ளது” என்று சொல்லும் மஜீத்தின் வாழ்க்கை அவரது 2006-ம் ஆண்டு கைதுக்குப் பின் முற்றிலும் மாறிப் போனது. ”எனது தந்தை என்னை தலை முழுகி விட்டார். 2006 அவுரங்காபாத் ஆயுத வழக்கில் எனது சகோதரன் கைது செய்யப்படுவதற்கு என்னை பழி சொல்கிறார்” என்றார் மஜீத்.
வினோதம் என்னவென்றால் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனைந்த வழக்கு மொத்தமும் போலீசு ஆள்காட்டி அப்ரார் அஹ்மத் எனும் ஒரே நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தையே அடிப்படையாக கொண்டிருந்தது. அவர் தான் கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்களையும் இவ்வழக்கில் சிக்க வைத்தார். கடைசியில் பயங்கரவாத தடுப்புப் போலீஸ் அப்ரார் அஹ்மத்தையும் கைது செய்தது. அவர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தை 2009-ல் மாற்றிக் கொண்டார். எனினும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் சி.பி.ஐயும் அதைப் புறக்கணித்தனர்.
ஆனால் 2011-ல் அசீமானந்தா இந்துத்துவ இயக்கங்களுக்கு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதை உறுதி செய்த பின் வழக்கு தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின்னரே ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் பிறிதிடமிருப்பு (அலிபி) கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது. மாலேகானில் வெடித்த குண்டுகளில் ஒன்றை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மௌலானா ஸாகித், அந்தக் குறிப்பிட்ட நாளில் தான் அந்த ஊரிலேயே இல்லை என்கிறார். “சம்பவம் நடந்த அன்று நான் யாவாட்மல் நகரில் இருந்ததாக இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக தேசிய புலனாய்வுத் துறை அதை நம்பியது” என்கிறார்.
அனேகமாக இவ்வழக்கை விசாரித்து வரும் மும்பை செஷன்ஸ் கோர்ட் அக்டோபர் 19-ம் தேதியன்று இவர்களை வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கும் மனு மீதான தீர்ப்பை அளிக்கலாம்.
வெறும் சம்பிரதாயமாக கருதப்படும் இந்த விடுதலையும் கூட இந்துத்துவ இயக்கங்களால் எதிர்க்கப்படலாம். அவ்வாறு நடந்தால் இவர்களின் விடுதலை மேலும் தாமதமாகக் கூடும். அது வரை ஷப்பீர் மாஸியுல்லாவும் பிறரும் காத்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
நன்றி : ராஷ்மி ராஜ்புட்  – The Hindu      vinavu.com

கருத்துகள் இல்லை: