ஞாயிறு, 6 அக்டோபர், 2013

ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட வினோதினி தாயார் தற்கொலை

‘ஆசிட்’ வீசி கொலை செய்யப்பட்ட காரைக்கால் பெண் என்ஜினீயர் வினோதினி தாயார் தற்கொலைகாரைக்கால், அக்.6–
ஒருதலை காதலில் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட காரைக்கால் பெண் என்ஜினீயர் வினோதினியின் தாயார் தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இவர்களுடைய மகள் வினோதினி (23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.
வினோதினியின் குடும்ப நண்பர், காரைக்கால் திருவெட்டக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் (33). இவருக்கு வினோதினியின் மீது ஒருதலை காதல் ஏற்பட்டது. ஆனால் அவரது காதலை வினோதினி ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் கடந்த ஆண்டு நவம்பர் 14–ந் தேதி வினோதினி மீது ‘ஆசிட்’ வீசினார். முகம், உடல் வெந்த வினோதினி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12–ந் தேதி இறந்தார். வினோதினி கொலை வழக்கில் சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பளித்தது. எனவே சுரேஷ்குமார் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலையுண்ட வினோதினியின் நினைவு அவரது பெற்றோரை வாட்டி வதைத்தது. எனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பு சரஸ்வதியின் சொந்த ஊரான சீர்காழி அருகே உள்ள திருக்கடையூர் சென்று வசித்து வந்தனர். எனினும் மகள் இறந்த துயரில் இருந்து விடுபட முடியாமல் சரஸ்வதி தவித்து வந்தார்.
எனவே மகளை இழந்து வாழ்வதைவிட உயிர் விடுவதே மேல் என விபரீத முடிவு செய்தார். அதையடுத்து நேற்று இரவு சரஸ்வதி தனது வீட்டில் விஷம் குடித்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு திருக்கடையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை கண்டு ஜெயபால் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. திருக்கடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வினோதினி கொலையுண்ட 8 மாதத்தில் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்கால், சிதம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: