சனி, 18 ஜூலை, 2026

சி.டி.விக்ரமரத்ன -சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்

 ilakkiyainfo.com : இலஞ்ச ஊழல்குற்றச்சாட்டுகள், துஷ்பிரயோகங்கள் , நிதி மோசடிகள்  உட்பட பாதாள உலக கோஷ்டியினர் உடனான தொடர்புகள், போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் என கடந்த ஆட்சி காலங்களில் இடம்பெற்ற சகல விதமான குற்றச் சம்பவங்கள் குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மறுபக்கம் முக்கியமான சாட்சிகள் மர்ம மரணத்தை தழுவி வருகின்றமை நாட்டு மக்களுக்கும் ஏன் அரசாங்கத்துக்கும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக விளங்கிய சி.டி.விக்ரமரத்ன தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டமை தற்போது பரபரப்பான சம்பவமாக மாறியுள்ளது.



17 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் அவரது அத்துறுகிரிய இல்லத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் பின்பு அயலவர்கள் சென்று பார்த்த போது அவர் ஒரு கையில் துப்பாக்கியுடன் கீழே விழுந்து கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

 முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் உயிர் மாய்ப்பு நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சி.டி.விக்ரமரட்ண கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட ஒருவர். ராஜபக்ச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராகவும் விசுவாசமானவராகவும் விளங்கியவர். 

தற்போதைய அரசாங்கம் நாட்டில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் பின்னணியில், இந்தத் திடீர் மரணம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் விசாரணைகளுக்கு அஞ்சி அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அரசியல் இரகசியங்கள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்துக் காவற்துறையினர் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Politics

இதே வேளை ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவரை கைது செய்வதற்கான காரணங்களை வாக்குமூலமாக கூறியவர் சி.டி.விக்ரமரட்ண என்பது முக்கிய விடயம். இவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே  கோட்டாபய மீது வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவ்வாறு கோட்டாபய மீது நடவடிக்கை எடுப்பதற்கு சி.டி.விக்ரமரட்ன வழங்கிய வாக்குமூலம் என்ன?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சாய்ந்தமருது பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் 'சாரா ஜெஸ்மின்' இல்லை என்பது இரண்டு டி.என்.ஏ. (DNA) அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், சடலங்களை தோண்டி எடுத்து மூன்றாவது முறையாகவும் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கடுமையான கருத்தை முன்வைத்தவர் சுரேஷ் சலே என்று கூறப்படுகிறது.World News

பாதுகாப்புச் சபை கூட்டங்களின் போது, அன்றைய காலகட்டத்தில் பொலிஸ் மா அதிபராக இருந்த சி.டி.விக்ரமரத்னவிற்கு, சுரேஷ் சலேயும் அதேபோன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருந்தனர்.

 இது குறித்து  சி.டி.விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னிலையில் இவை அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளதுடன், அவர் பொலிஸ் சேவையில் இருந்த காலத்தில் இது தொடர்பாக எழுதிய குறிப்புகளையும் சமர்ப்பித்துள்ளார். 

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இது தொடர்பாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் குறித்தும் அவர் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கும் திசை திருப்புவதற்கும் முயற்சித்தவர்களுக்கு, இந்த குறிப்புகள் இன்று வலுவான சான்றுகளாக மாறியுள்ளதால் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த குறிப்புகள் பலரை சிறையில் தள்ளும் அளவிற்கு பலம் வாய்ந்தவை எனக் கூறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியைத் தேடி வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பாக முதன்முதலில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலேயையே மடக்கியுள்ளனர். இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மிக உயர்மட்ட அதிகாரி இவராவார்.

புதிய விசாரணை நிலவரங்களின்படி, சுரேஷ் சலேயைத் தொடர்ந்து மேலும் பலரை வரிசையாக சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதன் அடிப்படையிலேயே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது. 

ஏனெனில், இந்த விசாரணையில் கோட்டாபய ராஜபக்ஷவும் ஒரு முக்கிய நபராக மாறியுள்ளார். இது குறித்து எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தும். அதற்காக அவரை நாட்டிற்குள் தடுத்து வைக்கும் நோக்கிலேயே வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. 

இதே வேளை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலைமையில் செயற்பட்ட பிரதான குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவும் இருந்துள்ளதாக இலண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி அதிர்ச்சி தகவல்களை முன்னதாகவே வெளியிட்டிருந்தமை முக்கிய விடயம்.   Geographic Reference

குண்டுத்தாக்குதல் இடம்பெற்றப் பின்னர் அன்றைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சுக் கட்டடத்தின் மேல் மாடியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், காலை ஒன்பது மணிக்கு குறித்த குழு கூடியுள்ளது.

அந்தக் குழுவில் சரத் வீரசேகர, ஜெனரல் ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன, அப்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன  ஆகியோரே முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலங்கையின் பொலிஸ் மா அதிபர் அன்று குற்றவாளிகளைப் பிடிக்கும் இடத்தில் இருக்கவில்லை.

சாட்சியங்களை அழித்த விதம்

சீருடையை அணிந்து கொண்டு சரத் வீரசேகர போன்றவர்களுடன் இணைந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பெருமளவிலான சாட்சியங்களை அழித்துள்ளார். அதில் முக்கியமானது உயிருள்ள சாட்சியாக இருந்த 'சாரா ஜஸ்மின்' இறந்துவிட்டார் என்று காட்டுவதற்காக, மூன்றாவது டி.என்.ஏ (DNA) பரிசோதனையைச் செய்வதற்கு முன்பு முதலாவது, இரண்டாவது என்று சிலவற்றை செய்துள்ளார்கள்.Politics

 இந்தக் குழுவினர்  நடத்தும் கூட்டத்திற்கு வேறு யாருமே செல்ல முடியாது. அன்றைய தினம் அந்தக் கட்டடத்திற்கு சுரேஷ் சலே வந்தவுடன், அனைத்துக் கதவுகளும் முழுமையாக மூடப்படும். இராணுவம் நிறுத்தப்படும். 

இந்தக் கலந்துரையாடல் முடியும் வரை கமாண்டோக்கள் (Commandos) கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். அந்தக் கலந்துரையாடலில்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சாரா ஜஸ்மின் இறந்துவிட்டார் என்பதை காட்ட வேண்டும் என்பதுதான் சுரேஷ் சலேயின் தீர்மானமாக இருந்தது.  

  சுரேஷ் சலே போன்றவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சென்று விரிவுரைகள்நடத்தினார்கள். விரிவுரைகள் நடத்திய ஆட்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வரவழைத்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.இலங்கை செய்திகள்

இதை ஒரு மிக கட்சிதமான நாடகமாக உருவாக்கினார்கள். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுரேஷ் சலே, சி.டி. விக்ரமரத்ன, ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன ஆகியோர் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் திங்கட்கிழமை காலையில் நடத்திய அந்த இரகசியக் கலந்துரையாடல்கள் என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும்  என  இது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சி.டி.விக்ரமரத்னவையும் சுரேஷ் சாலேவையும் இவ்வாறு இயக்கியவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவாக இருக்கலாம் என்பதே குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு எழுந்த சந்தேகம். அதை சுரேஷ் சாலே மறைத்ததாலும் தனது மடிக்கணணி கடவுச் சொல்லை தர மாட்டேன் என்ற காரணத்தினாலும் அவர் தொடர்ந்தம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். 

ஆனால் சி.டி.விக்ரமரட்ன வழங்கிய வாக்குமூலத்தின் பின்னரே சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டார் என்பதும் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான வலுவான காரணங்கள் எழுந்தன என்பதும் உண்மை.

மேலதிகமான தகவல்களை வெளிப்படுத்த சி.டி.விக்ரமரத்ன தயாராக இருந்ததாக கூறப்படுகின்றது. அதை தடுக்கும் முகமாக அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் யாராவது அச்சறுத்துலை விடுத்திருக்கலாம். அல்லது அவரை மன உளைச்சலுக்குட்படுத்தும் விதமாக சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். அதனால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது அவரது வீட்டில் பதுங்கியிருந்த எவராவது அவரை சுட்டுக்கொலை செய்து விட்டு இதை ஒரு தற்கொலை சம்பவமாக மாற்றியிருக்கின்றார்களா என்பது விசாரணைகளின் பின்னரே தெரிய வரும். 

சி.சி.என்

கருத்துகள் இல்லை: