செவ்வாய், 14 ஜூலை, 2026

சுதந்திரத்தையும் விடுதலையையும் சிங்களவர்களை விட ஈழத்தமிழர்களே அனுபவிக்கின்றார்கள்

 இன்றைய காலகட்டத்தில் புலிகளின் அழிவினால் உருவாகிய  சுதந்திரத்தையும் விடுதலையையும் சிங்களவர்களை விட உச்சபட்சமாக ஈழத்தமிழர்களே அனுபவிக்கின்றார்கள் - அருண் சித்தார்த் 
Arulanandam Arun  : யாழ் பூப்புனித நீராட்டு விழா - 1- துப்பாக்கி முனையில் திணிக்கப்பட்ட ஒழுக்கம் 
புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வடக்கு–கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, கடுமையான சமூக மற்றும் உடை ஒழுங்குகள் அன்றைய காலத்தில் விதிக்கப்பட்டிருந்தன. 


குட்டைப் பாவாடை அணிய முடியாது. உடலை ஒட்டிய ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற ஆடைகள் அணிய முடியாது. உடல் உறுப்புகள் வெளிப்படும் அல்லது நவநாகரிகமாகக் கருதப்பட்ட ஆடை அலங்காரங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 
பெண்கள் சேலை, முழுப்பாவாடை அல்லது முழு உடலையும் மறைக்கும் சல்வார் போன்ற ஆடைகளையே அணிய வேண்டும் என்ற சமூக கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது.
அந்தக் காலத்தில், இக்கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் அவமானகரமான தண்டனைகள் வழங்கப்பட்டன. 
குட்டைப்பாவாடையுடன் வந்த பெண்ணொருவரை ஊசி நூலும் மேலதிக துணியும் கொடுத்து அவர் அணிந்து வந்த பாவாடையை முழுப்பாவைடையாக அதாவது கணுக்கால் வரை நீட்டி நீளமாக தைத்து அணிந்த பின்னரே அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் அத்தகைய அச்சச் சூழல் சமூகத்தில் நிலவியதாகவும் பலர் இன்று நினைவுகூர்கின்றனர்.
நான் ஊடகவியலாளராகப் பணியாற்றிய காலத்தில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தபோது, புலிகளின் புளியங்குளம் சோதனைச் சாவடியில் நான் கொண்டு வந்த ஆனந்த விகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  காரணம் நடிகைகளின் கவர்ச்சி ஆடைகள் அணிந்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததால் அவை “ஒழுக்கத்திற்கு முரணானவை” என்று கூறப்பட்டது.
புலிகளின் கட்டுபாட்டில் அன்று இருந்த அதே  பகுதிகளில் இன்று ஒருகாலத்தில் “தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரானது” என்று கூறப்பட்ட ஆடைகள், நடனங்கள், கொண்டாட்டங்கள் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுகின்றன. சமூக வலைத்தளங்களில் அவை ஆயிரக்கணக்கானோரால் பகிரப்படுகின்றன. இங்கே கீழே பதிவேற்றியிருக்கும் நடனம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரபலமான பூப்புனித நீராட்டு விழாவில் இடம்பெற்ற நடனமாகும். 
இதிலிருந்து நாம் எழுப்பும்  அரசியல் கேள்வி மிகவும் எளிமையானது.
ஒருகாலத்தில் “தமிழர் கலாச்சாரம்” என்ற பெயரில் பெண்களின் உடல், உடை, நடத்தைகளை கட்டுப்படுத்திய அரசியல், உண்மையில் கலாச்சாரத்தைப் பாதுகாத்ததா? அல்லது ஆயுதத்தின் வலிமையால் ஒரு குறிப்பிட்ட ஒழுக்கக் கோட்பாட்டை மக்கள்மீது திணித்ததா?
இன்று அந்த ஆயுத ஆட்சி இல்லாதபோது, அந்தக் கட்டுப்பாடுகளும் மறைந்துவிட்டனவே அவ்வாறாயின் அன்றைய கட்டுப்பாடுகளின் பொருள் என்ன?
அன்று “ஒழுக்கம்” எனக் கூறப்பட்ட விடயம் மக்கள் மனதில் இயல்பாக வேரூன்றிய ஒழுக்கம் அல்ல, அச்சத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டாய ஒழுக்கம் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
பிரெஞ்சு பெண்ணிய சிந்தனையாளர் சிமோன் தெ பூவா (Simone de Beauvoir), தனது The Second Sex நூலில் எழுதிய புகழ்பெற்ற வரிகள் இவை. 
“One is not born, but rather becomes, a woman.”
“பெண்ணாகப் பிறப்பதில்லை, சமூகமே ஒருவரைப் பெண்ணாக உருவாக்குகிறது.”
ஒரு சமூகத்தில் பெண் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அதிகாரம், மதம், தேசியவாதம், கலாச்சாரம் ஆகியவை சேர்ந்து உருவாக்குகின்றன. புலிகள் ஆட்சிக் காலத்திலும் அதுவே நடந்தது. 
ஆட்பற்றாக்குறைக்காக யுத்தகளத்தில் ஆயுத்தாரிகளாக ஆயுதப் போராட்டத்தில் பெண்களை இணைத்துக்கொண்டால் அது பெண் விடுதலையாகுமா? 
அவ்வாறெனில் பல முன்னாள் பெண் போராளிகள் இன்று தமது குடிகார கணவன்மாரிடம் அடிவாங்கி வாழும் நிலை காணப்படுவதேன்.? 
பெண்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து பலியாடுகளாக களமுனைக்குத் தேவையான போராளிகளாக மாற்றுவது பெண் விடுதலையல்ல. 
அவர்கள் தங்கள் உடல், உடை, வாழ்க்கைத்தேர்வு ஆகியவற்றின் மீது சுயாதீனமாக முடிவெடுக்கக்கூடிய உரிமையை மதிப்பதே உண்மையான பெண் விடுதலை.
இன்று ஆடம்பரமாக நடைபெறும் பூப்புனித நீராட்டு விழாக்களும், அதில் இடம்பெறும் ஆடல் பாடல்களும் புலிகள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றிருந்தால், விளைவுகள் என்னவாக இருந்திருக்கும்? அல்லது புலிகளின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான விழாக்களை நடத்த முடியுமாக இருந்திருக்குமா? 
இங்கு ஆடிய பெண்கள் அனைவரும் சுடப்பட்டிருப்பார்களா? தண்டிக்கப்பட்டிருப்பார்களா?
இது போன்ற விழாக்கள் தடைசெய்யப்பட்டிக்குமா? இவற்றை ஒழுங்கு செய்தவர்கள், காட்சிப்படுத்தியவர்கள், கலந்து கொண்டவர்கள் என அனைவரும் தண்டிக்கப்பட்டிருப்பார்களா? 
இன்று நடைபெறும் இந்த விழாக்கள் ஒரு முக்கியமான அரசியல் உண்மையை வெளிப்படுத்துகின்றன. துப்பாக்கி முனையில் திணிக்கப்பட்ட ஒழுக்கம், துப்பாக்கி மறைந்தவுடன் மறைந்துவிடுகிறது.
ஒழுக்கம் என்பது பெண்களின் ஆடையின் நீளத்தில் இல்லை. அவர்களின் தொப்புளில், வெளித்தெரியும் இடுப்பிலோ  அல்லது அவர்கள் பூசும் உதட்டுச் சாயத்திலோ இல்லை. 
அது ஒவ்வொரு தனிமனிதனின் சுயநெறி, பரஸ்பர மரியாதை, பொறுப்புணர்வு மற்றும் சுதந்திரமான தேர்வுகளில் உள்ளது.
அச்சத்தின் மூலம் கட்டுப்பாட்டை உருவாக்கலாம். ஆனால் சுதந்திரமான சமூகத்தை உருவாக்க முடியாது.
இதைத்தான் நாம் அன்றும் புலிகளுக்குச் சொன்னோம்.
இதுவோ  இந்த வரலாறு நமக்குக் கற்பிக்கும் மிகப் பெரிய அரசியல் பாடமுமாகும்.
இறுதியாக உண்மையில் புலிகள் அற்ற இன்றைய காலகட்டத்தில் புலிகளின் அழிவினால் உருவாகிய  சுதந்திரத்தையும் விடுதலையையும் சிங்களவர்களை விட உச்சபட்சமாக ஈழத்தமிழர்களே அனுபவிக்கின்றார்கள் என்றால் அது மிகையில்லை அல்லவா!? 😊
அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
14/07/2026
+94774842464

கருத்துகள் இல்லை: