Amudhan R P : இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் தவெகவிற்கு தங்கள் கட்சிகள் கொடுக்கும் ஆதரவை நியாயப்படுத்த, திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி, அது மக்கள் நலத்திட்டங்களை மட்டுமே நம்பியிருந்தது, அதன் பாஜக எதிர்ப்பு உறுதியானதல்ல என்று பரப்பிவருகின்றனர்.
இதை அதிகாரப் பூர்வமாக சண்முகம் தான் தொடங்கிவைத்தார்.
திமுகவை முதலாளித்துவக்கட்சி என்று சொல்லி அதை வசையாகப் பயன்படுத்தி வருகிறார் அவர்.
அமெரிக்காவில் ‘கம்யூனிஸ்ட் ‘ என்பது எப்படி ஒரு வசைச்சொல்லோ, அந்தப் பொருளில் திட்டி வருகிறார்கள்.
திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி தான். இன்னும் சொல்லப் போனால் அது லிபரல் டெமாக்ரெடிக் கட்சி என்று தான் வகைப்படுத்தமுடியும்.
ஆனால் அது சண்முகம் போன்றோர் சொல்கிறபடி வெறும் நலத்திட்ட அரசை மட்டுமா நடத்தியது?
நீட்டுக்கு எதிராகப் போராடியது? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று போராடியது? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்தது? அதைப் பாதுகாக்கப் போராடியது? கல்வி, மருத்துவ, போக்குவரத்து, மின்சாரக் கட்டமைப்புகளை வளர்த்தது? கவர்னரோடு மாநில உரிமைக்காகப் போராடியது?
எத்தனை முன்னெடுப்புகள்! அனைத்தும் இலவசத்திட்டங்களுக்குள் அடக்கி விடமுடியுமா?
ஒரு மாநில அரசு எப்படி சுயமரியாதையோடு போராடவேண்டுமென்பதற்கு இலக்கணமாக அமைந்தது கடந்த திமுக அரசு.
நாடாளுமன்ற இடங்களுக்கான டீலிமிட்டேசன் (delimitation) தொடர்பாக பாஜக அரசோடு போராடியது, திருப்புறங்குன்றத்தில் நீதிபதி சொல்லியும் கேட்காது வி வில் பேஸ் தெ கான்சிகுவென்ஸ் (we will face the consequence) என்று முழங்கியது எவ்வளவு பெரிய சாதனை?
தனியார் முதலீடுகளைக் கொண்டு வந்தது தான் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்கும், அதனால் தமிழக மக்கள் வறுமையிலிருந்து வெளியேறுவதற்கும், மாநிலத்தின் வருமானம் அதிகரிப்பதற்கும் காரணமாக இருந்தது.
90களில் புதிய பொருளாதாரக்கொள்கையை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய போது, அதன் பலன்களை அனுபவிக்கும் திறன்களை தமிழக மக்களுக்குக் கொடுத்தது திமுக தான்.
திமுக தான் இந்தியாவிலேயே எங்கு இல்லாத அளவுக்கு வளர்ச்சியின் கவனத்தை பார்ப்பனர் அல்லாதோர் மீது செலுத்தியது. அதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் பிறப்பிலிருந்து இறப்பு வரை அரசு பாதுகாப்பும் ஊக்கமும் ஆதரவும் கிடைத்தது.
நாம் பார்க்கும் போதே நம் பிள்ளைகளின் சராசரி உயரம் கூடியிருப்பதைக் காணலாம். அதற்கு என்ன காரணம்? சத்தான உணவு, பாதுகாப்பான வசிப்பிடம், போதுமான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், அடிப்படை வசதிகள், நிம்மதியான உற்சாகமான சூழல் உருவாகியிருப்பதை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு கடந்த திமுக ஆட்சியில் இந்தியாவில் எல்லோரும் ஆச்சர்யமாகவும் பாராட்டும் வகையிலும் வளர்ந்திருந்ததை அவ்வளவு எளிதில் மறக்கமுடியுமா?
அதனால் தான் திமுக ஆதரவாளர்களாகிய நாங்கள் உங்கள் வார்த்தைகளில் 'ஒப்பாரி' வைக்கிறோம், 'கதறுகிறோம்'.
மனிதர்கள் தாம் கடந்து வந்த சூழலை மறந்து ஜாதி வெறியும் பக்தி வெறியும் கொண்டிருந்தால் அதற்கு திமுக எப்படிப் பொறுப்பாக முடியும்?
பார்ப்பனர் அல்லாதோருக்கு அரசியல், சமூக அதிகாரத்தை திமுக போராடிப் பெற்றது.
அக்கட்சியால் பலன் பெற்ற மக்களே, தமது பாதையை, வரலாற்றை மறந்தால் அது திமுகவின் தவறா?
ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகத்தின் தோல்வி அது.
அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக