வெள்ளி, 31 ஜூலை, 2026

16 வயது மலையக சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் - பாலியல் வன்முறை - கொலை!

May be an image of text Shabeena Somasuntharam :  16 வயதான இஷாலினி ஜூட் குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், அண்மையில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய சாட்சியம், அவரது மரணத்திற்கு முந்தைய இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்ற கேள்வியை மீண்டும் பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
மலையகத்தின் டயகம தோட்டப் பகுதியில் மிகவும் வறுமையான குடும்பம் ஒன்றை சேர்ந்த இஷாலினி, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக வேலைசெய்து கொண்டிருந்த போது, கடந்த 2021 ஜூலை 15-ஆம் திகதி கடுமையான தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்தார். 
இந்த சம்பவம் ஒரு சாதாரண மரண விசாரணையாக இல்லாமல், "சிறுவர் தொழிலாளர் சுரண்டல், மனிதக் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், அலட்சியம் மற்றும் இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் குறைபாடுகள்" தொடர்பான முக்கிய வழக்காக மாறியது.


இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இறுதியான நீதித் தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, நீதிமன்றம் இறுதி முடிவை வழங்கும் வரை அனைவரும் சட்டப்படி நிரபராதிகள் என்ற அடிப்படை உரிமையை பெற்றுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன் 
அலுத்கடை நீதிமன்றத்தில் புதிய சாட்சியம் 
2026 ஜூலை 28-ஆம் திகதி, கொழும்பு அலுத்கடை நீதிமன்றில் மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், "1990 சுவசெரிய" அவசர மருத்துவ சேவையில் பணியாற்றும் 30 வயதுடைய முதலுதவி அதிகாரி ஒருவர் முக்கிய சாட்சியம் வழங்கினார்.
சம்பவம் நடந்த நாளில் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்தபோது தாம் கண்ட காட்சியை அவர் நீதிமன்றத்தில் விவரித்தார்.
"தகவல் கிடைத்தவுடன் வாகனங்கள் நிறுத்தும் கராஜ் வழியாக வீட்டுக்குள் சென்றேன். படிக்கட்டின் மீது ஒரு சிறுமி தியானம் செய்வது போன்ற நிலையில் அமர்ந்திருந்தாள். அவரது உடலை ஒரு படுக்கை விரிப்பால் மூடியிருந்தனர். அதன் கீழ் எந்த ஆடையும் அணிந்திருக்கவில்லை. கழுத்துஇ மார்புஇ கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் தென்பட்டன. அவர் என்னிடம் தண்ணீர் கேட்டார்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த சாட்சியம், அம்பியூலன்ஸ் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பு அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக முதலுதவி வழங்கவில்லையா? என்ற புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, 119 அவசர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, தீக்காயங்களை உடனடியாக குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் என்ற முதலுதவி ஆலோசனைகள் 119 அவசர சேவையால் அழைப்பு விடுத்த நபருக்கு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சுவசெரிய குழுவினர் வருவதற்கு முன் அந்த ஆலோசனைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று சாட்சியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், உடனடி மருத்துவ உதவி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் இஷாலினியின் வேதனையை அதிகரித்ததா? என்பது நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டிய முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
விசாரணையின் போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியது.
தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக 2026 ஜூலை 29-ஆம் திகதி வெளிநாடு செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2026 அக்டோபர் 21-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வழக்கில் தடயவியல் ஆதாரங்களின் முக்கியத்துவம்
இஷாலினியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை நிரூபிப்பதில் தடயவியல் மருத்துவ அறிக்கைகள் மிக முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
முதல் பிரேதப் பரிசோதனையில், தீக்காயங்களுடன் சேர்த்து அவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அந்தத் தகவலே விசாரணையின் திசையை முழுமையாக மாற்றியது.
தீ விபத்து, வேறு குற்றச்செயல்களை மறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இஷாலினியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, மூன்று நீதித்துறை மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுவால் இரண்டாவது பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கை, விசாரணையின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் முக்கிய கட்டமாகக் கருதப்பட்டது.
மருத்துவ ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் விசாரணைத் தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்த பிறகே, குற்றப்பொறுப்பு தொடர்பாக நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும்.
மலையகத்தின் வறுமை மற்றும் சிறுவர் தொழிலாளர் சுரண்டல் 
இஷாலினியின் மரணம், ஒரு குடும்பத்தின் துயரத்தை மட்டும் அல்லாமல், மலையகப் பகுதிகளில் வாழும் ஏழைக் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்தான சமூக நிலைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, பல குடும்பங்கள் பிள்ளைகளின் பாடசாலை கல்வியை இடைநிறுத்தி அவர்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் நிலை காணப்படுகின்றது
இஷாலினி ஏழாம் வகுப்பிற்குப் பிறகு கல்வியை நிறுத்தியதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், 60 வயதுடைய நபரொருவரால், 18 வயது பிள்ளை என்ற பொய் தகவலுடன் இஷாலினி கொழும்புக்கு வேலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம், குழந்தைகளை வீட்டு வேலைக்கு அனுப்பும் முறைகள், வயது தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் மனிதக் கடத்தல் குறித்த கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
குடும்பக் கடனை அடைப்பதற்காக ஒரு குழந்தையை வீட்டு வேலைக்கு அனுப்புவது, இலங்கைச் சட்டத்தின் கீழ் மனிதக் கடத்தலாகக் கருதப்படலாம்.
அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 360C பிரிவின் கீழ் மனிதக் கடத்தல் மற்றும்  308A பிரிவின் கீழ் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கான எச்சரிக்கை
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பாக  ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இஷாலினியின் மரணம் தனிப்பட்ட சம்பவமாக மட்டும் பார்க்கப்பட முடியாது. மாறாக, இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு அமைப்பில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளின் பிரதிபலிப்பாகவே இது பார்க்கப்படுகிறது.
சட்டங்கள் மட்டுமல்ல, அவற்றின் அமுலாக்கமும் அவசியம்
இஷாலினியின் மரணத்தைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டின் 39ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் சிறுவர்களின் சட்டபூர்வ வயது 18 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும், உடல் தண்டனைக்கு எதிரான பாதுகாப்பு, சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக மறுவாழ்வு வழங்குதல் உள்ளிட்ட பல திருத்தங்கள் 2024-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
எனினும், சட்டங்களை இயற்றுவது மட்டுமே போதுமானதல்ல. அவை முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதை கண்காணித்தல், தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, வறுமையால் பாடசாலையை விட்டு விலகும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது மற்றும் மலையகப் பகுதிகளில் கல்வி, பொருளாதார உதவிகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
இஷாலினி வழக்கின் இறுதி தீர்ப்பு, இதில் தொடர்புடையவர்களின் பொறுப்பை மட்டுமல்லாமல், "இலங்கை தனது குழந்தைகளை பாதுகாக்கும் திறன் கொண்ட நாடா என்பதையும் சோதிக்கும் முக்கியமான நீதி தீர்ப்பாக அமையும்".
இஷாலினியின் உயிரை எந்தத் தீர்ப்பும் மீட்டுத் தர முடியாது. ஆனால், நியாயமானதும் முழுமையானதுமான நீதிமன்ற விசாரணை, "வறுமை காரணமாக எந்தக் குழந்தையும் மறக்கப்படக்கூடாது, இஷாலினிக்கு நீதி கிடைப்பது என்பது ஆபத்தில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்" என்ற வலுவான செய்தியை சமூகத்திற்கு எடுத்துரைக்கும்.

கருத்துகள் இல்லை: