மின்னம்பலம் -Mathi : தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) அதிமுகவின் (AIADMK) 4 முன்னாள் அமைச்சர்கள் இணைந்துள்ளனர்.
பனையூரில் தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான
உடுமலை ராதாகிருஷ்ணன்
கடம்பூர் ராஜூ
எம்.சி. சம்பத்
சிவபதி
உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். அதேபோல அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாப்பிரெட்டிபட்டி; கோவிந்தசாமி; கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ. கருணாநிதி, தவெகவில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், எங்களை முன்னாள் அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ-க்களாகவும் உருவாக்கியவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் ஆவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் அதிமுக-வில் பெரும் மன உளைச்சலையும், கொடுமையையும் சந்தித்தோம்.
திமுகவுக்கு மாற்று தவெக
தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக-விற்கு மாற்றாக இருக்கும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம்.
தவெக தலைவர் (விஜய்) அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து, கீழ்மட்டத் தொண்டர்கள் முதல் வயது முதிர்ந்த அண்ணா திமுக நிர்வாகிகள் வரை அனைவரும் இதில் இணைய விரும்புகிறார்கள்.
தவெக-வில் இணைந்தது, நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் தம்பியோடு மீண்டும் இணைந்தது போன்ற பெரும் சந்தோஷத்தைத் தருகிறது.
அம்மா உணவகம்
தவெக தலைவர் (விஜய்) அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், “அம்மா உணவகங்களைத் திறக்க வேண்டும்” என்று ஒரே ஒரு அறிக்கை கொடுத்தார்.
அந்த அறிக்கை எங்களுடைய மனப்புழுக்கத்தைப் போக்கி, பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மீண்டும் உருவாக்கும் தலைவராக இன்றைய முதலமைச்சர் விளங்குகிறார்.
மரியாதை மட்டும் கொடுங்க
எங்களுக்கு எந்தப் பதவியும் தேவையில்லை, மரியாதை கொடுத்தாலே போதும்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி பெற நாங்கள் உறுதியாக உழைப்போம்.
தமிழகம் முழுவதும் இருந்து பல மாவட்ட நிர்வாகிகள் தவெக-வில் இணையக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, பொதுச்செயலாளர் அவர்கள் மாவட்டந்தோறும் இணைப்பு விழாக்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
நாங்கள் புரட்சித்தலைவி அம்மாவிடம் எப்படி உண்மையாக இருந்தோமோ, அதேபோல தவெக தலைவரிடமும் உண்மையாக இருந்து, அவர் சொல்லும் பணிகளைச் செய்து நல்ல பெயரை எடுப்போம் என்றார்.
தவெகவில் இன்று இணைந்தவர்கள்



Mathi
30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக