ஞாயிறு, 29 மார்ச், 2026

‘தனி ஆவர்த்தனம்’ செய்யும் செல்வப்பெருந்தகை: கொந்தளிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்திப்பிரிவு

 hindutamil.in  : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவது, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்" என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் போர்க்கொடி தூக்கியதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடக்கம் முதலே முரண்பாடுகள் தலைதூக்கின. 
இறுதிக் கட்டமாக, காங்கிரஸ் கட்சிக்கு 35 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும் என்பதில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பிடிவாதமாக இருந்தார்.
ஆனால், அதற்கு ஸ்டாலின் உடன்படவில்லை. இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் உதவியுடன் 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒத்துக்கொண்டு காங்கிரஸை கையெழுத்திட வைத்தார் செல்வப்பெருந்தகை. அவரது இந்த தடாலடி முடிவு, ஒட்டுமொத்த காங்கிரஸ் சீனியர்களையும் அதிரவைத்தது.



இதையடுத்து, "வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை திமுக-விடம் கேட்டுப் பெற வேண்டும், புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்க வேண்டும்" என்ற கோரிக்கைகள் காங்கிறஸ் தரப்பில் வலுத்தன. ஆனால், செல்வப்பெருந்தகை அதற்கும் நேர்மாறாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்.

மீதமுள்ள 5 தொகுதிகள் குறித்து மீண்டும் பேசி முடிவெடுப்போம். தென்காசி, விருத்தாசலம் தவிர்த்து 16 சிட்டிங் தொகுதிகளைத் திரும்பப் பெற்றுள்ளோம். ஈரோடு கிழக்கு ஏற்கெனவே எங்களுடையது என்பதால் அதையும் வாங்கியுள்ளோம். கன்னியாகுமரியில் நாங்கள் கேட்கும் மூன்று தொகுதிகளில் ஒன்றை அவர்கள் கேட்கிறார்கள்" என்றார்.

செல்வப்பெருந்தகை விரும்பிப் பெற்றுள்ள சில தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. உதாரணமாக, வேளச்சேரி தொகுதியை கைகாட்டு கிறார்கள். அப்படி இருந்தும் குறிப்பிட்ட சில தொகுதிகளைச் செல்வப்பெருந்தகை பிடிவாதமாக வாங்கியிருப்பது காங்கிரஸாரை கொதிப்படையச் செய்துள்ளது.

இதன் வெளிப்பாடாகவே கரூர் எம்பி-யான ஜோதிமணி, ‘காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. விரிவான விவாதத்திற்குப் பிறகே தொகுதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையைப் பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. அனைத்துமே ரகசியமாக நடந்துள்ளது. கட்சியின் நலன் முழுமையாகச் சமரசம் செய்யப்பட்டுவிட்டது.

உண்மையான தொண்டர்களின் பல ஆண்டுகால உழைப்பை, கட்சிக்கு ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத சிலர் விற்றுத் தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்தச் சூழலைக் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்றக் கட்சி தலைவர் மட்டுமே கட்சி அல்ல; லட்சக் கணக்கான தொண்டர்களின் உணர்வுதான் கட்சி.

வேட்பாளர் பட்டியல் வெளியானதும் இது குறித்து விரிவாகப் பேசுவேன். இதே ‘விற்பனை' அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு நடந்தால், தமிழகத்தில் காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது’ என சோஷியல் மீடியாவில் வெடித்திருந்தார்.

ஏற்கெனவே சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ-க்களுக்குப் போட்டியாக செல்வப்பெருந்தகை தான் முதல்வர் ஸ்டாலினை அதிகம் புகழ்ந்து பேசுகிறார் என்ற விமர்சனம் உண்டு. தற்போது தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தது மற்றும் தன்னிச்சையாகத் தொகுதிகளை முடிவு செய்தது போன்றவை சத்தியமூர்த்தி பவனில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

மேலும், தனக்கு நெருக்கமானவர்களுக்கே வேட்பாளர் வாய்ப்புகளை வழங்க செல்வப்பெருந்தகை காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள நிர்வாகிகள் சிலர், செல்வப்பெருந்தகையின் ‘தனி ஆவர்த்தனம்’ தொடர்பாக டெல்லிக்கு புகார் மனுக்களுடன் புறப்படத் தயாராகி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: