சனி, 30 செப்டம்பர், 2017

லென்ஸ் – புரியாத புதிர் – அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது எப்படி ?

ஆணாதிக்கத்தின் காம நுகர்வு வெறியால் காதலை கண்டு கொள்ளவே இயலாது. உடல் புனிதத்தால் அடிமைப்பட்டிருக்கும் பெண்ணடிமைத்தனம் ஜனநாயகமயமான காதலுக்கு போராடவே வராது.
மூணாறு அருகே அமைதியாக வாழும் யோகன் பேச இயலாத ஏஞ்சலை திருமணம் செய்கிறான். அந்த தம்பதியினர் உறவு கொள்வதை திருட்டுத்தனமாக படம் பிடிக்கும் ஒரு “பிளம்பர்” அந்தக் காட்சி அடங்கிய பென் டிரைவை தொலைத்து விடுகிறான். அந்தப் பென் டிரைவை எடுக்கும் அரவிந்த் இணையத்தில் பதிவேற்றம் செய்கிறான்.
அந்தரங்கம் வெளியான அதிர்ச்சியில் ஏஞ்சல் தற்கொலை செய்கிறாள். யோகனோ மனைவியின் மரணத்துக்கு பழிவாங்கும் பொருட்டு பிளம்பரைக் கொல்வதோடு, அரவிந்தை பொறி வைத்து பிடிக்கிறான். கூடவே அவன் வாயாலே குற்றத்தை வரவழைத்து அனைத்தையும் பதிவு செய்து இணையத்தில் வெளியிடுகிறான். இறுதியில் தற்கொலை செய்கிறான்.


இணையத்தை வக்கிரமாக பயன்படுத்துவோரால் பாதிக்கப்படும் ஒருவனின் பழிவாங்கல் கதை என்றாலும் தனது முதல் படத்தில் இத்தகைய அழுத்தமான சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொண்ட இயக்குநரை ஊடகங்கள் ஒருமித்த குரலில் பாராட்டுகின்றன.

ஆனால் மற்றவரது அந்தரங்கத்தை பகிரங்கமாக ரசிக்க கற்றுக் கொடுக்கும் ஊடகங்கள் பாராட்டுவதிலேயே இந்தப் படத்தின் போதாமை வெளிப்பட்டு விடுகிறது. மெரினா போராட்டத்திற்கு பிறகு தமிழ் மக்கள் செய்தி தொலைக்காட்சிகளை அதிகம் பார்க்க ஆரம்பத்திருக்கிறார்கள். அந்த செய்திகளில் அதிகம் கொண்டு சேர்க்கப்படுவது எது?
முன்னணியில் இருக்கும் பாலிமர் தொலைக்காட்சியில் கணிசமான அளவிற்கு குற்றச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. தினத்தந்தி – தினமலர் பாணியில் கள்ளக்காதல் செய்திகளே அன்றாடம் அணிவகுக்கின்றன. அர்த்தமுள்ள விவாதங்கள், ஆழ்ந்த பார்வைகளை விட விரைவுச் செய்திகள் எனும் பிரிவையே தொலைக்காட்சி நிர்வாகங்கள் அதிகம் இறக்குகின்றன. அதில் செலிபிரிட்டி, உலகம், இயற்கை, சினிமா, குற்றம் என்று கலந்து தயாரிக்கப்படும் தொகுப்பில பார்ப்போர் பெறுவது என்ன?
பாலியல் தடுமாற்றங்களும், குற்றங்களும் கொண்ட செய்திகள் அதிவேகத்தில் மனிதர்களிடத்தில் இறங்குகின்றன. குறுஞ்செய்திகளில் பாலியல் குற்றச் செய்திகள் 20 விநாடி வந்தாலும் மனதில் தங்குகின்றன. தங்கியவை விழிப்புணர்வை ஊட்டுவதற்கு பதில் ஏக்கத்தையும், அந்த ஏக்கம் தோற்றுவிக்கும் கற்பனை பரவசத்தையும் ஒருங்கே அலைக்கழிக்கின்றன.
லென்ஸ் திரைப்படத்தில் வரும் அரவிந்த் ஒரு  ஐ.டி ஊழியராக, மனைவி, குழந்தை, லேப்டாப் சகிதம் சராசரியாகவும் கிரீன் டீ குடிப்பவனாக கொஞ்சம் அ-சராசரியாகவும் வாழ்கிறான். இரவிலோ அவனது சராசரி உலகம் முடிவுக்கு வருகிறது. மூடிய அறையில் லேப்டாப்பில் வேட்டைக்கு கிளம்புகிறான். ஃபேஸ்புக்கில் கிடைக்கும் பெண்களோடு கடலை போட்டு இறுதியில் ஸ்கைப்பில் வீடியோ சாட் செய்கிறான். அதன் உச்சமாக இடுப்பாடைகளை களைந்து சுய இன்பம் செய்வது!
நீ மட்டும் நேரில் இருந்தால்….? என்று ஒரு பெண்ணிடம் பேசும் அரவிந்த் அதை உண்மையில் செய்யுமளவு ‘தைரியம்’ உடையவன் அல்ல. அவனது நோக்கில் சொன்னால் அத்தகைய ‘வாய்ப்புகள்’ – அதிர்ஷ்டம் அவனுக்கு இல்லையாம்!
ஆரம்பத்தில் இந்தக் காட்சி வரும் போது பார்வையாளர்கள் அதிர்ச்சியோடு ஒரு இருண்ட உலகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த அதிர்ச்சியின் உளவியல் என்ன? மற்றவரோடு சேர்ந்து இத்தகைய அந்தரங்க அழுக்குகளை பார்ப்பது குறித்த வெட்கமா? இல்லை தன்னை நினைவுபடுத்தும் குற்ற உணர்வா? இல்லை இப்படி ஒரு குற்றம் உலகத்தை கண்ட அதிர்ச்சியா, இல்லை இவையெல்லாம் கலந்து ஏற்படுத்தும் குழப்ப நிலையா?
இருவருக்கிடையில் நடக்கும் பாலியல் உறவு என்பது அந்தரங்கமானதுதான். அந்த அந்தரங்கத்தை மற்றவர் மதிப்பதே கண்ணியமானது. ஆனால் அந்த உறவின் அங்கீகாரம் குறித்த வெளிப்படைத் தன்மையும், அந்த உறவின் சரி தவறுகளை தீர்மானிக்கின்ற ஜனநாயக உணர்வும் அந்தரங்கமானது அல்ல. பாலியல் பிரச்சினைகளின் அந்தரங்க தன்மையை மட்டும் கிளுகிளுப்புடன் பொதுவெளியில் வைக்கும் ஊடகங்கள் அதன் சமூகப் பரிமாணங்களை நிதானத்துடன் ஒருபோதும் பேசுவதில்லை.
இதன்படி லென்ஸ் படம் இப்பிரச்சினையை எப்படி அணுகுகிறது?
நிக்கி என்ற பெண் பெயரில் அரவிந்தோடு தொடர்பு கொள்ளும் யோகன் வீடியோ சாட்டிற்கு அழைக்கிறான். சல்மான்கானின் முகமூடியோடு அரவிந்தும் அரட்டையை ஆரம்பிக்கிறான். இந்த முகமறைப்பு என்பது தனது ஒழுக்கத்தை – அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை.
அதே நேரம் இப்படி தற்காப்பிலேயே காலந் தள்ளினால் புளித்த ஆப்பிளை சுவைக்க முடியாது. ஏற்கனவே இப்படி பலரைப் பார்த்திருப்பவன் என்பதால் எதிரே முகமூடியோடு இருக்கும் நிக்கி கேட்டுக் கொண்டதன் பேரில் உடன் சல்மானை அகற்றி அரவிந்தாக தரிசனம் தருகிறான். எதிரில் இருப்பது மொட்டைத் தலையுடன் ஒரு ஆண் எனத் தெரிய வந்ததும் அரவிந்துக்கு ஏற்படுவது அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அல்ல. அது ஒரு எரிச்சல்.
பாலியல் – பாலினம் சார்ந்த பிரச்சினைகளின் பொருட்டு இணையத்தில் பாலினத்தை மாற்றி உலவுவது வழமையானதுதான். ஆகவே அரவிந்த் அந்த அரட்டையை நிறுத்தி விட்டு அடுத்த வேட்டைக்கு தயாராக நினைக்கிறான். ஆனால் அவனது முந்தையை வேட்டையில் சிக்கிய பெண் கூட யோகனால் வாடகைக்கு நியமித்து அரவிந்திற்காக விரிக்கப்பட்ட வலை என்பது தெரிய வரும் போது தான் குற்றமிழைத்தவன் என்பதை மறைக்க தானே பாதிக்கப்பட்டவனாக அவன் நியாயம் பேசுகிறான்.
தனிமனித உரிமை, அந்தரங்க விசயங்களை பொதுவில் பேசக்கூடாது, ஒரு ஆணும் பெண்ணும் முடிவு செய்து ஈடுபடும் உறவில் அது ஏற்கப்பட்டதோ இல்லை விலக்கப்பட்டதோ எதுவாயினும் மற்றவர் அதில் நியாயம் பேசுவது தவறு என்பதாக ஆரம்பிக்கிறது அரவிந்தின் தர்க்கம். பிறகு யோகனது மனைவியான ஏஞ்செலுக்கும் அதே உரிமைகள் கிடையாதா என்று யோகன் கேட்கும் போது அரவிந்தின் உலகளாவிய தர்க்கம் தன்னலத்தின் தர்க்கமாக மாறுகிறது. அரவிந்தின் மனைவியை துகிலுறிவதாக யோகன் சித்தரிக்கும் காட்சியால் அவன் முன்னர் பேசியதற்கு எதிராக தனது மனைவியை விட்டுவிடு என்று வாதங்களை மாற்றி போட்டு கெஞ்சுகிறான். நியாயங்கள் அநியாயங்களாகவும், அநீதிகள் நீதியாகவும் உருமாறுகின்றன.
இந்த முரணை இயக்குநர் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் என்றாலும் இதுவே இந்தப் பிரச்சினையின் மையமல்ல. கூடுதலாக பேசவேண்டிய தீவிரத்தை ஒதுக்கிவிட்டு பார்ப்போரை இரண்டு விதத்தில் இப்படம் அசைபோட வைக்கிறது. ஒன்று ஏஞ்சலாவுக்கு நடந்தது போல நமது அந்தரங்கம் இப்படி வெளியே வந்தால் எப்படி இருக்கும் என்ற சுய அதிர்ச்சி. இரண்டாவது, பார்ப்போரின் குற்ற நடவடிக்கைகள் பாதுகாப்பற்றது என்பதோடு அவர்களை ‘ஒழுக்கவாதத்திற்குள்’ தள்ளிவிட்டு அச்சுறுத்தும் ‘ஒழுக்க’ அதிர்ச்சி.
இணைய வக்கிரங்கள் என்றல்ல, பத்திரிகைகளில் வரும் குற்றச் செய்திகள் கூட ஒரு கணத்தில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அதாவது ஒரு கொலையோ அல்லது ஒரு சிறுமி மீதான பாலியல் வன்முறையோ நமது குழந்தைகளை ஒப்பிட்டு மனம் கலக்கமடையும். ஒரு தனிநபநருக்கு சமூகரீதியான பாதுகாப்பு எந்த அளவுக்கு கிடைப்பதில்லையோ அந்த அளவுக்கு இந்தக் கலக்கம் நம்மை வாட்டும்.
பாலியல் பிரச்சினைகளில் வரும் செய்திகள் வேறு விதமான ஒப்பிடலையும் நம்மிடம் தோற்றுவிக்கும். குறிப்பாக கள்ளக்காதல் தொடர்பான செய்திகளைப் படிக்கும் போது அது ஒரு சமூக அதிர்ச்சி அளிப்பதோடு கூட ஆண்களிடம் (குறைவாக பெண்களிடமும்) மெல்லிய அளவிலான ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறது. அவர்கள் கள்ளக்காதல் கொலைகளையோ குற்றங்களையோ ஆதரிக்கவில்லை. எனினும் அப்படிப்பட்ட பெண்கள்(ஆண்கள்) தமது சுற்றத்தில் இல்லையே அல்லது நாம் அவ்வளவு தைரியமற்று இருக்கிறோமே என்றெல்லாம் கொஞ்சம் இழுத்துச் செல்லும்.
ஆனால் இந்த இழுப்பு தேவைப்படாத அளவுக்கு ‘தெளிவாக’ இருப்போரும் உண்டு. இந்த இரண்டு முனைகளுக்கு இடையே அலைபாயும் மாந்தர் மனநிலையை லென்ஸ் படம் எப்படி பாதிக்கிறது?
ஏஞ்சலாவின் அந்தரங்கத்தை பொதுவெளியில் ஏற்றும் அரவிந்த் அவனது மனைவியை அப்படி காட்டும் போதுதான் கொஞ்சம் கலங்குகிறான். இப்படி ஊரில் ஒரு பெண்ணுக்கு ஒரு அநீதி இழைக்கப்டும் போது உனது அக்கா தங்கச்சிக்கு நேர்ந்தால் நீ சும்மா இருப்பியா என்ற வழமையான கேள்வியை கேட்டிருப்போம். இந்த அணுகுமுறை குறிப்பிட்ட குற்றத்தை அதே குற்றம் உனக்கு நடந்தால் எப்படி என்று மாற்றிப் போட்டு கேட்கிறது. லென்ஸ் படத்தின் அடிநாதமான பார்வையும் இதுதான். அதன்படி பார்வையாளர்கள் ஒரு வித ‘ஒழுக்கவாத’த்திற்குள் தள்ளிவிட்டு அச்சுறுத்துவதால் என்ன பயன்?
ஒழுக்கம் வேறு, ஒழுக்கவாதம் வேறு. மனித குலத்தின் நாகரீக வளர்ச்சிக்கான அடிப்படை சமுதாயக் கூட்டுழைப்பில் கட்டப்பட்டது. சேர்ந்து போனால்தான் வேட்டையில் விலங்கு கிடைக்கும்; இயற்கை பேரழிவுகளில் இருந்து தப்பித்து உயிர் வாழ முடியும். பின்பு சமூகத்தின் உற்பத்தி வளர வளர இந்த கூட்டு உழைப்பின் உறவுகள் நெறிமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றை சொத்துடமை சார்ந்த பொருளாதார உறவுகள் மக்களை ஒரு சமூகமாக ஒரு மீப்பெரும் மனிதனாக பயணிக்க வைக்கிறது.
விலங்கு நிலையில் இருக்கும் பாலியல் உணர்ச்சி இத்தகைய சமூக நியிதிகளினால் பண்படுவதோடு சேர்ந்து புண்படவும் ஆரம்பிக்கிறது. பண்படுவது காதல் என்றால் புண்படுவது அந்த காதலுக்கு உருவாக்கப்பட்ட பொருளியல் தடைகள். பண்படுவதற்கு பௌதீக அடிப்படையாக சமூக உறவும் புண்படுவதற்கு பௌதீக அடிப்படையாக விலங்கியல் உணர்ச்சியும் முரண்படுகிறது.
ஆகவே சமூகவியல் வரலாற்றில் காதல் என்பதே இன்றைக்கு அழைக்கப்படும் ‘கள்ளக் காதலில்தான்’ தோன்றியது. அதாவது விரும்பியவரை மணமுடிப்பதற்கு ஏற்படும் தடைகளே கள்ளத்தனமாக காதலிப்பதை தோற்றுவித்தது. இவ் வரலாற்றின் படி இன்றைய காதலும் கூட அன்றைய ஒழுக்கவாதத்தை மீறிப் பிறந்த ஒரு புதிய ஒழுக்கம். ஒழுக்கவாதம் என்பது நேற்றைய நியதிகளின் படி இன்றைக்கு தேவைப்படும் மாற்றத்தை அல்லது புதிய ஒழுக்கத்தை எதிர்க்கும் ஒரு சமூக அதிகாரம்.
வாய்மை எனப்படுவது ஒழுக்கமென்றாலும் பிறர் நலன் பயக்க அதை மீறலாம். ஒழுக்கம் என்றால் என்ன?  (Communist morality is that which serves this struggle and unites the working people against all exploitation, against all petty private property; for petty property puts into the hands of one person that which has been created by the labour of the whole of society. In our country the land is common property”) “புரட்சிக்கு எவையெல்லாம் நன்மை பயக்குமோ அவையெல்லாம் ஒழுக்கம்” என்றார் லெனின். தற்கொலைப் போராளியை கோட்பாட்டு ரீதியில் மறுக்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி கூட தேவையையொட்டி அதை மீறலாம்.
ஆகவேதான் ஒழுக்கத்தை ஒழுக்கவாதமாக பார்ப்பதும் பரிசீலிப்பதும் ஊறு விளைவிக்கும். சில அறிஞர்கள் கருதுவது போல இத்தகைய பண்பாட்டு மாற்றங்கள் சில அசாதாரணமான தனிநபர்களின் சிந்தனையிலிருந்தோ இல்லை முசுலீம் – இந்து மதவெறியர்கள் முன்வைக்கும் புனித நூல்களிலோ உருவாகுவதில்லை. மக்களின் வாழ்க்கைப் போராட்டமே புதிய விழுமியங்களை உருவாக்குகின்றது. இவை நமது தன்னுணர்வுக்கு அப்பாற்பட்டு புறத்தே நம்மை அறியாமல் உருவாகின்றன. அறியாமல் நடக்கும் இப்போராட்டத்தை அறியும் வரை அறிந்ததாக நாம் நினைக்கும் நேற்றைய ஒழுக்கங்களும், மீறலும் நம்மை நிலைகுலையவைக்கும் அறியாமையில் மீள முடியாமல் ஆழ்த்துகின்றன.
லென்ஸ் – திரைப்படம் இணையத்தில் பாலுறவு சார்ந்து சிக்கிக் கொண்டிருப்போரை பழைய வகை வில்லன் நம்பியார் போல மிரட்டுகிறது. மற்றவர் அந்தரங்கத்தை பார்க்கும் நீ அதே போல உனது அந்தரங்கத்தை மற்றவர் பார்த்தால் என்ன செய்வாய் என்று ஒரே அடியாக வீழ்த்துகிறது. இத்தகைய கிளீன் போல்டு சமாச்சாரங்கள் எவையும் ஃபோர்னோவில் தடுமாற்றத்துடன் சிக்கியிருக்கும் மனங்களை மீட்பதற்கு உதவாது.
ஏனெனில் மற்றவர் நமது அந்தரங்கத்தை பார்க்க கூடாது என்பது உடலளவில் மட்டுமே சரி. உள்ளத்தளவில் மற்றவர்களின் பார்வையில் நமது அந்தரங்கம் படாதவரை அதாவது குறிப்பிட்ட பாலுறவு குறித்து மனந்திறந்து பேசாத வரை குறிப்பிட்ட நபர் ஏன் ‘கள்ளத்தனம்’ செய்கிறான்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போவது மட்டுமல்ல, அவனை வெளிப்படையாக முரணற்ற வகையில் செயல்பட வைக்கவும் முடியாது.
சமூக வாழ்க்கையில் இணக்கமாக இருக்க வேண்டிய தேவை கட்டயாத்தில் இருப்பினும் அது இயல்பாகவும் இருக்க வேண்டும். விவாகரத்து உரிமை இருக்கும் வரைதான் மண உறவும் காதலோடு இயல்பாக நீடிக்க முடியும். இந்தக் கட்டாயம் – இயல்பு என்பது அம்மா குழந்தையை முத்தவிடுவதும், தேவை இருப்பின் ‘கண்டிப்பதும்’ போல. பாலியல் பிரச்சினைகளில் நாம் சமூக அம்மாவின் அருமையை மறந்து கண் காணாத இடத்திற்கு ஓடிப் போகிறோம். நாம் ஏன் அந்த மீப்பெரும் அம்மாவிடம் பேச மறுக்கிறோம்?
படத்தில் யோகனின் மனைவி ஏஞ்சல் ஏன் தற்கொலை செய்கிறாள்?
தனது படுக்கை அறையையே கேமரா ஊடுறுவி விட்டது என்பதறியும் அந்தப் பேதைப் பெண் பிறகு வீடு முழுக்க ஒரு எலி – கொசு கூட நுழைய முடியாதபடி சன்னல், துவாரங்கள் அனைத்தையும் மூடுகிறாள். குளிக்கும் போது மொத்த ஆடையோடு கூட காலுறையும் அணிகிறாள்.
பித்துப் பிடித்தவள் போல அவள் செய்யும் இந்த ரணமான பாதுகாப்பு எதை உணர்த்துகின்றது? எல்லா இடத்திலும் ஏதோ ஒரு கண் தனது அந்தரங்கத்தை பார்க்கிறது என அவள் பயந்து கற்பித்துக் கொள்கிறாள். கணவனோடு தனது உறவு இணையவெளிக்கு வந்த பிறகு இருட்டு அறையில் புர்கா போட்ட பிறகும் தனது உடலை ‘அக் கண்கள்’ வெறியோடு ஊடுறுவிப் பார்ப்பதாக அஞ்சுகிறாள். எனில் இங்கே எதுவும் பாதுகாப்பானது இல்லை.
ஆகவே இந்த யதார்த்தம் சுட்டும் புனைவு உலகிலிருந்து அவள் தற்கொலை மூலம் விடைபெறுகிறாள். இது சமூகத்தின் அநாகரீகத்தை அம்மணமாக்கும் ஒரு வேதனையான கலகம். அதே நேரம் சமூகத்தின் அநாகரிக மிரட்டலை எதிர் கொள்வது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த “புரியா புதிர்” படத்தின் களமும் இதுதான்.
இசைக் கருவிகளை விற்கும் கடைக்கு வரும் மீராவைக் காதலிக்க ஆரம்பிக்கிறான் கதிர் (சேதுபதி). கண்ணியமாக காதல் வளரும் போதே சில மர்மமான துன்பங்கள் செல்பேசியின் வீடியோ செய்திகளாக தாக்க ஆரம்பிக்கின்றன. மீரா உடை மாற்றுவது, குளிப்பது அனைத்தும் ஒரு அனாமதேய எண்ணில் இருந்து வருகின்றன. கள்ள உறவுகளை வைத்திருப்பதும், போதை பொருட்களை பயன்படுத்துவதும் இன்றைய உலகின் நாகரீகங்களாக அங்கீகரிக்கும் இரண்டு நண்பர்கள் கதிருக்கு உண்டு. அவர்களை அவன் செல்லமாக கண்டித்தாலும் அது நட்பை துண்டிக்கும் அளவுக்கு இல்லை.

காதலி மீராவின் காட்சிகள் வருவதைத் தடுக்க நினைப்பவனுக்கு போலீசு உதவும் விதத்தில் இல்லை. இடையில் அலுவலக மேலாளரது மனைவியோடு உறவு வைத்திருக்கும் படம் வெளியான அவமானத்தில் கதிரின் நண்பன் தற்கொலை செய்ய, பாரில் வேலை பார்க்கும் மற்றொரு நண்பன் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்படுகிறான். மீராவின் படங்களை அனுப்பி துன்புறுத்துவது யார்? என்று ரசிகர்கள் இருக்கை முனையில் ஆராயும் பொருட்டு சில பல திசை திருப்பல்களை செய்து விட்டு இறுதியில் உண்மையைச் சொல்கிறார் இயக்குநர்.
கல்லூரி ஒன்றின் கலை நிகழ்ச்சியில் கதிரைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறாள் மீரா. அவளது தோழி மிருதுளா அந்தக் காதலை ஏற்றி விடுகிறாள். காதலை எப்படி சொல்வது என அவள் குளியல் உடையோடு அபிநயிக்கும் காட்சியை படம்பிடிக்கும் மீராவின் செல்பேசியை கதிரின் நண்பர்கள் எடுத்து காட்சியை பொதுவெளிக்கு கொண்டு வருகின்றனர். அப்போது கதிரின் கவனத்தில் மீரா என்ற பெண் இல்லை.
பிறகு மிருதுளாவை கண்டிக்கிறது கல்லூரி நிர்வாகம். அப்பாவோ ருத்ரதாண்டவம் ஆடுகிறார். யாரோ ஒரு ஆணோடு சல்லாபம் செய்கிறாள் மிருதுளா என மொத்தக் கல்லூரியும் ரசிக்கிறது. அவமானம் தாங்க முடியாமல் மிருதுளா கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்கிறாள். இந்த வலியை உணர்த்தும் பொருட்டே மீராவும் கதிரை காதலிக்கிறாள். அவளது காட்சிகளை அவளே எடுத்து அனுப்பி  கதிரை கலங்க வைக்கிறாள்.
கடைசியில் இக்கதையினை ஒரு டைரியில் எழுதி வைத்து விட்டு அவளும் தற்கொலை செய்கிறாள். கடைசிக் காட்சியில் நான் எந்த தப்பும் செய்யவில்லையே என கதிர் கதறும் போது அவனது நண்பர்களை கதிர் கண்டிக்கவில்லையே என கூறும் மீரா, தன்னைச் சேர்ந்தவர்கள் இறக்கும் போது ஏற்படும் வலியை கதிரும் உணரவேண்டும் என காதலுடன் விடைபெறுகிறாள்.
இந்தப் படமும் லென்ஸ் படம் போல அதே கருத்தையே பிரதிபலிக்கிறது. மேலாளரின் மனைவியோடு இருக்கும் படம் வெளியான விவகாரத்தில் அது நான் இல்லை என வாதிடும் கதிரின் நண்பன், பிறகு அது தனது தனிப்பட்ட விசயம் எனவும் அதற்காக தன்னை வேலை நீக்கம் செய்ய முடியாது என்கிறான். மிருதுளா, மீராவுக்கு ஏற்பட்ட அவமான அதிர்ச்சி அவனுக்கு ஆரம்பத்தில் ஏற்படவில்லை. வேலை போன பிறகே அவன் தற்கொலை செய்கிறான்.
மற்றவரின் அந்தரங்கத்தை ரசிப்போர் தமது அல்லது தன்னைச் சேர்ந்தோரது அந்தரங்கத்தை ரசிப்பார்களா என்று படம் கேள்வி எழுப்புகிறது. நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கவில்லையா என்ற அதே கேள்வி. இயக்குநர் அவர்களே, இந்த கேள்வியின் நியாயம் இறந்து நாட்கள் பலவாகிவிட்டது. இப்போது நாம் கடந்து போக வேண்டியது இந்த பிரச்சினையை ஒரு பெண் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதே!
சிதம்பரத்தில் பத்மினியின் கணவனை அடித்துக் கொன்ற போலீசு மிருகங்கள் பத்மினையையும் குதறித் தீர்த்தன. அந்த வழக்கை பொதுவெளியில் எதிர்கொண்டு அந்த மிருகங்களுக்கு தண்டனை வாங்கித் தந்தார் பத்மினி. இங்கே பத்மினி தைரியமாக போராடியது போலீசு – அதிகார வர்க்கத்தை எதிர்த்து மட்டுமல்ல. ஒரு பெண்ணின் உடலை வைத்து பின்னப்பட்ட புனித அடிமைத்தனத்தை உதறியதில்தான் பத்மினியின் வீரத்தைக் காண்கிறோம். இந்திய ராணுவத்தை எதிர்த்து ஆடைகளை துறந்து போராடிய மணிப்பூர் பெண்களின் அம்மணம், சீருடை தரித்து யோக்கிய வேசம் போடும் இராணுவத்தின் வக்கிரத்தை தோலுரித்துக் காட்டியது.
மக்கள் அதிகாரம் நடத்திய டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களின் போதும் போராட வந்த பெண் தோழர்களிடம் போலீசு இப்படித்தான் செயல்பட்டது. கைது செய்வதின் பேரில் அவர்களது பெண்ணுறுப்புகளை தொட்டு, தடவி, தாக்கி அச்சுறுத்தியது. அதனால் அடுத்த போராட்டத்திற்கு அப்பெண்கள் வரத் தயங்குவார்கள் என்பது போலீசின் திட்டம். ஆனால் இப்பிரச்சினையை அஞ்சாமல் அப்பெண் தோழர்கள் பேசி அதை எதிர்கொள்ள முடிவெடுத்து தொடர்ந்து போராடுகிறார்கள்.
இங்கே இரண்டு படங்களும் பெண்களின் புனிதத்திற்கு ஏற்படும் இழுக்கை வைத்தே பார்வையாளர்களிடம் மிரட்டி போதிக்கின்றன. இந்த மிரட்டலால் பெரிய பலனில்லை என்பதே நமது விமரிசனம்.
கள்ளக்காதல் காட்சிகளை இணையத்தில் கொட்டும் ஆண்களுக்கு அது அவர்களது ஆண்குறிகளது கம்பீரத்தை காட்டுவதாக நம்புவதால் பெருமையடைகிறார்கள். பெண்களுக்கோ ஊரார் மேய காத்திருக்கும் வேசிப்பட்டம் கிடைப்பதால் முடங்கிப் போகிறார்கள். இல்லையெனில் கொலை அல்லது தற்கொலை மூலம் மரித்துப் போகிறார்கள்.
பெண்களின் குளியலறை காட்சிகளை படம்பிடிக்கும் ஆண்கள் போர்னோ உலகிற்கு தமது டெக்னாலஜியின் பங்களிப்புகளாக மதிப்பெண் போட்டுக் கொள்கிறார்கள். சிலர் பழிவாங்குவதற்கும் செய்கிறார்கள். அக்காட்சிகள் வெளியானதும் தன்னை சமூகம் இனி ஏற்காது என முடிவெடுத்து அப்பெண்கள் உடைந்து போகிறார்கள் – தற்கொலை செய்கிறார்கள்.
காதலின் ஜனநாயகப்படுத்தலை பேசாமல் கள்ளக் காதலின் அதிர்ச்சி ஏற்படுத்தும் வன்முறைகளை பேசிப் பயனில்லை. பெண்ணின் உடல் புனிதத்தை களையாமல் நமது வீட்டுப் பெண்களுக்கு மட்டும் அது நடக்க கூடாது என்று நினைப்பதால் பயனில்லை.
ஆகவே இப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் போராடும் விதத்தை கதையாக எடுத்திருக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. இப்பிரச்சினைகளின் வலியும், விளைவும், பல்வேறு சமூகப்பரிமாணங்களோடு உணர்த்த வேண்டும் என்கிறோம். நம்பியார் துகிலுறியும் போது எம்ஜிஆர் வந்து காப்பாற்றுவதற்கு கை தட்டுவதும், அதே துகிலுறிதல் ஆப்பிள் செல்பேசியால் பொதுவெளிக்கு வரும்போது கண் கலங்குவதும் வேறு வேறு அல்ல.
சுருக்கமாகச் சொன்னால் ஆணாதிக்கத்தின் காம நுகர்வு வெறியால் காதலை கண்டு கொள்ளவே இயலாது. உடல் புனிதத்தால் அடிமைப்பட்டிருக்கும் பெண்ணடிமைத்தனம் ஜனநாயகமயமான காதலுக்கு போராடவே வராது.
இவற்றை எப்படி கதையாக எடுக்க முடியும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் லென்ஸ் – புரியாத புதிர் இரண்டும் தொழில்நுட்பத்தினால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படுகின்றது என்பதைத் தாண்டி ‘பா’ வரிசைப் படங்களின் நிலவுடமை அடிமைத்தன உணர்ச்சிகளிலிருந்து எள்ளளவும் வேறு படவில்லை.
இன்றைய வாழ்வின் யதார்த்தத்தை அச்சு அசலாக நோக்கும் புதிய இயக்குநர் ஒருவர் இக்கட்டுரையின் பேசுபொருளை செரித்துக் கொண்டு அப்படி ஒரு படம் எடுப்பார் என நம்புகிறோம்.
_____________
இந்த சினிமா விமர்சனக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
கலை வடிவங்கள் யாவும் மக்களுக்கே என முழங்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

கருத்துகள் இல்லை: