திங்கள், 25 செப்டம்பர், 2017

" பழங்குடியினர் வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு" தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளி) பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம்

Chandra Mohan : தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளி) பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் 24.9.2017 அன்று திருவண்ணாமலை மாவட்டம் , தன்டராம்பட்டு , தானிப்பாடி கண்ணன் திருமண மன்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு மாவட்ட ,வட்ட, கிளை நிர்வாகிக‌ள் மற்றும் பொது உறுப்பினர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துக் கொண்டனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட 18.பட்டி நிர்வாகிகள் தருமன் ; பாலகிருஷ்ணன்
தலைமையில் சிறப்பாக மாநாட்டு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
பொதுக்குழு நிகழ்ச்சியை மாநில நிர்வாகிகள் மாரிமுத்து, அண்ணாமலை, வரதராஜன், மோகன், வேலூர் அண்ணாமலை போன்றோர் தலைமை தாங்கி வழிநடத்தினர். பொது செயலாளர் அண்ணாமலை வேலயறிக்கை முன்வைத்து விளக்கம் அளித்தார். பொருளாளர் வேலூர் அண்ணாமலை வரவு -செலவு அறிக்கையை முன்வைத்தார். பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அறிக்கை மீதும், தங்கள் வேலைப் பகுதியில் உள்ள பிரச்சினைகள் பற்றியும் பேசினர். வேலை அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது.
பொதுக்குழுவில் ஆலோசனைகள் வழங்க நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
எனது உரையின் முக்கியமான கருத்துக்கள பின்வருமாறு :-

--------------------------------------------------
விழிப்புணர்வு பெறாத ஒரு சமூகம் படுகிற துன்பங்களை, பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகிகள் உரைகள் வெளிப்படுத்தின. ஒரு சமூகம் விழிப்புணர்ச்சி பெறவில்லை என்றால் என்னென்ன நடக்கும்?
1) ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பேசும்பொழுது, ஈரோடு மாவட்ட மலையாளிப் பழங்குடியினர் பல ஆண்டுகளாக தங்களால் "பழங்குடி" என ஒரு சான்றிதழ் கூட வாங்க முடியவில்லை ; ஒரு அரசு வேலைவாய்ப்பு கூட பெறமுடியவில்லை என்று வேதனையை பகிர்ந்து கொண்டார். ஆனால்....அவர்கள் வாழ்கிற பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள சேலம் மாவட்ட மேட்டூர்-கொளத்தூரில் உள்ள #போலிப்பழங்குடி கொண்டாரெட்டிகள் சுமார் 25,000 பேர் பழங்குடி சான்றிதழ் பெற்றது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான உயர்கல்வி & மத்திய மாநில அரசாங்க வேலைவாய்ப்புகளை அபகரித்து கொண்டு விட்டனர்.
2)விழுப்புரம் மாவட்ட தலைவர் பேசியபோது, "கல்வராயன் மலைப்பகுதி ஜாகீர்தாரி முறையிலிருந்து 1975 க்குப் பிறகுதான் உரிமை மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பழங்குடியினருக்கு முறையாக நில உரிமைகள் மாற்றப்படாததால்... மலைப்பகுதியின் சுமார் 15,000 ஏக்கர் நிலங்களை வனத்துறை காப்புக் காடுகள் RF என அபகரித்து கொண்டு, பழங்குடியினரை அவரவர் நிலங்களிலிருந்து வெளியேற்றினர்.
கல்வராயன் மலைப்பகுதி இனாம்தாரி எஸ்டேட்களாக இருப்பதால், வன உரிமை சட்டம் அமலாவதற்கு சிக்கல்கள் இருக்கிறது"- என்றார்.
70,000 ஹெக்டேர் நிலம், அதாவது சுமார் 2 இலட்சம் ஏக்கர் நிலம், விழுப்புரம் & சேலம் மாவட்டங்களின் கல்வராயன் மலையில் வருகிறது. சுமார் 30,000 ஏக்கர் நிலங்களை அன்னியர்கள் (அரசியல்வாதிகள் , பணக்காரர்கள்) சட்டவிரோதமான வழிகளில் அபகரித்து விட்டதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 'கல்வராயன் மலைப் பகுதிக்கு வன உரிமை சட்டம் பொருந்துமா?' எனப் பேசுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
3) திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் மட்டுமே, மலையாளி பழங்குடியினர் மிக அதிகமாக 50,000 க்கும் கூடுதலானோர் வாழ்கின்றனர். வாழ வழியில்லாமல் வேலை வாய்ப்பு இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் செம்மரம் வெட்டும் வேலைக்காக திருப்பதி வனங்களுக்கு சென்று சிக்கிச் சீரழிந்தனர் ; செத்தனர், சிறைகளில் வாடினர்....
இவை எல்லாம் தான் தமிழகப் பழங்குடியினர் வாழ்க்கை நிலைமைகள்....
பழங்குடியினர் பற்றிய
அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன?
************************************
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பழங்குடியினர் நலனுக்காக/பாதுகாக்க அட்டவணை 6 மற்றும் 5 யை உருவாக்கியுள்ளது. 6 வது அட்டவணை 6 th schedule அசாம் மற்றும் வடகிழக்கு மாநில பழங்குடியினரை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. பிற மாநிலங்களில் பழங்குடியினர் வாழும் பகுதிகள் பாதுகாக்கப்பட 5 வது அட்டவணை உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு இதன் கீழ் வரவில்லை. த.நா.யை 5வது அட்டவணையில் கொண்டு வர மலையாளி பேரவையும் கூட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இவ் விஷயத்தில்
தமிழக அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. மாறாக, வன உரிமை சட்டம் 2006 யை கூட அமல்படுத்த உண்மையாக செயல்படவில்லை. "த.நா.ல் வன உரிமை சட்டப்படி பழங்குடியினருக்கு பட்டா உரிமை வழங்கக் கூடாது " என ஓய்வுபெற்ற வன அதிகாரி 2008 ல் தொடுத்த வழக்கை காரணம் காட்டி கிடப்பில் போட்டது. 2015 ல் தான், பழங்குடி இயக்குநர் வழக்கில் தன்னை இணைத்து கொண்டார்.
"ஏன் இன்னமும் அமல்படுத்தவில்லை ?" உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வந்தபிறகு தான் தமிழக அரசாங்கம் அமலாக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 27, 285 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 4471 பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் சொல்கிறது.
இதுவும் கூட எந்தளவு நேர்மையாக, சரியாக நடந்தது என அறிக்கை வெளியிடப்பட்டால் தான் தெரியும்.
அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றி வைக்கும் அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தில் டாக்டர். அம்பேத்கர் கூறியது நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர் அதை அமலாக்கம் செய்யும் நிர்வாக அமைப்பின் Executive கையில் உள்ளது." நிர்வாக அமைப்பு சரியில்லை என்றால்... அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய எந்தவொரு சமூகநீதிக் கோட்பாடுகளும் அமலுக்கு வராது; மக்களுக்கு போய் சேராது.
தமிழக பழங்குடியினர் நலம் - மாநில அரசின் செயல்பாடு என்ன?
-----------------------------------------------------
மிகவும் பின்தங்கிய நிலையில், பொருளாதாரத்தின்
விளிம்பில் வாழும் தமிழக பழங்குடியினர் நலனுக்காக தமிழக அரசாங்கம் 2015-16 ல் ஒதுக்கிய நிதி 1.10 % மட்டுமே ஆகும். அதாவது ரூ.218 கோடி மட்டுமே! அதாவது மக்கள் தொகை சதவீதத்திற்கு ஏற்ப தான் ஒதுக்கீடு வழங்குமாம்!
எவ்விதமான கரிசனமோ, கூடுதல் அக்கறையோ கிடையாதாம்!
2015-16 ல் செய்த செலவுகளையும், 2017-18 திட்ட ஒதுக்கீடு விவரங்களையும் பரிசீலனை செய்வோம்.
கல்விக்கு கணிசமான நிதியை ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளார்கள். மாநிலத்தில் எழுத்தறிவு 80 % ஆக இருக்கும் போது, பழங்குடியினர் எழுத்தறிவு 54 % என்பதால் அந்த நிதியும் கூட போதாது. இது ஒருபுறமிருக்க, பிற சில செலவினங்களை பார்ப்போம்.
மலைக் கிராமங்களில்
பிரசவத்திற்கான மருத்துவ வசதிகள் இல்லாததால், இன்றும் கூட பழங்குடி கர்ப்பிணிப் பெண்கள் இறக்கும் நிலை இருக்கும் பொழுது...
சுகாதாரம் & மருத்துவம் என்பதற்காக 1 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
பழங்குடியினர் நலவாரியம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி வெறும் ரூ.2000 மட்டுமே யாகும். துணைத் திட்டத்தின் Sub plan கீழ் மேம்பாட்டு ஆணையம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1000 மட்டுமே!
"கல்வராயன் மலை மக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்காக சிறப்பு திட்டங்கள் அமலாக்க வேண்டும் " என
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்ட பிறகு தான் வெறும் 11 இலட்சம் நிதியை ஒதுக்கி, "கல்வராயன் மலை நிர்வாக அமைப்பு " என்பதை அறிவித்துள்ளார்கள்.
பள்ளிக் கல்வி விஷயத்தில்,42 விடுதிகளில் பயிலும் 2782 மாணவ, மாணவியர்களுக்காக உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.41.53 இலட்சம் தான் ...அதாவது ஒரு மாணவருக்கு மாதம் உணவுக்காக ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 125 ரூபாய் தான்!
ஆனால், பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் அரசு சாரா NGO தொண்டு நிறுவனங்களுக்கு நிதி என்ற வகையில் தரப்பட்ட நிதி சுமார் ரூ.140 இலட்சம் ஆகும். பழங்குடியினர் குழந்தைகள் சாப்பிடுவதற்கு நிதி ஒதுக்கத் தயாராக இல்லாத அரசாங்கம், NGO க்கள் பெயரில் கொள்ளையடிக்க நிதியை ஒதுக்கியது.
மலைகளில் சாலைகளே இல்லாமல் பழங்குடியினர் துன்பப்படும் போது, சாலைகள் போட ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 10.80 இலட்சம் தான்! மின்சாரத்திற்கு ஒதுக்கிய தொகை ரூ. 2000 மட்டுமே
2017-18 ம் ஆண்டு மாநில நலத் திட்ட (ரூ.55,000 கோடி) செலவினத்தில் பழங்குடியினருக்கு ஒதுக்கியது ரூ.607 கோடி மட்டுமே!
படித்த பட்டதாரிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். செம்மரக்கட்டை வெட்டச் சென்ற இளைஞர்களில் பலரும் படித்த இளைஞர்கள். ஆனால், தாட்கோ' வில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது: 288 தொழில் முனைவோருக்கு மொத்தம் ரூ.10.80 கோடி மற்றும் படித்த இளைஞர்களுக்கு பயணிகள் வாகனம் வாங்க 56 பேருக்கு ரூ.2.24 கோடி மட்டும் தானாம்!
படித்த பழங்குடியினர் வேலை வாய்ப்பு என்னவானது?
-------------------------------------------------
பழங்குடி இளைஞர்கள் விழிப்புணர்வு, கண்காணிப்பு உணர்வு உயர வேண்டும். போராட்டங்கள் இல்லாமல் வேலை வாய்ப்பு பெறமுடியாது.
தமிழகத்தில் பழங்குடிகள் என்ற பெயரில்
#போலிகள் நிறைந்துள்ள நிலையில்.... அரசு சார்ந்த வேலைவாய்ப்புகளை அவர்கள் பறித்துக் கொண்டு இருப்பது குறித்த விழிப்புணர்வும், இயக்கமும் உருவாகாமல் நிலையை தலை கீழாக மாற்ற முடியாது.
தமிழகத்தில் போலிப் பழங்குடி சான்றிதழ் பெற்றோர் ஒரு இலட்சத்திற்கும் மேலாக இருப்பர். 1971-81 காலகட்டத்தில் போலிகள் எண்ணிக்கை அசுர வேகம் பெற்றது. பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை / சென்சஸ் கணக்கெடுப்பில் தமிழகத்தில் பழங்குடியினர் மக்கள் தொகை சராசரி உயர்வு 10% ஆகும். ஆனால், 1971-81 ல் மட்டுமே 67 % உயர்வு என கணக்கு வந்தது. (1971 ல் 3,11,515 பேர், 1981ல் 5,20,226 அதாவது 2 இலட்சம் பேர் உயர்வு என்றது, சென்சஸ்).
1961 க்கும் 2011 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் போலிகள் என்னென்ன பெயர்களில் சான்றிதழ் பெற்றனர் என்பதை கவனிக்க வேண்டும். 1961 ல் வெறும் 8 பேராக இருந்த கொண்டா ரெட்டி 1991 ல் 31,517 ஆக உயர்ந்தது. 1961 ல் 6459 ஆக இருந்த #காட்டுநாயகன், காட்டு நாய்க்கன் என்ற போலிகளால் 2011 ல் 46,672 என அதிகரித்தது. (உண்மையான காட்டுநாயகன் நீலகிரி மற்றும் அருகாமையில் வயநாடு-கேரளா வில் வசிக்கும் அருகி வரும் தொல் பழங்குடியாகும்.) 1961 ல் 112 ஆக இருந்த குறுமன் (நீலகிரி பழங்குடி) பெயரில் குரும்பக் கவுண்டர் போலிகள் பழங்குடி சான்றிதழ் வாங்கியதால், 2011 ல் அது 30,965 ஆகியது. இதே போல் வெறும் 2 பேராக இருந்த மலை வேடன் 2011 ல் 7215 ஆக மாறியது. இதேபோல் மலை குறவன் 2011 ல் 19,645 ஆக மாறியது.
#இவையனைத்தும்_வெறும்_சான்றிதழ்கள்_அல்ல! #அரசு_வேலைவாய்ப்புகள்!
1981 க்குப் பிறகு தான் ...
போலிகள் நுழைவு பற்றி பல்வேறு அமைப்புகள் பிரச்சினையை கிளப்பின;
பல்வேறு கமிட்டிகள் அறிக்கை தந்தன. 1989 க்குப் பிறகுதான் பழங்குடி சான்றிதழ் வழங்குவதை வருவாய் கோட்டாட்சியர் RDO பொறுப்பில் முறைப்படுத்துகிறார்கள்.
1994 ல் தான் போலிச் சான்றிதழ்களை களை யெடுக்க SC க்கு மாவட்ட விழிப்புணர்வு குழுவும், ST பழங்குடிக்கு மாநில கூர்நோக்கு குழுவும் உருவாக்கப்பட்டன. கேரளாவில் "SC & ST சாதி சான்றிதழ் நெறிப்படுத்தும் சட்டம் 1996" உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் இன்றுவரை அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
மாநில கூர்நோக்கு குழு அமைக்கப்பட்ட
பிறகும் #போலிகள் தங்கள் சங்கங்கள் மூலமாக வழக்குகள் என வலுவாக எழுந்து வருகின்றனர். மலையாளி பேரவையின், வேறு சிலரின் தொடர் முயற்சிகள் காரணமாக, 31,517 என்பதிலிருந்து கொண்டா ரெட்டி போலிகள் 2011 ல் 9,847 என சரிந்து விட்டனர். எனவே தான், சஞ்சீவி போன்ற போலிகள் பாஜக கட்சி ஆதரவுடன், மலையாளி பழங்குடிக்கு எதிரான சதிகளில் ஈடுபடுகிறார்.
போலிகளுக்கு எதிராக, வேலை வாய்ப்பு உரிமையை வென்று எடுக்க
பழங்குடி இளைஞர் சமுதாயம் ஊக்கமாக எழுந்து வரவேண்டும்.
பிரிட்டிஷ் காலனிய வனச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்!
**********************************
இந்திய அரசாங்கம் நிறைவேற்றிய "வன உரிமை சட்டம் -2006" யை அமல்படுத்த பணியாற்றாத தமிழக அரசாங்கம், வனங்களை பராமரிக்க பழங்குடியினரை கையாள பயன்படுத்தி வரும் அடிப்படை சட்டம் 1882 ம் ஆண்டு த.நா.வனச் சட்டம் ஆகும்.
கடந்த 1.7.2016 ம் ஆண்டில், சேலம் மாவட்ட வாழப்பாடி வனச் சரக அலுவலர், நொய்யமலைப் பகுதியில் கிளாக்காடு பொ.கந்தசாமி என்ற மலையாளி பழங்குடியிடம் ரூ.20,000 அபராதம் விதித்து வசூலித்தனர். அவர் செய்த குற்றம் "புதர், செடி கொடிகளை வெட்டி சுத்தம் செய்தார்" என்பதாகும். என்ன அநியாயம்!
இதே காலனிய ஆட்சிக் கால சட்டத்தை வைத்துக் கொண்டு தான், கள்ளக்குறிச்சி DFO விவசாய நிலங்களை சமப்படுத்த இயந்திரங்கள் பயன்படுத்தும் பழங்குடியினரை தாக்குகிறார்.
த.நா.வனச் சட்டம் 1882 என்ற காலனிய சட்டம் உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லை எனில், வன உரிமை சட்டம் 2006 ன் கீழ், சிறு வனப் பொருட்கள் மீதான உரிமைகளை தமிழகப் பழங்குடிகள் என்றும் பெற முடியாது.
நிலத்தின் மீதான உரிமைகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஏற்கெனவே பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு மலைகளில் மொத்தம் 50,000 ஏக்கர் வரை நிலங்கள் பழங்குடியினர் கைகளை விட்டு சென்று விட்டது. த.நா.ல் ரெவின்யூ GO 15-40 மூலம் பழங்குடியினர் நிலங்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும்...அதிகாரிகள் மதிப்பதில்லை.
வேறு மாநிலங்களில் பழங்குடியினர் நில பாதுகாப்பு சட்டங்கள் உள்ளது. மஹாராஷ்டிரா பழங்குடியினர் நிலம் மீட்டெடுப்புச் சட்டம் - 1974 கூட உள்ளது. ஆனால்...
தமிழகம் 5 வது அட்டவணையில் இணைக்கப்படவில்லை. பழங்குடியினர் நிலங்களை பாதுகாக்கும், பறிபோன நிலங்களை மீட்டெடுக்க சட்டங்கள் உருவாக்கப் படவில்லை.
#பல்லாயிரக்கணக்கில்_அணிதிரள்வீர்!
********************************
நிலம், வேலை வாய்ப்புகள், வனத்தின் மீதான உரிமைகள் எனப் பழங்குடியினர் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் மீது மாபெரும் இயக்கம் ஒன்றை உருவாக்க, தயாரிக்க " பழங்குடியினர் வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு" நோக்கி செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை: