புதன், 27 செப்டம்பர், 2017

கொழும்பு.. ரோஹிங்யா அகதிகளை பௌத்த துறவிகள் விரட்டி கலைத்தனர் .. புறநகர் வீடொன்றில் ..

கல்கிசையில் ஐ.நா. முகவரமைப்பொன்றின் மேற்பார்வையில் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த  பிக்கு தலைமையிலான குழுவினர் பெரும் குழப்பம் விளைவித்து அந்த அகதிகளை அங்கிருந்து விரட்டி கலைத்துள்ளனர்.
இதற்குப் பின்னரும் மேற்படி இனவாதக் குழுவினர் அப்பகுதியில் வேறெங்கும் ரோஹிங்யா அகதிகள் இருக்கின்றனரா என தேடுதல் நடத்தியதால் அங்குள்ள முஸ்லிம்கள் பதற்றமடைந்தனர். மேற்படி சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
இந்தியாவில் தங்கியிருந்த ரோஹிங்யா அகதிகள் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை  வடக்கு கடற்பகுதியில்  வைத்து கடற்படையினர் கைது செய்து ஊர்காவற்றுறை பொலிஸில் ஒப்படைத்தனர். பொலிஸார் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்செய்த நிலையில்,  ஐக்கிய நாடுகளுக்கான  அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அவர்களைப் பொறுப்பேற்று கல்கிசை சேர்குலர் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கவைத்து பராமரித்தது.


இவ்வாறு தஞ்சமடைந்திருந்த அகதிகளின் வீட்டுக்குள்  நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நுழைந்த பிக்கு ஒருவர் தலைமையிலான இனவாத குழுவினர் அங்கிருந்த யு.என். எச்.சி.ஆர். அதிகாரிகளுடன் அகதிகளை  வெளியேற்றுமாறு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

ரோஹிங்யர்கள் அகதிகள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள் எனவும் அவர்களை இங்கிருந்து  வெளியேற்ற தங்களுடன் இணையுமாறும் அப்பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது அகதிகளையும் முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளனர். அந்த வீட்டினுள் புகுந்து அகதிகளை தாக்கும் விதத்திலும் செயற்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.  இந்த குழப்ப நிலையின் போது அங்கு வந்த கல்கிசை பொலிஸார் 31 அகதிகளை தமது வாகனத்தில்  ஏற்றி  பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இனவாதிகள் அங்கிருந்து சென்ற நிலையில் மீண்டும் பிற்பகல் அப்பகுதியில்  வேறெங்கும் அகதிகள் இருக்கின்றனரா என விசாரித்து  தேடியுள்ளனர். அப்பகுதியில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்வதால் அவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

2ஆவது தடவையாக வீடு முற்றுகை

இதேவேளை பொலிஸாரினால் நேற்று முற்பகல் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹிங்யா அகதிகளை  மீண்டும் கல்கிசையிலுள்ள அதே இடத்திற்கு  அழைத்து வந்து அவர்களை பொலிஸார் தங்கவைத்த நிலையில் அதனை அறிந்த  சிங்கள ஜாதிக பலமுழுவ அமைப்பினர் மேலும் பல சிங்களவர்களை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பெரும்  குழப்பங்களை விளைவித்து  அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை  பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின்  ஊடாக ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசையில் ஒன்றுகூடுமாறும் சிங்களவர்களுக்கு அழைப்பு விடுத்த சிங்கள ஜாதிக பலமுழுவ அமைப்பினர்  அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து  கடும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில்  ரோஹிங்யா அகதிகள் விசேட வாகனங்கள் மூலம்  நேற்று மாலை வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எவ்வாறாயினும் சிங்கள ஜாதிக பலமுழுவ அமைப்பினரின் போராட்டங்கள் அந்த பகுதியில் தொடர்ந்ததுடன் ரோஹிங்யா அகதிகள் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்படும் இடங்களில் பிக்குகளும்  பௌத்த அமைப்புகளும் அவர்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயார் நிலையில் இருந்தனர்.  இதனால் கல்கிசை பகுதியில் கொழும்பு  காலி வீதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

மேற்படி  சம்பவத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் இனவாதிகளுக்கு உடந்தையாக இருந்து அகதிகளை வெளியேற்றியமையை  இட்டு  அமைச்சர் ரிசாத் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கவலை தெரிவித்தனர்.

  இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் ரிசாத் தொடர்பு கொண்டு அகதிகளுக்கு இடையூறு விளைவிக்க இடமளிக்க வேண்டாமென  கோரியுள்ளார். இதேவேளை சிங்கள ஜாதிக பலமுழுவ அமைப்பினரே இச்செயற்பாட்டில் ஈடுபட்டதாக முஸ்லிம்கள் தரப்புகள்  குற்றஞ்சாட்டுகின்றன.  thinakkural.lk

கருத்துகள் இல்லை: