சனி, 30 செப்டம்பர், 2017

குஜராத் .. மீசை வைத்ததற்காகத் தலித் இளைஞர் மீது தாக்குதல்!

மீசை வைத்ததற்காகத் தலித் இளைஞர் மீது தாக்குதல்!
மின்னம்பலம் : குஜராத்தில் மீசை வைத்திருந்த காரணத்துக்காக இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் தலைநகர் காந்தி நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது லிம்போதரா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரான பியுஷ் பர்மார் (24) மற்றும் அவரது உறவினர் டிகன்ட் மகேரியா ஆகியோர் கடந்த 25ஆம் தேதி கார்பா விழாவில் கலந்துகொண்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது தர்பார் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் அவர்களைக் கடுமையாக தாக்கியுள்ளனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த பியுஷ் மீசை வைத்திருந்ததால் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்துறை விசாரணையில் அவர்களைத் தாக்கியது அதே கிராமத்தைச் சேர்ந்த மயூர்சிங் வாக்லலா, ராகுல் விக்ரம்சிங் செராத்யா மற்றும் அஜித்சிங் வாகேலா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“சம்பவத்தன்று நாங்கள் விழா முடித்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது தர்பார் சமூகத்தைச் சேர்ந்த மூவரும் கேலி செய்தனர். அதைக் கண்டுகொள்ளாமல் நாங்கள் வீட்டுக்குச் சென்றோம். ஆனால், அவர்கள் எங்களைப் பின்தொடர்ந்து வீட்டுக்கே வந்து தாக்கினர். பின்னர் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து வந்த நீங்கள் எப்படி மீசை வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டனர்” என்று பியுஷ் கூறியுள்ளார்.
தற்போது தலித் சமூக இளைஞர்கள் தாக்கப்பட்டது முதன்முறை அல்ல. இதுபோன்று கடந்த ஆண்டு மீசை வைத்த காரணத்துக்காக அகமதாபாத்தைச் சேர்ந்த மகேஷ் பர்மா என்ற இளைஞர் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: