இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அதிமுகவுக்கு 35 சதவீத வாக்கு வங்கி உள்ளது. இதில் சுமார் 20 சதவீதம் திமுகவுக்கு எப்போதுமே வாக்களிக்க விரும்பாத இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களின் வாக்குகள். அதனால்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திராவிடம் பேசினாலும் இந்து என்ற அடையாளத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தீவிர இந்துத்துவ எண்ணம் கொண்டவர்கள்கூட அதிமுகவுக்கு வாக்களித்து வந்தனர். ஜெயலலிதா மரணத்தால் இந்த வாக்காளர்களை பாஜக பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே மோடி, அமித்ஷாவின் எண்ணமாக உள்ளது’’ என்றார்.
பாஜக நிறுவனர் தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 25-ம் தேதி டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக தலைவர்களுடன் நடப்பு அரசியல் குழப்பங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். ‘பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சிகள் எல்லா விஷயத்திலும் பாஜக மீது குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, அரசை ஆதரிப்பது பாஜகவுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என சில தலைவர்கள் அமித்ஷாவிடம் எடுத்துக் கூறியுள்ளனர். அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், நல்ல முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
உத்தரப்பிரதேசம், பிஹார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான். குஜராத் போன்ற மாநிலங்களில் கடந்த 2014-ல் பெற்ற இடங்களை மீண்டும் பெறுவது கடினம் என மோடியும், அமித்ஷாவும் நினைக்கின்றனர். எனவே, 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது அவர்களின் இலக்காக உள்ளது.
தற்போதைய நிலையில் பழனிசாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. எம்ஜிஆர் காலத்தில் மக்களவை தொகுதிகளில் மூன்றில் 2 பங்கு இடங்களில் காங்கிரஸும், சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் 2 பங்கு இடங்களை அதிமுகவும் பகிர்ந்து கொண்டு போட்டியிட்டன. இது எம்ஜிஆர் பார்முலா என அழைக்கப்பட்டது.
அதேபோல சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு மூன்றில் 2 பங்கு இடங்களை விட்டுக் கொடுத்துவிட்டு, மக்களவையில் மூன்றில் 2 பங்கு இடங்களை பெற்றுக் கொண்டு தேர்தல் கூட்டணி அமைக்க மோடியும் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக