சனி, 30 செப்டம்பர், 2017

யஷ்வந்த் சின்ஹா : அருண் ஜேட்லியின் தரக்குறைவான, மலிவான கருத்துக்கள்

tamilthehindu : நரேந்திர மோடியின் நடப்பு ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் மீது கடும் விமர்சனங்களை பாஜக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா முன்வைத்ததற்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி, “80 வயதில் வேலைக்கு விண்ணப்பம் செய்கிறார்” என்று பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.
இது பற்றி பிடிஐ செய்தி நிறுவனம் கருத்து கேட்ட போது யஷ்வந்த் சின்ஹா, “மிகவும் தரக்குறைவான, மலிவான கருத்துக்கெல்லாம் பதில் அளிப்பது எனது மரியாதைக்கு இழுக்கானதாகக் கருதுகிறேன்” என்றார். மேலும் அத்வானியின் அறிவுரையைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு அவருக்கு இழுக்கு தேடித்தந்துள்ளார் அருண் ஜேட்லி என்றும் கூறினார் யஷ்வந்த் சின்ஹா. அதாவது எதாக இருந்தாலும் பிரச்சினைகளைப் பேச வேண்டுமே தவிர தனிமனித தாக்குதல் கூடாது என்று அத்வானி தனக்கு 1999-ல் அறிவுரை வழங்கியதாகவும் தான் அவ்வப்போது அதனை மீறினாலும் பெரும்பாலும் அவரது அறிவுரையைப் பின்பற்றுகிறேன் என்று அருண் ஜேட்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசியலில் சேர்வதற்காக 12 ஆண்டுகள் முன்னதாகவே ஐஏஎஸ் பதவியைத் துறக்க முடிவெடுத்ததாகக் கூறிய சின்ஹா, 2014-ல் பலரும் தன்னை தேர்தலில் நிற்குமாறு வலியுறுத்தியும் தனது வெற்றி உறுதி என்று தெரிந்தும் தேர்தல் அரசியலைக் கைவிட முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.
“அவர் (ஜேட்லி) என்னுடைய பின்னணி என்ன என்பதை முழுதும் மறந்து விட்டார். பொதுவாழ்க்கையில் கவனம் செலுத்த நான் ஐஏஎஸ் பதவியை 12 ஆண்டுகளுக்கு முன்னதாகவே துறந்தேன். வி.பி.சிங் அமைச்சரவையில் 1989-ம் ஆண்டு இணை அமைச்சராக பதவி கிடைத்தும் மறுத்தேன், காரணம் எனக்கு சில பிரச்சினைகள் இருந்தன.
நான் தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன், முழு நேர அரசியலில் நான் இல்லை, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனவே எனக்கு பதவி ஒரு பொருட்டேயல்ல, அப்படி பதவிக்காக ஆசைப்பட்டிருந்தால் நான் ஏன் அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்?” என்று கூறுகிறார் யஷ்வந்த் சின்ஹா.
வாஜ்பாயி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த சின்ஹாவின் செயல்பாடுகள் குறித்து ஜேட்லியும், பாஜக தலைவர்கள் சிலரும் தற்போது விமர்சித்தது குறித்தும் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்ததும் குறித்து கருத்து கூறிய சின்ஹா, “பாராளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகே அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் மோதல் போக்கில் இருந்தனர், எனவே வெளியுறவு அமைச்சகம் என்பது ஒரு பயனற்ற பதவி, நிதியமைச்சகத்திலிருந்து நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன் என்று கூறுவது சுத்த முரண்பாடு” என்றார்
இந்த அரசுதான் பாரத ரத்னா கொடுத்து வாஜ்பாயியைக் கவுரவித்தது, ஆனால் அவரையும் விமர்சிக்கத் தொடங்கி விட்டனர், தான் 5 பிரதான நிதிநிலையறிக்கைகளையும், இரண்டு இடைக்கால பட்ஜெட்களையும் வழங்கிய அனுபவம் உள்ளது என்றும் கூறினார் சின்ஹா.
பொருளாதார ஆலோசனைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது பற்றி கூறிய சின்ஹா, “இதன் மூலம் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம், கருத்து கூறுவதற்கு முன்பாக சில நடவடிக்கைகளுக்காக பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
மேலும் நான் 80வயதில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் ஜேட்லி இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டார் என்று ஜேட்லி கருத்து குறித்து மீண்டும் ஆங்கில ஊடகத்தில் அவர் தெரிவித்ததோடு, தான் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் தானும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட முடியும் ஆனால் அந்தப் பொறியில் தான் விழ விரும்பவில்லை என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் யஷ்வந்த் சின்ஹா எழுதிய கட்டுரைக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அவரது மகன் ஜெயந்த் சின்ஹா பதில் கட்டுரை எழுதியிருந்தார், இந்நிலையில் இவருடைய இந்த விமர்சனங்களால் மகனது அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சினை ஏற்படாதா என்று கேட்ட போது, அது அப்படித்தான் என்றால் அப்படியே நடக்கட்டும் என்று பதிலுரைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: