திங்கள், 20 பிப்ரவரி, 2017

பன்னீர் எம்எல்ஏக்களுடன் தினகரன் பேச்சு வார்த்தை !

சசிகலா ஜெயிலுக்கு புறப்படும் முன் கூவத்தூர் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார். “நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்றுங்கள், எந்த சூழ்நிலையிலும் கட்சி பிளவுக்கு காரணமானவர்களை மன்னிக்க கூடாது. நான் யாரை மன்னித்தாலும் மன்னிப்பேன் கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்கமாட்டேன். அவரை தனிமைப்படுத்த வேண்டும்” என்றும் ஆதரவாளர்களிடம் தெரிவித்து சென்றார். இந்நிலையில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று அமைச்சரவையை அமைத்தார்.
இதையடுத்து டிடிவி தினகரன் மாஃபா பாண்டிய ராஜனை தொடர்பு கொண்டு கட்சிக்குத் திரும்பி வருமாறு அழைத்திருக்கிறார். பாண்டியராஜனோ, தனக்கு தான் வகித்த அமைச்சர் பதவியை வழங்கினால் கட்சிக்கு திரும்பத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்கு தினகரன், “ஏற்கெனவே அமைச்சரவை அமைக்கப்பட்டுவிட்டது. செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்று விட்டார். ஆறு மாதங்கள் பொறுத்திருங்கள். அதன் பிறகு பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.


ஆனால் இதற்கு பாண்டிய ராஜன் உடன்படவில்லை. இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் இருவருக்கு வாரியக் பொறுப்பு கொடுக்க சம்மதம் தெரிவித்து அவர்களை கட்சிக்கு திரும்பி வருமாறு அழைத்திருக்கிறார் தினகரன்.
இதையறிந்த ஓ.பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களிடம், “ எடப்பாடி அரசு கவிழப்போகிறது. எதற்கு இப்போது அங்கே செல்கிறீர்கள். நாம் ஆட்சியைப் பிடிப்போம்” என்று அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அணிக்கு உற்சாகம் அளித்துள்ளது. ஓ.பி.எஸ் அணி எம்.ல்.ஏக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஓட்டெடுப்பு நடைபெறாமல் தள்ளிப்போகும் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் அமைதி காத்து செயல்பட்டதால் எதிர்அணியின் முயற்சி எடுபடவில்லை.
இந்த நிலையில் ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் எம்.எல். ஏக்களை மீண்டும் அ.தி.மு. கவுக்கு அழைக்க அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. காரணம், சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அறிந்து சிறையில் இருந்த சசிகலா மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறார். உடனே சிறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று தினகரனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது அவர், “ஓ.பன்னீர்செல்வத்தை தவிர கட்சியைவிட்டு பிரிந்து சென்ற அனைவரையும் எப்படியாவது கட்சிக்கு கொண்டு வர வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்.

எனவே சசிகலாவின் சொல்லை சிரமேற்கொண்டு கட்சியை ஒன்றிணைக்கும் பணியில் தீவிரமாக செயல்படுகிறார் தினகரன் என்ற தகவல்கள் வருகின்றன. எனவே தினகரன் ஓ.பிஎஸ் பக்கம் உள்ள எம்எல்ஏக்களிடமும் எம்பிகளிடமும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது   மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: