குறிப்பாக தற்போது பிரதமர் வருகையை முன்னிட்டு பக்கத்தில் உள்ள காடுகள்
சுத்தப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் பந்தோபஸ்து ஏற்பாடுகள்
செய்யப்படுவதால் அங்குள்ள காட்டு யானைகள் இங்குள்ள கும்கி யானைகளை
கடுமையாகவே மிரட்டிக் கொண்டிருப்பதாக வனத்துறை ஊழியர்கள்
தெரிவிக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையான வாளையாறு தொடங்கி, வடமேற்கு
எல்லையான சிறுமுகை வரை உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் மேற்குத்தொடர்ச்சி
மலையை ஒட்டி அமைந்துள்ளன. எனவே அந்த மலைக்காடுகளில் இருந்து புறப்படும்
யானைகள் இந்த கிராமங்களை ஒரு வழி ஆக்கி விடுகின்றன. இதனால் யானை மனித
மோதல்கள் தொடர்ந்து எழுந்தபடி இருக்கின்றன. இதில் மனிதர்கள் உயிரிழப்பு,
யானைகள் அழிப்பு தொடர்கிறது.
இதை தடுக்க யானை அகழிகள்,
மின்வேலித்தடுப்புகள், சியர்ச் லைட், யானைகள் வருவதை முன்கூட்டியே
அறிவிக்கும் அலாரம் போன்றவற்றை பயன்படுத்தியும் விடிவு கிடைக்கவில்லை.
இப்படி வரும் காட்டு யானைகளை விரட்ட முதுமலை அல்லது டாப்ஸ்லிப்பிலிருந்தே
கும்கியானைகளை அழைத்து வரவேண்டியிருந்தது. எனவே கோவையில் கும்கிகள்
அடிக்கடி தேவைப்படுவதால் முதுமலை மற்றும் டாப்ஸ்லிப்பில் உள்ளது போலவே
கோவையிலும் ஒரு கும்கி யானைகள் முகாமை 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தியது
தமிழக அரசு.
அந்த முகாமை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கோவை குற்றாலம் அருகே
உள்ள சாடிவயலில் அமைத்தது. டாப்ஸ்லிப்பிலிருந்து பாரி, நஞ்சன் என்ற கும்கி
யானைகளும் வரவழைக்கப்பட்டன. இவை தங்குவதற்கு கொட்டகைகள், இவற்றை
பராமரிக்கும் மாவூத்தர்கள், அவர்களின் உதவியாளர்கள் தங்குவதற்கு
குடியிருப்புகள் இங்கேயே ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் தமிழக அரசின் யானைகள்
நல வாழ்வு முகாமிற்கு சென்ற இந்த கும்கி யானைகளில் நஞ்சன் யானை மதம்
பிடித்து சரியான கவனிப்பின்றி இறந்தது. அதையடுத்து சாடிவயல் முகாமில் ஒற்றை
கும்கியாக இருந்து பாரி சிரமப்பட்டு வந்தது. எனவே முதுமலையிலிருந்து
இதற்கு துணையாக சுஜய் (47 வயது) என்ற கொண்டு வரப்பட்டது.
பாரிக்கும், நஞ்சனுக்கும் முன்பு இருந்த இணக்கத்தை போல் சுஜய்யுடன் பாரியை
ஏற்படுத்த முடியவில்லை பாகன்களால். தவிர இவை தங்கியிருக்கும் முகாம் பகுதி
முழுக்க காட்டு யானைகள் நடமாடும் பகுதி. தினமும் இரவு நேரங்களில் 14
யானைகள் முதல் 20க்கும் மேற்பட்ட யானைகள் வரை வருவதும், இந்த கும்கிகளை
தாக்க முற்படுவதும், அவற்றை பட்டாசுகள் வெடித்து விரட்டுவதுமே பாகன்களின்
அன்றாடப்பணியாக இருந்து வந்தது.
முன்பு பாரி, நஞ்சன் ஓரளவு இணக்கமாக இருந்ததால் இந்த காட்டு யானைகள் கிட்ட
நெருங்க முடியவில்லை. அப்படியே வந்தாலும் இரண்டும் ஒன்றிணைந்து அவற்றை
தாக்கி விரட்டி விடும் தன்மையில் செயல்பட்டது. ஆனால் இப்போது சுஜய்யுடன்
இணக்கம் இல்லாததால் எந்த நேரம் காட்டு யானைகள் இவற்றை தாக்குமோ என்ற
அச்சத்திலேயே பாகன்கள் இருந்து வந்தனர். சுஜய்யையும், பாரியையும் 50
மீட்டர் இடைவெளியிலேயே சங்கிலியால் கட்டி பாதுகாத்து வந்தனர். இதுகுறித்து
ஏற்கனவே கடந்த ஆண்டு தி இந்துவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி இரவு சாடிவயல் முகாமில் இருந்த
சுஜய் யானையை, காட்டுயானை ஒன்று மூர்க்கத்தனமாகத் தாக்கியது. இரண்டு
யானைகளுக்கும் இடையே நடந்த மோதலில் சுஜய் கும்கி யானையின் வலது தந்தம்
முழுவதுமாக கழன்று விழுந்தது. இதனால் காயமடைந்த நிலையில் உடல்நலம்
குன்றியது.
இதையடுத்து அந்த யானைக்கு வனத்துறையினரும், வனத்துறை கால்நடை
மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் வந்தனர். தற்போது தந்தம்
உடைந்த சுஜய் யானை மேற்கொண்டு கும்கியாக செயல்படுவது சிரமம் என்பதால், அதை
வேறு முகாமுக்கு கொண்டு செல்லவும், அதற்கு பதிலாக வேறு ஒரு யானையை
கும்கியாக அழைத்து வரவும் வனத்துறை முடிவு செய்து வனத்துறை தலைமைக்கு
கடிதம் எழுதியுள்ளனர் கோவை வனத்துறையினர்.
தமிழக அரசின் கோயில் யானைகள் முகாம் மேட்டுப்பாளையத்தில் நடப்பதால், அந்த
முகாம் முடிந்தவுடன் சுஜய்யும் முதுமலைக்கு கொண்டு செல்லப்படும் என்று
தெரிவித்து வருகின்றனர் வனத்துறையினர். அத்துடன் பாரியையும் டாப்ஸ்லிப்
முகாமிற்கே கொண்டு செல்லவும், வேறு 2 கும்கியானைகளை சாடிவயலுக்கு கொண்டு
வரவும் திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் மத்தியில் தகவல்கள் உலாவுகின்றன.
இந்த சூழ்நிலையில்தான் தற்போது காட்டு யானைகள் தொல்லை மிகவும்
அதிகரித்துள்ளதாகவும், எந்த நேரம் என்ன நடக்குமோ என்று பாகன்களே அஞ்சி
நடுங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் இங்கு பணியாற்றும்
வனத்துறை ஊழியர்கள்.
(முகாமில் உள்ள பாரி கும்கி யானை) இதுகுறித்து இந்த யானைகளை பராமரிக்கும் ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'போன வாரம் 14 யானைகள் வந்து சூழ்ந்துவிட்டது. அதை விரட்டவே படாதபாடு பட்டு விட்டோம். பாரிக்கு வயது குறைவு. எனவே அதற்கு எதிர்த்து நிற்கிற தைரியம் உண்டு. அதுவே அந்த யானைகளை பார்த்து நடுங்கி விட்டது.
அதுவே அப்படியென்றால் சுஜய் பற்றி நினைத்துப்பாருங்கள். அது மிரண்டு மரத்தை
சுற்றி சுற்றி வருகிறது. இதன் கொம்பை உடைத்த ஒற்றை யானையும் அடிக்கடி
வந்து விடுகிறது. இரண்டு முறை மீண்டும் இதன் மீது தாக்குதல் நடத்த
முயற்சிக்கிறது. அதற்கு இன்னமும் மதம் தீரவில்லை. இப்படியிருக்க 3 நாட்களாக
நிலைமை ரொம்ப மோசம் ஆகி விட்டது. பக்கத்தில் 3 கிமீ தொலைவில்தான் யோகா
மையம். அங்குள்ள சிலையை திறக்க பிரதமர் வருவதால் ஆயிரக்கணக்கான போலீஸார்,
பாதுகாப்பு அதிகாரிகள் இரவு பகலாக வந்து போகிறார்கள்.
4 முதல் 5 கிமீ தொலைவுக்கு மின்விளக்குகள் போட்டு பல்லாயிரக்கணக்கான
வாகனங்கள் வந்து போவதால் அங்குள்ள காட்டுயானைகள் எல்லாம் இந்தப் பக்கம்
வந்துவிட்டன. எனவே முன்பை விட 3 மடங்கு காட்டு யானைகள் இங்கே திரிகின்றன.
அவை அங்கே விரட்டப்படுவதால் ஆக்ரோஷமும் மிகுதியாக காணப்படுகிறது. என்ன
நடக்குமோ? என்ற அச்சத்திலேயே நாங்கள் இங்கே இருக்க வேண்டியிருக்கிறது!' என
தெரிவித்தனர்.
பாகன்களிடம் பேசியபோது, 'முதுமலையில், டாப்ஸ்லிப் முகாம்களை சுற்றிலும்
நிறைய காட்டு யானைகள் உலா வருவது உண்டு. அவற்றை பட்டாசு வெடித்து விரட்டி
விடுவோம். அதுவும் ஓடி விடும். இங்குள்ள யானைகள் முற்றிலும் வேறுபாடாக
உள்ளது. பட்டாசு வெடிக்கெல்லாம் நகருவதே இல்லை. ஏனென்றால் மதுக்கரை,
காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் எல்லாம் நிறைய கல்குவாரிகள் உள்ளது.
அங்கெல்லாம் இந்த யானைகள் வலசை போய் வருகிறது. அங்கு கல்குவாரி வேட்டு
சத்தத்திற்கும், அதில் படும் கல்லடிக்கும் மிகவும் பழகி விட்டது.
எனவே பட்டாசு சத்தங்கள் எல்லாம் அவை சட்டை செய்வதே இல்லை. எனவே இந்த
இடத்தில் கும்கி யானை முகாம் போட்டிருப்பதே சிக்கலனாது. இங்கே காட்டு
யானைகள் தொந்தரவு ஏற்பட்டால் முன்பெல்லாம் டாப்ஸ்லிப்,
முதுமலையிலிருந்துதான் கும்கிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து
விரட்டினோம். அப்போது இந்த மாதிரி பிரச்சினை எதுவும் இல்லை.
இப்போது ஆறு ஆண்டுகளாக இங்குள்ள கும்கிகளை பாதுகாப்பதில் அவ்வளவு பிரச்சனை
உள்ளது. அப்படி பாதுகாத்தும் ஒரு யானை (நஞ்சன்) இறந்து விட்டது. இன்னொரு
யானை தன் தந்தம் ஒன்றை இழந்துவிட்டது. இது தொடர்ந்தால் இன்னமும் என்னென்ன
சேதம் நடக்குமோ? இந்த சிரமங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உள்ளோம்!'
என்றனர். tamilthehindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக