வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஈஷா மைய சிவன் சிலை திறப்பு விழாவில் மோடி ..

கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி சிவன் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், எதிர்ப்பையும் மீறி இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மிக குருவினால் நடத்தப்பட்டு வரும் ஈஷா யோக மையத்தால் 112 அடி உயரமுள்ள ஆதி யோகி சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி தினமான இன்று, இந்த சிலை பிரதமரால் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கென தனி விமானம் மூலம் பிரதமர் மோதி கோயம்புத்தூர் வந்தார். ஈஷா யோக மையத்திற்கு வந்த அவர், அந்த மையத்தில் உள்ள தியான மண்டபத்தில் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து தியான லிங்கத்திற்கு தீபாராதனை காட்டி தியானத்தில் ஈடுபட்டார்.
பின்னர் 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிவன் சிலையை ஜோதி ஏற்றி, திறந்து வைத்த பிரதமர் மோதி, தொடர்ந்து விழாமேடையில் உடுக்கை அடித்தார். இது தொடர்பான புத்தகம் ஒன்றையும் வெளியிட்ட பிறகு பேசிய நரேந்திர மோதி, யோகாவின் சிறப்புகளை விவரித்தார். யோகாவைப் பின்பற்றுவதன் மூலம், மனம், உடல் மற்றும் அறிவு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுவதாகவும், இது ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம் என்றும் குறிப்பிட்டார். ஈஷா யோகா மையம் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுவருவதால் இந்த விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என சூழல் அமைப்புகள் வலியுறுத்திவந்தன. இது தொடர்பாக பல்வேறு அமைப்புக்களின் சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  bbc.com

கருத்துகள் இல்லை: