புதன், 22 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் :முதலமைச்சர் பதவி இல்லை என்றதும் ஜெ. மரணம் பற்றி விசாரணை தேவை என்கிறார் ஒ.பி.எஸ்

ஜெயலலிதாவின் சமாதிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்து தியானம் செய்து விட்டு, ‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது, அதுபற்றி விசாரணை தேவை’, என்று சொன்னார். இதை எப்போது சொன்னாரென்றால் முதலமைச்சர் பதவி அவருக்கு இல்லை என்றதும் சொல்கிறார். இதை விட வெட்கக்கேடான ஒன்று இந்த நாட்டில் உள்ளதா என மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (21-02-2017) காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், மதுராந்தகத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் மாபெரும் விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகிய ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய ஸ்டாலின்,அறிஞர் அண்ணா அவர்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி, சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு தாயகமாம் தமிழகத்திற்கு வந்தார். அனைவரும் அவர் நலமோடு இருக்கிறார் என்று கருதிக் கொண்டிருந்தோம். ஆனால், மீண்டும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது காலை, மாலை மட்டுமல்ல, இடையிடையில் அவருடைய உடல் நலம் பற்றி அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த தொடர்ந்து அறிக்கை வெளியிட்டார்.

அறிஞர் அண்ணா அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விவரம், சிகிச்சை விவரங்களை எல்லாம் தொடர்ந்து வெளியிட்டார். அதுதான் முறை, மரபு. அவர் மட்டுமல்ல, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் இறப்பதற்கு முன்னால், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை எல்லாம் அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் ஹண்டே அவர்களும் அதைத்தானே கடைபிடித்தார்.

;நான் கேட்கிறேன், முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எப்படி இருக்கிறார் என்ற செய்தி ஏதாவது வந்ததா என்றால் இல்லை. நாம் எதிர்க்கட்சி, அவர் ஆளும்கட்சி என்றாலும், அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர், என்னதான் அவர் அதிமுகவாக இருந்தாலும், நமக்கு எதிரான கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், நமக்கும் தானே அவர் முதலமைச்சர்? நாம் ஓட்டுப்போடவில்லை என்றாலும், அக்கிரம, அநியாய ஆட்சியை அவர் நடத்தி இருந்தாலும் கூட, நமக்கு கவலையில்லை. ஆனால், நமக்கு உரிய செய்திகள் வர வேண்டுமா? வேண்டாமா?

;அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் தொலைக்காட்சிகளில், ‘அம்மா நன்றாக இருக்கிறார், சாப்பிட்டார், நடக்கிறார், உட்கார்கிறார், பேசுகிறார், சிரித்தார், கையெழுத்துப் போட்டார்’, என்று பேட்டிகள் தந்து கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் செய்திகளாக வந்தன. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஒருவர் அதிமுகவில் இருந்தாரா, இல்லையா? அவர் சொல்லியிருக்க வேண்டாமா? இல்லையா? அவர் சொல்லவில்லை என்றாலும் தலைமைச் செயலாளர் இருந்தாரே, அவராவது ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டாமா? இல்லையா? முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் யார் என்று கேட்டால், ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவராவது ஒரு அறிக்கை வெளியிட்டாரா?

ஆனால், பிறகு அம்மையார் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து தியானம் செய்து விட்டு சொன்னார், ‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது, அதுபற்றி விசாரணை தேவை’, என்று சொன்னார். இதை எப்போது சொன்னாரென்றால் முதலமைச்சர் பதவி அவருக்கு இல்லை என்றதும் சொல்கிறார். இதை விட வெட்கக்கேடான ஒன்று இந்த நாட்டில் உள்ளதா என்று நான் கேட்கிறேன்.

இப்போது இப்படி கேட்கும் பன்னீர்செல்வம் என்ன செய்திருக்க வேண்டும்? இப்போது அவர் இறந்தபிறகு அவரது சமாதியில் வந்து, ‘நான் இரண்டாவது இடத்தில் நிதியமைச்சராக இருக்கிறேன், முதல்வர் உடல் நலன் பாதிக்கப்பட்ட பிறகு அவரது இலாகாக்களை எல்லாம் நான் தான் பார்த்துக் கொள்கிறேன், அதனால் முதலமைச்சர் நிலை பற்றி என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை’ என்று சொல்கிறீர்களே, நான் கேட்கிறேன், மதிப்புக்குரிய ஓ.பன்னீர்செல்வம் அவர்களே, முதலமைச்சரின் துறைகளை எல்லாம் கையில் வைத்துக் கொண்டிருந்தீர்களே, அப்போது இதை கேட்கின்ற அக்கறை, அருகதை, தெம்பு, திராணி வரவில்லை, என்று கேட்கிறேன். இப்போது வந்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கிறார். அதுவும் வெறும் அறிவிப்புடன் உள்ளது நக்கீரன்

கருத்துகள் இல்லை: