வெள்ளி, 27 ஜனவரி, 2017

காவி வேஷ்டியோடு வந்தவரை அனுமதிக்க மறுத்த கேரளா ஸ்டார் ஹோட்டல்


கேரளாவில் காவி வேஷ்டியை அணிந்து வந்தவரை ஆட்டோ டிரைவர் என்று நினைத்து உணவகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹரி என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்குமுன் தனது நண்பர்களுடன் மடம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது, அவர்கள் காவி வேஷ்டி அணிந்து சென்றனர். பின்னர், அருகிலிருந்த 'வொயிட் டேமெர்' என்ற நான்கு நட்சத்திர ஹோட்டலுக்கு உணவருந்தச் சென்றுள்ளனர்.
அங்கு, ஹரி காவி வேஷ்டி அணிந்திருந்ததால் ஆட்டோ டிரைவர் என்று நினைத்து அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இருப்பினும், ஹரி ஹோட்டலின் உரிமையாளருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவரும் அதே பதிலை அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர், கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுகுறித்து மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதுகுறித்து ஹோட்டல் பொதுமேலாளர் அனில் கூறுகையில், ‘வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்த சம்பவத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறேன். எங்கள் ஹோட்டலில் முதல் மாடியில் இருக்கும் எக்ஸ்க்யூடிவ் பாரில் மட்டும்தான் காவி வேஷ்டி அணிந்தவர்களை அனுமதிக்கமாட்டோம். எங்களது பாதுகாவலர், இந்த மாதிரியான ஆடைகளை அணிந்து எக்ஸ்க்யூடிவ் பாருக்கு செல்லக் கூடாது என்றுதான் கூறியிருக்கிறார். வேறு ஒன்றும் கூறவில்லை. மற்ற நட்சத்திர ஹோட்டல்களில் வெள்ளை வேஷ்டி அணிந்தவர்களைக்கூட அனுமதிப்பதில்லை. ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எப்படியிருப்பனும், மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். இதற்காக, சிசிடிவி காட்சிப் பதிவுகளை சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
இதுபோன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த 67 வயது மதிக்கதக்க ஒருவர் வேஷ்டி அணிந்து துபாய் மெட்ரோவுக்குள் சென்றார். அப்போது, அவர் உள்ளே நுழைவதற்கு மறுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: