சனி, 28 ஜனவரி, 2017

விவசாயிகள் தற்கொலை: அமைச்சர்களோ, கலெக்டர்களோ ஆறுதல்கூட சொல்லவில்லை: பேரவையில் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில்27-01-2017 வெள்ளிக்கிழமை திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: தற்கொலை செய்து மாண்ட விவசாயப் பெருங்குடி மக்களின் கிராமங்களுக்கு இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்களோ அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களோ ஒரு ஆறுதல் சொல்வதற்கு கூட செல்லவில்லை என்பது தான் வேதனைக்குரிய ஒன்று. அதை தான் இங்கு எங்களுடைய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஆகவே, இறந்த விவசாயிகள் 17 பேர் என்று இங்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். தயவுகூர்ந்து அதையாவது வேகப்படுத்தி, விரைவுபடுத்தி அவர்களுக்கான நிவாரண உதவியை வழங்குவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நான் நேரில் சென்ற அப்போதைய நிலையில் 10 விவசாயிகள் இறந்திருந்தனர். அதன்பிறகு ஏராளமான விவசாயிகள் அடுத்தடுத்து தொடர்ந்து உயிரிழந்தனர். அரசு தான் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஒருவேளை உங்களால் தர முடியவில்லை என்று சொன்னால் நாங்களே தருவதற்கும் தயாராக இருக்கிறோம். அமைச்சர்களோ, அதிகாரிகளோ பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை என்பதை நான் ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். மாண்புமிகு அமைச்சர் தயாராக இருக்கிறாரா? இவ்வாறு அவர் உரையாற்றினார். நக்கீரன்


கருத்துகள் இல்லை: