வியாழன், 26 ஜனவரி, 2017

ஏப்ரல் முதல் 2000 ரூபாய் நோட்டு செல்லாது? ஸ்டேட் வங்கி சங்க தலைவர் அறிவிப்பு !


மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இவற்றுக்கு மாற்றாக புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ரூ. 2000, ரூ.500 புதிய நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
இந்நிலையில் வருகிற மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ”பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கார்பரேட் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மட்டுமே மத்திய அரசின் நடவடிக்கையால் பயனடைகின்றன. 25 சதவிகித சிறு தொழில் முனைவோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கிரடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 48 பைசாவை அமெரிக்காவை சேர்ந்த விசா போன்ற 3 நிறுவனங்களுக்கு வங்கிகள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் போது எவ்வளவு காலம்தான் சர்வீஸ் ஜார்ஜ் இல்லாமல் செயல்படுத்துவர். எனவே 5 மாதத்தில் கார்டு பண பரிவர்த்தனைக்கு சர்வீஸ் சார்ஜ்களை வங்கிகள் பிடித்தம் செய்யும்.
பண மதிப்பழிப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மத்திய பாதுகாப்பு தொழிற்துறை சங்கங்கள் நாடு முழுவதும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் 31ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் ரூ.2000 புதிய நோட்டுகள் செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சுயாட்சி தன்மை முழுமையாக போய்விட்டது. அது அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இயங்குகிறது” என்று கூறியுள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: