புதன், 25 ஜனவரி, 2017

தொடரட்டும் இந்தச் சமூக அக்கறை.. ரெளத்திரம் பழகுவோம்! - ஆனந்த விகடன் தலையங்கம்!

‘கிளம்பிற்றுக்காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்’ என்று பாரதிதாசனும் பாடிக் கொண்டாடி வரவேற்ற எழுச்சியை நம் கண் முன்னே கண்டோம். இப்படி ஓர் எழுச்சியை, சமீபகாலச் சரித்திரம் கண்டது இல்லை. தமிழ்நாடு, பல்வேறு அரசியல் கிளர்ச்சிகளைச் சந்தித்த போராட்ட பூமிதான். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள், இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள், காவிரி நீருக்காக என ஏராளமான போராட்டங்களைக் கண்டிருந்தாலும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி சமீபத்தில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாதது.
மற்ற போராட்டங்களுக்குப் பின்னணியில், சிறியதாகவோ பெரியதாகவோ ஓர் அரசியல் இயக்கம் இருக்கும்; குறிப்பிடத்தக்க அரசியல் தலைமை இருக்கும். ஆனால் இந்தப் போராட்டமோ, முழுக்க முழுக்க இளைஞர்களால், மாணவர்களால் தலைமை தாங்கி நடத்தப்பட்டது. அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்துக்கோ, சினிமா நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்துக்கோ சிறிதும் இடம் கொடுக்காமல் களம் அமைத்துப் போராடினார்கள் இளைஞர்கள்.


 ஜல்லிக்கட்டுக்கான தடையை, நம் பண்பாட்டுப் பிரச்னையாக மட்டும் இளைஞர்கள் பார்க்கவில்லை. மிச்சம் மீதி இருக்கும் நாட்டு மாடுகளையும் அழிப்பதற்கான சூழ்ச்சியாகவும் இதற்குப் பின்னால் இருக்கும் பன்னாட்டு மூலதனச் சதியாகவும் புரிந்துகொண்டு எதிர்ப்பை முன்வைத்தார்கள். மேலோட்டமாகப் பார்த்தால், இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாகத் தெரியலாம். ஆனால். உலகமயமாக்கல் தொடங்கி உள்ளூர் அரசியல் போலித்தனங்கள் வரை பாதிக்கப்பட்ட இளைய தலைமுறையின் உள்ளக்குமுறல்தான் இது. மெரினாவிலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் கூடிய லட்சக்கணக்கான மக்கள், பீட்டாவுக்கு எதிராக மட்டும் அல்லாமல், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். 

இதை எந்த அரசியல் கட்சியும் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்திய இளைஞர்கள், எந்த அரசியல் கட்சிகளையும் அண்டவிடவில்லை.

 தலைவர்களே இல்லாத இந்தப் போராட்டம்தான், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மாநில அரசையும், வெறும் சால்ஜாப்புகளையும் பசப்பு வார்த்தைகளையும் மட்டுமே சொல்லிக்கொண்டிருந்த மத்திய அரசையும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க நிர்பந்தித்தது. இந்தப் போராட்டம், வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டும் அல்ல; மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்த ஒரு வடிவம் என்பதை இரு அரசுகளும் உணரவேண்டும்.

போராட்டத்தின் கடைசிக் கட்டம் சோகமானது. ஆறு நாட்கள் காத்துவந்த கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைச் சீர்குலைக்கும் வகையில் சில சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பிட்ட கால அவகாசம் தராமல் போராட்டக்காரர்களைக் கலைக்க முயற்சித்தது காவல் துறை. அது நிலைமையைக் கைமீறவைத்துவிட்டது. என்றாலும், அதற்காக ஒட்டுமொத்தமாக இளைஞர் எழுச்சியையோ, போராட்டத்தையோ விரக்தியுடன் நோக்கவேண்டியது இல்லை.

தமிழர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதினால், இனி வாய்மூடி கேளாக் காதினராக இருக்க மாட்டார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டும் எழுச்சிமிக்க இளைஞர்கள் தலைமையில் அணி திரள்வார்கள் என்பதைத்தான் இந்தப் புதிய வரலாறு உணர்த்துகிறது."
 தொடரட்டும் இந்தச் சமூக அக்கறையும் ரௌத்திரம் பழகும் போராட்ட உணர்வும். விகடன்

கருத்துகள் இல்லை: