வியாழன், 26 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு தாக்கம் :மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரியார் விரும்பியதும் அதைத்தான்

உலகப் போராட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம். சென்னை மெரினா போராட்டம் என இதை ஒரு நகரத்துக்குள்ளாக சுருக்கிவிடத் தேவையில்லை. சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னே அனைத்து மாவட்டங்களும் தொடர்ந்து வந்தன. ஒரு தலைநகரம் என்ன செய்ய வேண்டுமோ, அதை சென்னை செய்தது.
சென்னை பெருவெள்ளம், வர்தா பாதிப்பின்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் தனக்கு செய்த உதவிக்கு பிரதிபலனாகவே சென்னை இவற்றைப் பார்த்தது. அலங்காநல்லூரில் ஒருவர் வாங்கியபடியே, நொச்சிக்குப்பத்தில் போராடியவரும் அடிவாங்கினார். செல்லூரில் வாங்கிய அடிக்கு வெளியான அதே சத்தம் நடுக்குப்பத்தில் அடிவாங்கியவரிடமும் வந்தது. ஆனால், அங்கு ஓய்ந்தபிறகும் சென்னையின் குப்பத்துப் பகுதிகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. போராட்டத்தின் முடிவில் நடைபெற்ற இந்த கோர சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது ஆயிரம் பொன் கேள்வி.


ஒன்னுமண்ணா இத்தனை நாளும் பழகுனீங்களே என ஒப்பாரி வைக்காதக் குறையாக மீனவ கிராமங்கள் கதறுகின்றன. உங்களுக்கு சோறும் தண்ணியும் கொடுத்ததைத் தவிர வேற என்ன குத்தம் பண்ணோம் என்று நியாயம் கேட்கிறார்கள். ஆட்டம் போட்டப்பவெல்லாம் சும்மா இருந்தீங்க, ஆனா இப்ப... நிற்க. இங்கு தான் பிரச்னையே தொடங்குகிறது. நியாயமாக போலீஸைப் பார்த்தால் ஒரு இந்தியக் குடிமகன் என்ன செய்யவேண்டும். பயந்து ஓட வேண்டும் என்பது எழுதி வைக்காத விதிமுறை. போலீஸைக் கண்டு பயப்பட நீங்கள் குற்றம் செய்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்படாமல் இருக்க விருப்பப்படுபவராகவும் இருக்கலாம். அப்படி பயந்து ஒளிந்த போலீஸைக் கண்டும் வணக்கம் வைக்காமல் ஒத்தப்படி வீடு கட்டி ஆடிக்கொண்டே சென்றால் நாளை போலீஸின் அதிகாரம் என்பது எப்படியானதாக இருக்கும். இந்தியாவின் ஒவ்வொரு மாநில முதல்வரும் ஏன் காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பது இப்போது புரியும். நினைத்த நேரத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய காவல்துறையைக் கண்டு பயப்படாத ஒரு தலைமுறையை வளர்க்க எந்த மாநில அரசும் விரும்பாது. அதிலும் சொந்தக் காரணமோ, லாபமோ இல்லாமல் இங்கு கூடிய பெருந்திரள் அதிகார வர்க்கத்துக்கு மிகவும் ஆபத்தானது. ஆனால், அந்த ஆபத்தின் வேர்வரை சென்று ஆராய்ந்திருந்தால் காவல்துறை இரத்தக்கரையுடன் கூடிய லத்திக்களுடன் பிடிபட்டிருக்காது.
எல்லாவற்றையும் பார்க்கும் ஒருவன் இருக்கிறான். அதர்மம் அத்துமீறும்போது தண்டிக்க வருவான் என்று உலகின் பல வேதங்களும், மார்க்கங்களும் போதிக்கின்றன. இந்த நூற்றாண்டின் அந்த எல்லாவற்றையும் பார்க்கும் ஒருவன் ‘ஸ்மார்ட் ஃபோன்’ (The Big B is watching). ஆம், அவன் தான் இத்தனைப் பெரிய பெருந்திரள் கூட்டத்தை கூடவைத்திருக்கிறான். வெறுமெனே ஃபேஸ்புக், வாட்ஸப், டிவிட்டர் என இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் தகவல் பகிர்வு சேவையை குறைத்துவிடத் தேவையில்லை. ஒரு ஸ்மார்ட்ஃபோன் மூலம் பயன்படுத்தக்கூடிய அத்தனை அப்ளிகேஷன்களையும் இந்தப் போராட்டம் தனதாக்கிக்கொண்டது.

போராட்டக்களங்களின் நிலை மற்ற இடங்களுக்குத் தெரியக்கூடாது என பவர்-கட் செய்து மிக மோசமான எதிர்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இவர்கள் மீடியாவை நம்பாமல் சமூக ஊடகங்களை நம்பி சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்ததும் அந்த முயற்சியைக் கைவிட்டனர். ஏன் போராட்டக்காரர்கள் கூட சிக்னல் கிடைக்காதபோது, மொபைல் சிக்னல் ஜாமர்களைப் பயன்படுத்தினார்கள் என்று பேசினார்கள். ஆனால், உண்மை வேறு. சென்னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப மொபைல் கனெக்‌ஷனுக்கான அலைவரிசைகள் கொடுக்கப்படவில்லை. கணிசமாக அந்தப் பகுதியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டே மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது சிக்னல் சக்தியை அவர்களது டவர்களில் பொருத்துகிறார்கள். இவர்களைவிடவும் மேம்பட வேண்டுமென்பதால் Jio நெட்வொர்க் மெரினாவில் சிறப்பு டவர் ஒன்றை வைத்திருக்கிறது. இதனால் தான் மற்ற நெட்வொர்க்குகள் கைவிட்டபோதும், Jio தகவல் பரிமாற்றத்துக்கு உதவியது. சரி விஷயத்துக்கு வருவோம்.
தொழில்நுட்பங்கள் இந்த அளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையில், போலீஸ் நினைத்தபடி உள்ளே புகுந்து அடித்தது எந்த அளவுக்குத் தவறு என்பதை எல்லாவற்றையும் பார்க்கும் ஒருவரான ஸ்மார்ட்ஃபோன், சமூக வலைதளங்களில் உலாவும் வீடியோக்களின் மூலம் நிரூபித்திருக்கிறது. இந்தமாதிரி வீடியோக்கள் இதுவரை போலீஸுக்குத் தான் உதவியாக இருந்துவந்தன. சுவாதி கொலையில் ராம்குமாரை அடையாளம் காட்டியதை உதாரணமாகச் சொல்லலாம். அவர்களை பாதித்தது என்றால் நூறு, இருநூறு லஞ்சம் வாங்கினார்கள் என்று என்ன ஆனது என்றே தெரியாத வழக்குகளைக் கைகாட்டலாம். இப்படி இருந்த ஒரு தொழில்நுட்பம் இப்போது முழுவதுமாக எதிராக மாறியிருக்கிறது. ஒரு நாட்டின் அல்டிமேட் சக்தியாக தங்களை மீறி ஒரு இனம் வளர்வதை யாராலும் பொருத்துக்கொள்ளமுடியாதல்லவா? பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர்களே, மஃப்டியில் கலந்துகொண்டு போராட்ட கோஷம் எழுப்பிய முதல் போராட்டமும் இதுதான் அல்லவா?

ஜாதிகளை உடைத்தது, பாலின வேறுபாடுகளைத் துறந்தது, ஏழை - பணக்காரன் என்ற உயர்வு - தாழ்வுகளை அறுத்தது என இந்தப்போராட்டம் செய்த சாதனைகளில் மிக முக்கியமானது அதிகாரத்தின் மீதான பயத்தை உடைத்தது. எங்களை அடிக்காம விட்டதால உங்க பதவிக்கு பிரச்னைன்னா சொல்லுங்க. நாங்க போராடி வாங்கித் தர்றோம் என பாசத்தால் மாணவர் படை வெளியிட்ட கோஷத்தை அவமானமாகக் கருதியிருக்கக் கூடாது தான். ஆனால், அதன் வெளிப்பாடு தான் அத்தனை மாவட்டத்திலும் கொடுங்கனவாய் போகாதா? என நினைக்கக்கூடிய கொடூரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இந்த டெக்னாலஜி நம்மை என்னச் செய்துவிடப்போகிறது என போலீஸ் தரப்பு நினைத்தது தான் இன்று வீடியோக்களாக மாறி அவர்களுக்கு தலைவலியைக் கொடுத்திருக்கின்றன. அதேமாதிரி, சமூக வலைதளம் இருக்கிறது என்ற தைரியத்தில் இளைஞர்களும் சரியான கொள்கை இல்லாமல் இறங்கிவிடக்கூடாது. போராட்டம் தொடங்கிய இரண்டு நாட்களில் கோடிக்கணக்கான பதிவுகள் ஃபேஸ்புக்கில் அப்லோட் ஆகியிருந்தபோதும், ஜல்லிக்கட்டு பற்றி ஆராயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள் என்று தான் டிரென்டிங்கில் காட்டிக்கொண்டிருந்தது ஃபேஸ்புக். மாநில அரசு மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இருக்கிறது எனத் தெரிந்த ஒருமணிநேரத்தில் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு மில்லியன் பதிவுகள் இருக்கின்றன என்று தன்னை மாற்றிக்கொண்டது ஃபேஸ்புக். இப்படியெல்லாம் இல்லையென்றால், ஃபேஸ்புக்கின் நெட் நியூட்ராலிட்டி என்பது இந்தியாவில் கனவாகவே போய்விடும் அல்லவா?

இத்தனை எதிர்ப்புகள் இருந்தபோதும் மாணவர்களை, இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை என அனைவரையும் திரளவைத்தது அவர்களது அடிப்படைக் கொள்கை. அவர்களது சிந்தனை ஒரே நிலையில் இருந்தது தான். எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும் என்றதும் கருப்புச் சட்டையை உடுத்தச் சொல்லி அவர்களுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. அதிக அளவிலான கருஞ்சட்டைப் போராளிகளை இந்த காலத்தில் வேறு எங்கும் பார்க்கமுடியாது. உருகி க்கீழேபோகும் மெழுகுவர்த்தி வேண்டாமென, மேல்நோக்கி எரியும் மொபைல் டார்ச்சுகளை பார்த்தபோது பெரியார் நினைவிடங்களில் தீப்பந்தத்தைப் பிடித்து நின்ற கைகள் தான் நினைவுக்கு வந்தன. புத்தகத் திருவிழா என்றால், பெரியார் இன்றும் என்றும் புத்தகத்தை அதிக அளவில் வாங்குகிறார்கள். எதிர்ப்பைக் காட்ட கருஞ்சட்டை அவசியமாகிறது. இவையெல்லாம் மக்கள் பெரியாரை ஆதரிக்கிறார்கள் என்பதற்கான தரவுகள் அல்ல. மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரியார் விரும்பியதும் அதைத்தான்.

என் புத்திக்கு எட்டியதை எடுத்துக் காட்டினேன். அதில் சரியானது எனத் தோன்றியதை ஒப்புக்கொண்டு அதன்படி நடக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் சொல்லுவதில் பிசகிருந்தால் என் அறியாமைக்குப் பரிதாபப்படும் படியும் கேட்டுக்கொள்கிறேன் - பெரியாரின் ‘குடிஅரசு’ கட்டுரை (28.5.1949)
-சிவா  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: