புதன், 25 ஜனவரி, 2017

மெரினா எழுச்சி: ஒரு வரலாற்று துரோகத்தின் நேரடி சாட்சியம்!

மெரினா‘‘மெரினாவின் கடைசி நிமிடங்களைக் கடந்துவர இன்னும் இயலவில்லை. இன்னும் அந்தக் கிழிந்த கால்சட்டையைக் கழற்றாமல் அமர்ந்திருக்கிறேன். அதிகாரிகள் நடத்திய நாடகங்கள், கண்முன் வெளிப்படையாகச் செய்த சூழ்ச்சிகள், சினிமாவைவிட அதிபயங்கரமாக இருந்தன. ஓர் அதிகாரக்குரலின் கூச்சலில் விடிந்த அந்தப் பொழுதில் கண் விழிப்பதற்குள் விழுந்தது அடி. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மீண்டும் இரு அடிகள். அனைத்து இளைஞர்களும் பொதுமக்களும் கடலை நோக்கி ஓடத் தொடங்கினோம். லத்தியுடன் துரத்திக்கொண்டே வந்தனர் போலீஸ்காரர்கள். சேலைக்கட்டி ஓட முடியாமல் சில பெண்கள் தடுமாற, அவர்களை ஒரு பொம்மைப்போல் தூக்கி வீசினர் காவல் துறையினர். நான்கு திசைகளிலும் சிதறி ஓடினோம்; கடலுக்குள் இறங்கினோம்; காலில் விழுந்து மன்றாடினோம். சில மாணவர்கள் அப்படியே கடல் அலைகளுக்குள் மூழ்கினார்கள். இறந்துவிடுவார்களோ என்று பயந்து பின்வாங்கியது காக்கிச் சட்டை. அவர்களை மீட்டுவந்து மனிதச் சங்கிலி அமைத்தோம்; ‘போலீஸ் வெளியேற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தோம்; பெண்களையும் குழந்தைகளையும் எங்கள் மையத்தில் வைத்தோம்.

நிலைமை சற்றுச் சீரான பிறகு சுற்றிலும் அழுகுரல்கள், தேடல்கள். ‘தனது நண்பரின் கை முறிக்கப்பட்டு அவர் துடித்தபோதிலும்... தொடர்ந்து அடித்தனர் போலீஸார் என்றும், சில மாணவர்கள்... அவரை, தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர் என்றும், அடிபட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கரு கலைந்துவிட்டது’ எனவும் அழுதுகொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 8 ஆயிரம் மக்கள் இருந்தோம். கூட வந்த உறவுகள் எங்கே எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருக்க, இங்கிருந்து கலைந்துசென்ற மாணவர்களில் சிலர் பட்டினம்பாக்கம் வழியாக மெரினாவை நோக்கி ஓடிவந்தனர். அவர்களைத் தடுக்க போலீஸார் லத்திகளுடன் ஓடினர். மாணவர்களுள் சிலர், கடலில் குதித்து நீச்சல் அடித்து எங்களுடன் வந்து சேர்ந்தனர். மற்றவர்கள்ம் அப்படியே நின்றனர். மேலும், சிலர் விவேகானந்தர் இல்லத்தின் வலப்புறம் இருந்து ஓடிவந்தனர். இந்தத் தடியடி சம்பவத்தை அறிந்த குப்பத்து மக்களும் மீனவர்களும் துறைமுகச் சாலையின் வழியே வந்து போராட்டக் குழுவோடு இணைந்தனர். 9 மணியளவில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடிவிட்டோம். நேரம் ஆக ஆக... பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக கழிப்பறை தேடி அலைமோதினர்.
சில பெண்கள், காவல் துறையினர்களிடம் சென்று பையோ டாய்லெட்டை உபயோகிக்க அனுமதி கேட்டனர்; மறுத்துவிட்டனர். ‘அதை எடுத்துவந்து இங்கே வைத்துக்கொள்ளலாம்’ என்று எங்களுள் சிலர் முன்னேற... லத்திகளுடன் ஓடி வந்தனர் போலீஸார். வேறு வழியின்றிச் சில பெண்கள் அப்படியே வயிற்றைப் பிடித்தபடி அப்படியே  அமர்ந்துகொண்டனர். இதைப் பார்த்த மாணவர்கள் உடனே, கடற்கரை மணலில் பெரிய குழிதோண்டி... தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்களையும் துணிப் பைகளையும் கிழித்து, கட்டைகள் வைத்து கழிப்பறை கட்டத் தொடங்கினர். இதைக் கண்ட மீனவ மக்கள், ‘நாங்க தங்குற குடிசை இருக்கு; பொருட்களை எல்லாம் வெளியே எடுத்துட்டோம்; இதைச் சுத்தி துணியைக் கட்டி கழிவறையா பயன்படுத்திக்கோங்க’ என்றனர். நெகிழ்ந்துவிட்டோம். தங்கள் இருப்பிடத்தைக்கூட மாணவர்களுக்காக கழிப்பறையாக மாற்றித் தந்தனர் மீனவர்கள். கழிப்பறை காட்டியதை காணொலியாகப் பதிவுசெய்தோம்.





அந்தக் குடிசையைச் சுற்றி நம் மாணவர்கள் நின்றுகொண்டு, எந்த போலீஸாரும் வராமல் பார்த்துக்கொண்டனர். மாணவர்களுக்காகக் கொண்டுவந்த உணவையும், நீரையும் தடுத்துநிறுத்தி போலீஸார் பிடுங்கி உண்டனர். மிச்சம் இருந்த உணவுகளைக் கழிவறையில் கொட்டினர். இந்தத் தகவல் அறிந்த மீனவர்கள், சிறிது நேரத்தில் உணவு மற்றும் நீருடன் ஒரு பெரிய லாஞ்சு போட்டுடன் அங்கு வந்தனர். கரையில் இருந்த மீனவர்கள் தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு சென்று உணவுகளை நிரப்பிவந்தனர். மேலும், இரண்டு படகுகளில் இருந்து உணவும் நீரும் வந்தது. ‘தம்பி கோட்ரஸ்ல சொல்லிட்டோம். கடனுக்கு டீசல் வாங்கிக்கொண்டு வர்றாங்க. இன்னும் எத்தனை பேருக்கு சாப்பாடு தேவைன்னு சொல்லுங்க தம்பி, எங்க புள்ளைகளுக்கு நாங்க கொண்டு வர்றோம்’ என்று குதூகலித்தனர் மீனவத் தோழர்கள். அவர்களுக்கு பதில் கூறும்முன் போலீஸார் லத்திகளுடன் எங்களை நோக்கி ஓடிவந்தனர்.
மிரண்ட எங்கள் கூட்டத்தினர் அனைவரும் ஒரு வட்டமாகச் சேர்ந்தோம். குப்பத்து பாட்டி ஒருவர், ‘இங்கிட்டு வாங்க புள்ளைகளா, எங்களைத் தாண்டி உங்களை அடிக்கமாட்டாங்க’ என்று சிவப்புச் சீலையை கொடிபோல ஆட்டி பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முன்சென்று நின்றார். ஒன்றுகூடி கோஷமிட்டதனால் ஓடி வந்த காவல் துறையினர் ஒடுங்கி நின்றனர். கலைந்து செல்லச் சொல்லி எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடற்கரைச் சாலையின் பின் இருந்து, கறும்புகை கிளம்பிக் கொண்டிருந்தது. பெரிய தீ விபத்து நடந்ததுபோல இருந்தது. ‘உங்கள் மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். இப்போது நீங்கள் கலைந்து செல்லாவிட்டால் தடியடி நடத்துவோம்’ என்றார் போலீஸ் உயர் அதிகாரி.
கலைத்து சென்ற நம் மாணவர்களுள் சிலர், விவேகானந்தர் இல்லத்தின் வலது புறம் இருந்த கோட்ரஸின் மாடியில் நின்றிருந்தனர். அவர்களுக்கு போன் செய்து விசாரித்ததில், காவல் துறையினர்தான் வண்டிகளுக்குத் தீ வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ‘நம் மாணவர்கள் யாரும் அங்கு இல்லை’ என்று கூறினர். அப்போது, திடீரென காவல் துறையினர் மீது எங்கள் கூட்டத்தில் இருந்த சிலர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இதனால், ஆவேசமான காவல் துறையினரை நாங்கள் தடுத்து நிறுத்தி, செருப்புகளையும் கற்களையும் எறிந்தவர்களைப் பிடித்து அவர்களிடம் ஒப்படைத்தோம். போலீஸாரும், அவர்களைச் சிரித்துக்கொண்டே அரவணைத்துக்கொண்டனர். காரணம், எங்கள் கூட்டத்துக்குள் மஃப்டியில் இருந்த போலீஸார்தான் இந்த அநாகரிகச் செயலை செய்தது. ‘எங்கள்மீது இன்னொரு முறை செருப்புகளோ பாட்டில்களோ விழுந்தால் கண்டிப்பாக தடியடி நடத்துவோம்’ என்றார் உயர் அதிகாரி. எங்கள் மீது தடியடி நடத்தியே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் இருந்து கலவரத்தைத் தூண்ட சில போலீஸார் அங்கு நின்றிருந்தனர். காவல் துறையின் இந்தச் சதியை அறிந்து அனைவரும் அப்படியே தரையில் அமர்ந்தோம். அமர்ந்தவர்களைச் சுற்றி மனிதச் சங்கிலி போட்டு அரணாக நின்றனர் சில மாணவர்கள்.
மெரினா
மேலும், எவரும் காவல் துறையினரை நோக்காமல் கடலை நோக்கியே திரும்பி உட்கார்ந்தோம். எங்கள் கூட்டத்துக்குள் கற்களை போலீஸார் மீது வீசக் காத்திருந்த சில விஷமிகளை மாணவர்களுள் சிலர் வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்களுள் சிலர், போலீஸாருடன் கைகோத்தனர். ‘வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம்’ என குரல் வற்ற கத்திய போராட்டக் குழு, அவ்வளவு அழகாகவும் வழிநடத்திக் கொண்டிருந்தது. அதையும் மீறி போலீஸார் மீது எறியப்பட்ட செருப்புகளையும்... பாட்டில்களையும் நாங்கள் தடுத்தபோதிலும் போலீஸார் எங்கள் மீது தடியடி நடத்தினர். சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் தடியடி நடத்தக் கூடாது என்று தடை வாங்கி வந்தனர். எந்த ஒரு வன்முறையும் நடக்கக் கூடாது என்று அவ்வளவு உறுதியாகத் திட்டம் வகுத்தனர் மாணவர்கள். உச்சிவெயில், தண்ணீர் இல்லாததால் சில மாணவர்கள் மயங்கிவிழுந்தனர். அவர்களை தூக்கிக் கொண்டு ஓடினர், கூட்டத்தினர். தகவல் அறிந்து தண்ணீருடன் ஓடிவந்த சில மாணவர்களைத் தடுத்து, அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடினர் காவல் துறையினர். எங்கள் கண்முன்னே அந்தத் தண்ணீரை... அவர்கள் பகிர்ந்து அருந்தினர். இவ்வளவு வெறியாட்டம் இங்கே நடந்துகொண்டிருக்க, சில நியூஸ் சேனல்களில் - ‘மெரினாவில் மாணவர்கள் கலைந்துசென்றனர். தற்போது தேசியக்கொடியை எரித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்’ என்று செய்திகள் வெளியாகின. அவ்வளவு நாள் எங்களுக்கு ஆதரவளித்தவர்கள் அனைவரும், ‘வெளியேறுங்கள்’ என்று கூறி கைவிட்டார்கள். பிறகு லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் வந்ததும்... தோழர் தியாகு மற்றும் நீதிபதிகள் வந்ததும் நடந்ததும் நாடறிந்ததே...

‘சட்டம் இயற்றப்பட்ட பிறகும்... ஏன் அங்கு அமர்ந்திருந்தீர்கள்’ என்று கேட்கும் அன்பர்களே...
நாங்கள் அவ்வளவு உறுதியாக அங்கே அமர்ந்திருந்ததற்கான காரணமும்... எங்கள் கேள்விகளும் இதுதான்...
மெரினா
             
அன்று மாலை எங்களிடம் பேச வந்த நீதிபதி ஹரி பரந்தாமன், ‘சற்றுநேரத்துக்கு முன்தான் எங்களுக்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கானஅதிகாரபூர்வமான அறிக்கை வந்தது’ என்றார். ‘சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான எந்த அறிவிப்பும் இல்லாமல் நாங்கள் எப்படிக் கலைந்துசெல்ல முடியும்’ என்று காவல் துறையினரிடம் கேட்டதற்கு, ‘நீங்கள் செல்லவில்லை என்றால்... தடியடி நடத்துவோம்’ என்றனர். ‘சரி, மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். அவகாசம் கொடுங்கள்’ என்று மன்றாடினோம். இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்திருந்தால், மக்களுக்கு அதைப் புரியவைத்து கலைந்து சென்றிருப்போம். பத்து நிமிடம்கூட அவகாசம் கொடுக்காமல் வேண்டுமென்றே அடித்துவிரட்டினார்கள், போலீஸார்.
அத்தனை மக்களும் அங்கு அமர்ந்திருக்க... கலவரம் செய்தது யார் என்று உங்களுக்குத் தெரியாதா? எந்த ஒரு வெற்றியும் இன்றி, 6 நாட்கள் வெந்துகிடந்த இந்த மாணவர்கள் எப்படி கலைந்துசெல்வர்? எங்களுக்குள் இருந்த விஷமிகளை நாங்கள் தடுத்துவிட்டோம். கலவரத்தை உண்டு பண்ணியது காவல் துறைதான் என்பதும் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இன்று அந்தக் குப்பத்து மக்கள் மீதும்... மீனவர்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது காவல் துறை. இப்படியொரு வெறியாட்டத்தை காவல் துறையினரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அந்த மக்களுக்கோ, கைது செய்யப்பட்ட எங்கள் மாணவர்களுக்கோ அநீதி இழைக்கப்படுமெனின்...மீண்டும் ஒரு போராட்டம் நடக்கும். நாளை காவல் துறையினருக்கு ஓர் அநீதியெனில்கூட, மீண்டு வர போராட்டம் நடக்கும்!’’
- பா.நரேஷ்
படங்கள்: பா.பிரபாகரன் விகடன் 

கருத்துகள் இல்லை: