புதன், 25 ஜனவரி, 2017

போலீஸ் அடக்குமுறையை கண்டித்து 28-இல் ஆர்ப்பாட்டம்: மக்கள் நலக் கூட்டியக்கம் அறிவிப்பு

காவல் துறையைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டியிக்கத்தினர் ஜனவரி 28-இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சென்னை தியாகாராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் ஒருவாரம் போராடியோர் மீது காவல் துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

ஜனநாயக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தமிழகமெங்கும் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, தீ வைப்பு சம்பவங்களை நடத்தி, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்களை ஓட, ஓட விரட்டித் துரத்தி காவல் துறை அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்தக் கொடூரத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், தொடர் கைது நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலும், கோவையில் திருமாவளவன் தலைமையிலும், மதுரையில் இரா.முத்தரசன் தலைமையில் ஜனவரி 28-இல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
உண்மை அறியும் குழு: உண்மை விவரங்களை வெளிக் கொண்டுவரும் வகையில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் உண்மை அறியும் குழு விசாரித்து, அறிக்கை வெளியிடப்படும் என்றனர்.tamiloneindia

கருத்துகள் இல்லை: