திங்கள், 7 ஜூலை, 2014

பச்சையப்பன் கல்லூரி ! கழிவறையே இல்லாமல் 6 ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் ஒரே கல்லூரி

சென்னையில் கல்லூரி என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பச்சையப்பன் கல்லூரிதான். ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முக்கியமான ஒன்றுதான் பச்சையப்பன் கல்லூரி.
அங்கு படிக்கும் மாணவர்களை ரவுடிகள் என்றும் பொறுக்கிகள் என்று போலீசும் ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு சித்தரித்து கொண்டிருக்கும் வேளையில், அக்கல்லூரி மாணவர்களோ மக்களின் பிரச்சினைகளுக்காகவும் தங்களின் கல்வி உரிமைக்காகவும் அன்று முதல் இன்று வரை குரல் கொடுத்து வருகின்றார்கள். அப்படித்தான் தங்களுடைய கல்வி உரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக, “காசுள்ளவனுக்கு ஒரு கல்வி, காசில்லாதவனுக்கு ஒரு கல்வி” என்ற புதிய மனு நீதிக்கு எதிராக தங்களுடைய போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு கல்வியைக் கொடுத்த கல்லூரி, எத்தனையோ அறிஞர்கள் படித்த கல்லூரி, வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரி என்று எத்தனை பெருமைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் விட பெரிய பெருமை இருக்கிறது என்று அறிவித்து இருக்கிறார்கள் அக்கல்லூரி மாணவர்கள்.
ஆம், கழிவறையே இல்லாமல் 6 ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் ஒரே கல்லூரி என்ற பெருமை.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்] கழிவறை இல்லை, குடிப்பதற்கு குடிநீர் வசதியில்லை, கேண்டீன் வசதி இல்லை, ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை . இந்த அடிப்படை உரிமைகளை கேட்கக்கூடாது என்பதற்காகவே கல்லூரியில் போலீசு குவிப்பு என தொடரும் இந்த கல்வி உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் , புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தலைமையில் 04.07.14 அன்று காலை 11 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். சுமார் 500 மாணவர்கள் ரூட் வேறுபாடின்றி கலந்து கொண்ட இந்த உள்ளிருப்பு போராட்டம் 1 மணி நேரம் நீடித்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
15 நாட்களுக்குள் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான வேலைகளை தொடங்குவதாக கல்லூரி முதல்வர் வாக்களித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் அதே அரசுதான் மாணவர்களை ரவுடிகளாக பொறுக்கிகளாக சித்தரிப்பது எவ்வளவு பெரிய அநியாயம். அடிப்படை வசதிகளை செய்துதர போராடும் அந்த மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதானே நம் முன் உள்ள ஒரே நியாயம்.
அனுப்புதல்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை.
பெறுதல்
கல்லூரி முதல்வர்,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
பொருள்
பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிடவும் ஆய்வகம், குடிநீர், கழிவறை, கேண்டீன், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளை உடனே செய்திடவும் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சிகளை உடனே நடத்திடக் கோருவது தொடர்பாக…
அய்யா,
சென்னையில் கல்லூரி என்றாலே முதலில், நினைவுக்கு வருவது நமது பச்சையப்பன் கல்லூரிதான். ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட இக்கல்லூரியின் மூலமாக படித்து உயர் நிலைக்கு சென்றவர்கள் பலர் என்பது தாங்கள் அறிந்ததே. அப்படி ஏழை எளியோர்களை ஏற்றம் காண வைத்த கல்லூரி, மாபெரும் தலைவர்களை உருவாக்கிய கல்லூரி, வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கல்லூரி என்றெல்லாம் புகழப்பட்ட நம் கல்லூரியின் நிலைமை என்ன?
ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வகங்கள் போதிய அளவில் இல்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, கழிவறை இல்லை, கேண்டீன் வசதி இல்லை. இப்படி மோசமான நிலையில் கிடக்கும் நமது கல்லூரியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு.
பணம் படைத்தவர்களுக்கு வசதியான சூழ்நிலையில் கல்வி வழங்கப்படுவதும், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கக்கூடிய, அதுவும் ஏழை மாணவர்கள் படிக்கக் கூடிய நம் கல்லூரியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய அநியாயமாகும்.
மாணவர்களின் அனைத்து திறன்களையும் வெளிக்கொணர்ந்து, அவர்களை திறமையானவர்களாக உருவாக்கக்கூடிய அளவில் தான் ஒரு கல்லூரி என்பது இருக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு கலாச்சார விழாக்களை நடத்த வேண்டும் என்பதும் தாங்கள் அறிந்ததே. ஆனால் அவ்வாறு நமது கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.
ஆகவே மாணவர்களுக்கு படிக்கின்ற சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமெனில், கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிடவும் ஆய்வகம், குடிநீர், கழிவறை, கேண்டீன், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளை உடனே செய்துதர வேண்டும் என்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நமது கல்லூரியில் நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி !
தங்கள்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்

கருத்துகள் இல்லை: