ஹரியாணாவின் இளைஞர்கள் அனைவரும் கட்டாயமாக மணமுடிக்க
பிஹாரில் இருந்து மணப்பெண்களை அழைத்து வருவோம்’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய
கருத்தால், பாஜக விவசாயிகள் பிரிவின் தேசிய தலைவர் ஒ.பி.தன்கருக்கு சிக்கல்
ஏற்பட்டுள்ளது. இதற்காக, அவர் மீது முசாபர்பூரின் நீதிமன்றத்தில்
செவ்வாய்கிழமை வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹரியாணாவின் நர்வானாவில் பாஜகவின் விவசாயிகள் மகாசபை
கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தன்கர், பிஹாரின் எதிர்கட்சித்
தலைவரான சுசில்குமார் மோடி தம் நண்பர் எனவும், அவர் மூலமாக
இங்குள்ளவர்களுக்கு பொருத்தமான மணப்பெண்களை பிஹாரிலிருந்து கொண்டு
வருவதாகவும் தெரிவித்தார். இதை தம் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஒவ்வொரு
கிராமத்திலும் தெரிவித்ததாக அவர் மேலும் கூறியிருந்தார்.
பெண் சிசுக்கொலை புகார்களில் அதிகமாக சிக்கியுள்ள ஹரியாணாவின்
இளைஞர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 2011-ன் அரசு
புள்ளிவிவரப்படி 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் என அவப்பெயரை ஹரியாணா
கொண்டுள்ளது. தன்கரின் பேச்சால் பிஹாரில் சர்ச்சை கிளம்பியது.
சுசில்குமார் மோடி மீதும் வழக்கு
இதை கண்டிக்கும் வகையில் தன்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
முசாபர்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரேம்குமார் பாஸ்வான்
என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். இதை நீதிமன்றம் வரும் 17-ம் தேதி
விசாரணைக்கு எடுக்க உள்ளது. இதே பிரச்சினையில் பிஹாரின் எதிர்க்கட்சித்
தலைவரான சுசில்குமார் மோடி மீதும் தனியாக ஒரு வழக்கை பிரேம்குமார் பாஸ்வான்
தொடுத்துள்ளார்.
பிஹார் சட்டசபையில் அமளி
இந்த பிரச்சினையை ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ்
எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் கடந்த திங்கள்கிழமை கிளப்பி, தன்கரை கைது
செய்ய வேண்டும் என அமளி செய்தனர்.
தன்கரை கைது செய்ய ராப்ரி வலியுறுத்தல்
இது குறித்து ராஷ்டிரீய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ. ராப்ரி தேவி, ‘இதை
பாஜகவினர் சமாளிப்பது ஆச்சரியமாக உள்ளது. இது பிஹார் பெண்களின் மானம்
மற்றும் மரியாதை மீதான தாக்குதல். இங்குள்ள அரசியல்வாதிகள், போலீஸார்,
பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் உள்பட பிஹார்வாசிகள் அனைவருக்கும் ஏற்பட்ட
அவமரியாதை இது. தன்கர் கைது செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.’
எனத் தெரிவித்தார்.
காதை அறுப்பதாக லாலு மிரட்டல்
இதைக் கண்டித்த ராப்ரியின் கணவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு
பிரசாத் யாதவ், பிஹாரை அவமானப்படுத்தினால் காதை அறுத்து விடுவதாக
மிரட்டினார். இவருடன் சேர்த்து பிஹாரின் அனைத்து கட்சித் தலைவர்களும்
தன்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்காக அவர்
நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் பாஜகவிடம் கோரி
வருகின்றனர்.
இதற்கு பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுசில்குமார் மோடி, தன்கரின் பேச்சை
பத்திரிகைகள் திரித்து உள்நோக்கத்துடன் வெளியிட்டிருப்பதாக புகார்
கூறியுள்ளார். ஹரியாணாவின் முதல் அமைச்சரான பூபேந்தர்சிங் ஹுடாவின் மகன்
தீபேந்தர்சிங் ஹுடாவை எதிர்த்து ரோஹதக் தொகுதியில் மக்களவை தேர்தலில்
போட்டியிட்டு தோற்றவர் தன்கர். tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக