சனி, 12 ஜூலை, 2014

அடுக்குமாடி கட்டடங்களுக்கு ஒழுங்கு முறை சட்டம் இல்லை

போரூர்: ''முறைகேடாக, கட்டடம் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஒழுங்கு முறை படுத்தவும் சரியான சட்டமும் விதி முறைகளும் இல்லை. அத்தனை விதி முறைகளையும் நாம் அமைப்போம்,'' என, ஒருநபர் கமிஷன் தலைவர் ரகுபதி கூறினார்.கடந்த மாதம், 28ம் தேதி, சென்னை, மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த, 11 மாடி அடுக்குமாடி கட்டடம் குறித்து விசாரிக்க, ஒருநபர் கமிஷனை, தமிழக அரசு அமைத்தது.நேற்று காலை, 9:00 மணியளவில், அந்த கமிஷனின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி, இடிந்த கட்டடத்தை ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த பெரும் சம்பவம் எவ்வாறு நடந்தது, யார் கவனக்குறைவு இதற்கு காரணம் என கண்டறியவும், இனி வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க, என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. தினமலர் எத்தனையோ முறை பத்திர பதிவு அலுவலங்களில் நடக்கும் லஞ்ச லாவநியன்களை எழுதி, எழுதி ஓய்ந்து விட்டது. பின்பு எப்படித்தான் அரசாங்கம் லஞ்சம் வாங்கும் அலுவலர்களை திருத்த போகின்றது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் நூற்றுகணக்கில் அப்பாவிகள் பலியான பின்புதான் அரசாங்கம் தூக்கத்தில் இருந்து எழுமா?


இந்த கமிஷன், அனைவரின் கருத்துகளையும் அறிந்து, பரிந்துரையை அரசுக்கு வழங்கும்.இந்த சம்பவம் நடந்த உடன், போலீசார் விசாரணையை துவங்கிஉள்ளனர். அதில் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும், விசாரணைக்காக, ஒரு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.கட்டட விதிமுறைகள் மீறப்பட்டதா, கட்டடம் ஒழுங்காக கட்டப்பட்டதா, கட்டடத்தின் அடித்தளம் சரியாக கட்டப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய, தொழில்நுட்ப குழு அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அவர்களின் அறிக்கையும் பெற வேண்டும்.மேலும், சி.எம்.டி.ஏ.,வில் கட்டட நிறுவனம் அளித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும். கட்டியுள்ள கட்டடத்தில் இருந்து, கம்பி, சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள், பரிசோதனைக்காக ஆய்வுக் கூடம் அனுப்பப்பட்டுள்ளன.இத்தனையும் பார்த்துவிட்டு, இதில் என்ன முறைகேடு நடந்துள்ளது என ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்கள், இந்த விசாரணை கமிஷனில் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், இந்த கமிஷன் எந்த இடத்தில் அமர்ந்து விசாரணை நடத்தப்போகிறது, எவ்வாறு நடத்தப்போகிறது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.


ஒழுங்கு முறைப்படுத்த...:

சென்னையில், இது போன்ற அடுக்கு மாடி கட்டடங்கள் அதிக அளவில் முளைத்து விட்டன. இது போல், முறைகேடாக கட்டடம் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஒழுங்கு முறை படுத்தவும் சரியாக சட்டமோ, விதி முறைகளோ, வழி முறைகளோ இல்லை என, பரவலாக பேசப்படுகிறது. அத்தனை விதி முறைகளையும், வழி முறைகளையும் நாம் அமைப்போம். இந்த பேரிடர் குறித்து, இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.இடிந்த கட்டடத்தை, தொழில்நுட்ப குழு ஆய்வு செய்த பின், இடியாத கட்டடத்தை, இடிப்பதா என முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


நீதிபதியிடம் மக்கள் புகார்:

அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை ஆய்வு செய்ய வந்த நீதிபதி ரகுபதியிடம், மவுலிவாக்கம், ராஜராஜ நகர் பகுதி மக்கள் புகார் மனுக்களை அளித்தனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:கட்டட விபத்தை ஆய்வு செய்ய இங்கு வரும் அதிகாரிகள் யாரும், இந்த கட்டடத்தின் பின்னால் உள்ள எங்களை கண்டுகொள்வதில்லை.இந்த விபத்தில், மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.மழை, காற்று அடிக்கும் போது, பயத்துடன் இருக்க வேண்டியுள்ளது. மேலும், கட்டடம் இடிந்த பகுதியில் இருந்து துர்நாற்றமும் வீசுகிறது.மேலும், எங்களை, பாதுகாப்பு காரணமாக அங்கிருந்து மாறச் சொல்கின்றனர், ஆனால், எப்போது திரும்பி வருவது என்பதை கூற மறுக்கின்றனர்.இந்த கட்டடத்தை சுற்றியுள்ள, எங்கள் கோரிக்கையையும் அரசு கண்டுகொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். dinamalar.com

கருத்துகள் இல்லை: