புதன், 9 ஜூலை, 2014

சரவணன் மீனாட்சி சீரியல் திருமண காட்சியால் இன்ஸ்பயர் ஆகி நிஜ தம்பதிகளான செந்தில் ஸ்ரீ ஜா ! வாழ்த்துக்கள் !


சரவணன் மீனாட்சி’ தொடரில் ஜோடியாக நடித்த ‘மிர்ச்சி’ செந்தில் - ஸ்ரீஜா இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த புதன்கிழமை திருப்பதியில் ரகசியமாக நடந்துள்ளது.
வானொலி தொகுப்பாளராக (ஆர்.ஜே.) தன் பணியைத் தொடங்கிய ‘மிர்ச்சி’ செந்தில், ‘சரவணன் மீனாட்சி’ சின்னத்திரை தொடரில் சரவணனாக நடித்து பிரபலமானார். தற்போது சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். அவரது ஜோடியாக அந்த தொடரில் மீனாட்சி கேரக்டரில் நடித்தவர் சின்னத்திரை நடிகை ஸ்ரீஜா. இவர் கேரளாவின் திருவல்லா பகுதியை சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் காதலர்களாகவும், திருமணத் தம்பதிகளாகவும் நடித்திருந்தனர்.
நிஜத்திலும் இவர்கள் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்ததாகவும், இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவின. இதை இருவருமே மறுத்து வந்தார்கள்.
இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த புதன்கிழமை திருப்பதி கோயிலில் திருமணம் செய்துகொண்டது தற்போது தெரியவந்துள்ளது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதுபற்றி செந்தில் கூறியதாவது, "சரவணன் மீனாட்சி சீரியலுக்காக நாங்கள் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டோம். இதை அப்போது ஸ்ரீஜா குடும்பத்தினர் அவ்வளவாக விரும்பவில்லை. சீரியல் என்றால் அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே. விளம்பர புரமோஷனுக்காக, நிஜத்தில் நடப்பதுபோலவே திருமணம் நடத்த வேண்டுமா என்றார்கள். ஆனால், அப்போதெல்லாம்கூட எங்களுக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை. நாளாவட்டத்தில், ‘நிஜமாகவே நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் என்ன?’ என்று நண்பர்களும் யூனிட்டிலும் கேட்க ஆரம்பித்தார்கள். பின்னர், எங்கள் வீட்டார் மட்டுமின்றி, ஸ்ரீஜாவின் குடும்பத்தினரும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். எங்களுக்குள் ஆரம்பத்தில் இருந்தே காதல் என்று எதுவும் இல்லை. ரசிகர்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது.
எளிமையாக திருப்பதியில் திருமணம் செய்துகொண்டோம். பின்னர், திருவல்லாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினோம். சம்பிரதாய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, முறைப்படி அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்றிருந்தோம். அதற்குள், ஃபேஸ்புக், ட்விட்டரில் திருமண போட்டோக்களை நண்பர்கள் வெளியிட்டுவிட்டனர். வேறுவழியின்றி, அதே நேரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் திருமணத் தகவலை தெரிவிக்கிறோம். சீரியலில் ஜோடியாக நடித்த நாங்கள் சீரியஸாகவும் ஜோடியாக மாறி வாழ்க்கையை சட்டென்று தொடங்கிவிட்டோம்." என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: