மோடி அரசுக்கு கிடைக்கும் ஏகாதிபத்திய நாடுகளது வரவேற்பின் பின்னே இத்தகைய மல்டி பில்லியன் டாலர் வியாபாரமே பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. இது தெரியாத தேசபக்த குஞ்சுகள், பிரான்சு நாடு போட்ட சாட்டிலைட் பிச்சையை வைத்து வல்லரசு என்று விண் நாண சிரிக்கிறார்கள்
டந்த ஜூன் மாதம் 30-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஐந்து செயற்கைக்கோள்கள் இந்தியாவின் PSLV C-23 விண்கலத்தால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் செயற்கைக்கோள்கள். இதற்காக மோடி, சிறீ ஹரிகோட்டாவுக்கு வந்ததும், செயற்கைக்கோள்கள் விண்ணில் சென்றதை கண்டுகளித்ததும் ஊடகங்களின் முக்கிய செய்திகளில் இடம்பிடித்தன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்திய செயற்கைக்கோள்கள் பிரெஞ்சு விண்கலன்களில் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி இன்று இந்தியா அயல்நாடுகளின் செயற்கைக்கோள்களை அனுப்பும் நிலைக்கு முன்னேறியது ஊடகங்களில் மெச்சப்பட்டது. மோடியும் இந்த மாற்றத்தை தனது கொள்கைகளான வளர்ச்சி, வேகம், திறனுடன் ஒத்துப் போயிருப்பதாக பெருமிதப்பட்டுக் கொண்டார்.

பி.எஸ்.எல்.வி
பி.எஸ்.எல்.வி – இந்திய  ‘வல்லர’சின் சாதனை
இந்திய விண்கலன்கள் பிரஞ்சு மற்றும் சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை ஏற்றி சென்ற அதே நாளில் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சண்முகம் ஆகியோர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு அடுத்த நாள் அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் சுஷ்மாவை சந்தித்தார். இவை மக்களின் கவனத்தை ஈர்க்காத வண்ணம் துணுக்கு செய்திகளாக ஊடகங்களில் வெளிவந்தன.
மட்டுமல்லாமல், இந்த மாதத்தின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி புது டில்லி வர இருக்கிறார். பிரிட்டன் தனது இரண்டு முக்கிய அமைச்சர்களை – வெளியுறவு மந்திரி வில்லியம் ஹாக் மற்றும் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ன் ஆகியோரை டில்லிக்கு அனுப்புகிறது. இப்படி ஐ.நாவின் நிரந்தர உறுப்பு நாடுகள் (P5 நாடுகள்) அனைத்தும் இந்தியாவை ஒருசேர காதலித்து திணறடிப்பதன் காரணம் என்ன?
இது வர்த்தகம், முதலீடு என்ற வழக்கமான சொல்லாடல்களில் புரிந்து கொள்ளத்தக்க ஒன்றல்ல. அதற்கும் மேலாக பெறுமதி கொண்ட ஒன்று என்பது மட்டும் திண்ணம். ஆம்! இந்த நிலவறை சந்திப்புகள் பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஆயுத வியாபார கொள்ளைக்காக நடத்தப்படுகின்றன. உதாரணமாக, மராட்டியத்தின் ஜெய்தாப்பூரில் 9,900 மெகாவாட் அணுமின்சார உற்பத்தி திறன் கொண்ட அணுஉலை ஒன்றிற்கு பிரான்ஸ் ஒப்பந்தம் போடுகிறது. இந்த திட்டத்தின் மதிப்பு 2,000 கோடி டாலர்கள் (சுமார் ரூ 1.2 லட்சம் கோடி).
ஐரோப்பிய செறிவூட்டம் பெற்ற அணுஉலைகள் [European Pressurised Reactor (EPR)] அங்கு அமைக்கப்பட இருக்கின்றன. உலகின் எந்த நாட்டிலும் செயல்படுத்தப்படாத/சோதித்தறியாத புதிய தொழில்நுட்பமான அது இப்போது ஜெய்தாப்பூர் அணுஆலைக்கு வர இருக்கிறது. பிரஞ்சு வெளியுறவு அமைச்சரின் நிகழ்ச்சி நிரலில் ‘பன்னாற்றல் மத்திம தூர போர் விமான விற்பனை’ [MMRCA (Multi Role Medium Range Combat Aircraft )] ஒப்பந்தத்தின்படி 126 போர் விமானங்களை பிரான்சிடமிருந்து இந்தியா பெறும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவும் 2,000 கோடி டாலர் (சுமார் ரூ 1.2 லட்சம் கோடி) மதிப்பு கொண்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி
ஸ்ரீஹரோகோட்டாவில் பி.எஸ்.எல்.வி செயற்கை கோள் ஏவும் நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானி சுரேஷூடன் மோடி
2012-ம் ஆண்டு பிரஞ்சு ஆயுத வியாபார நிறுவனமான டஸால்ட் இந்தியாவுக்கு ஆயுதம் வழங்க முன்வரும் நிறுவனங்களுக்கிடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்றது. எனினும் இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே முறையான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போட்டயில் தோற்ற பிரிட்டனின் யுரோஃபைட்டர் டைஃபூன் (Typhoon) நிறுவனம் தானும் உள்ளே தலை நுழைக்க தலைப்படுகிறது. இதற்காக தான் இரண்டு பிரிட்டிஷ் அமைச்சர்கள் இந்த மாத இறுதியில் இந்தியா வர இருக்கிறார்கள். இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையின் இழுபறியில் மூக்கை நுழைக்க ஆர்வமாக இருக்கிறது, பிரிட்டன்.
எல்லாவற்றிற்கும் மேலாக பாரதமாதாவின் ‘பாடிகாடா’ன மோடி, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்திருப்பதை எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருக்கின்றன, ஏகாதிபத்தியங்கள். அர்ச்சுனனுக்கு வாழ்க்கைப்பட்ட திரவ்பதி பாண்டவர் ஐவருக்கும் சொந்தமானதை போல பாரதமாதாவை பொத்தி பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த ரஷ்யாவின் இடத்தை அனைத்து ஏகாதிபத்தியங்களுக்கும் பகிர்ந்து அளித்துள்ளார், தேசபக்தர் மோடி.
அமெரிக்கா தனது பங்கிற்கு தொலைக்கட்டுப்பாட்டு இயக்க வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பிலும் மேம்பாட்டிலும் உதவுவதாக சொல்லி பாரதமாதாவின் இதயத்தில் புஷ்பாஸ்திரங்களை ஏவுகிறது.
இப்போது சொல்லுங்கள், பிஎஸ்எல்வி ராக்கெட்டில் வெளிநாட்டு செயற்கை கோள் கொண்டு சென்றது கவுரவமா, பிச்சையா?
உலகின் மிகப்பெரும் இராணுவத் தளவாட இறக்குமதியாளராக இந்தியாவை இவர்கள் மாற்றி வருகிறார்கள். ஏழை நாடான இந்தியாவில் மக்கள் பணம் அளப்பரிய முறையில் இராணுவ பட்ஜெட்டில் கொட்டப்படுகிறது. ஏகாதிபத்திய ஆயுத தளவாட நிறுவனங்கள் அனைத்துமே இத்தகைய இறக்குமதியால் மட்டுமே பிரம்மாண்டமான இலாபத்தை அள்ளுகின்றன.
இந்த செய்தி கூட ரஷியா டுடேவில் வந்ததன் காரணம் என்ன? இந்தியாவின்  பாதுகாப்புத்துறை இறக்குமதிக்கான பட்ஜெட்டில் ரசியாவுக்கு பங்கில்லை என்பதே அதன் காரணம். கூடங்குளம் அணுமின்நிலையத்தை சிபிஎம், சிபிஐ ஆதரிப்பதற்கும், ஜெய்தாபூரை எதிர்ப்பதற்கும் ஏகாதிபத்தியங்களின் போட்டி நலனே காரணம். ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்களும் தத்தமது தாயக நாடுகளின் நலனைக் கொண்டே இத்தகைய எதிர்ப்பை தெரிவு செய்கின்றன.
மோடி அரசுக்கு கிடைக்கும் ஏகாதிபத்திய நாடுகளது வரவேற்பின் பின்னே இத்தகைய மல்டி பில்லியன் டாலர் வியாபாரமே பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. இது தெரியாத தேசபக்த குஞ்சுகள், பிரான்சு நாடு போட்ட சாட்டிலைட் பிச்சையை வைத்து வல்லரசு என்று விண் நாண சிரிக்கிறார்கள். முட்டாள்கள் சிரிப்பதற்கு கூட இந்த நாட்டில் உரிமை இல்லையா என்ன?
- சம்புகன்.
ரசியா டுடே கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.
(படங்கள் : நன்றி ரசியா டுடே)